Search This Blog

Sunday, February 7, 2016


யானைகளும் தமிழர்களும்  

உலகம் முழுவதிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல விலங்குகளையே பயன்படுத்தினர். பாலைவனங்களில் ஒட்டகங்கள் போக்குவரத்துக்கு பயன்பட்டன. சில இடங்களில் கழுதைகள் பயன்பட்டிருக்கின்றன.  தமிழர்களை பொறுத்த அளவில் பழந்தமிழர்கள் யானைகளை அதிகம் பயன்படுத்தியதாக பழமையான நூல்களில் காணப்படுகிறது. தமிழர்கள் ஏறிச்செல்லவும், போரிடவும் யானைகளை பழக்கப்படுத்தி வைத்திருந்தனர். யானைகளை பிடிக்க அவை செல்லும் வழியில் பெரிய குழிகளை வெட்டினர். அந்த குழிகளை அடையாளம் காணமுடியாத வகையில் இலை, தழைகளால், கழிகளால் மறைத்து விடுவார்கள். இதனை அறியாத யானைகள் அந்த வழியில் வரும் போது குழிகளில் விழுந்து விடும். குழிகளில் விழுந்த யானைகளை பிடித்து பழக்கி பயன்படுத்தினர். சில பெரிய யானைகள் இவ்வாறு குழிகளில் விழும் போது தந்தத்தை கொண்டு மண்ணை சரித்து தப்பி விடும்.  குழிகளில் விழுந்து தப்ப இயலாத யானைகளை பிடித்து வந்து யானைப்பாகர்கள் பழக்குவர். அவர்கள் கையில் இருக்கும் அங்குசம் கொண்டு யானைகளை அடக்குவார்கள். யானைகளுக்கு கட்டளையிட அதற்கென்று தனி மொழி ஒன்றும் பாகர்களிடம் புழக்கத்தில் இருந்தது. யானைகளை பெரிய கல் தூண்களில் கட்டி வைப்பார்கள். அதற்கு கட்டுத்தறி என்று பெயர். யானைக்கு கரும்பும், நெல்லும், சோற்றுக்கவளமும் உணவாக அளித்தனர். நெய்ச்சோறும் அவ்வப்போது உணவாக அளிப்பார்கள். யானைகள் மீது ஏறிச்செல்லும் போது யானைகளை அழகுபடுத்தி அவற்றின் மீது அமர்ந்து செல்வர். யானையின் நெற்றியில் இருந்து துதிக்கை வரை பொன்னால் செய்த முகப்பட்டத்தை அணிவித்திருப்பர். யானையின் கழுத்திலும் மாலைகளை அணிவித்தனர். தந்தத்தின் முனையில் பொன்னால் செய்த பூண் அணிவித்திருப்பார்கள். இதற்கு கிம்புரி என்று பெயர்.  பொதுவாக, அரசர்கள் யானையின் மீது ஏறி நகரை வலம் வருவர். பெண்களும் கூட யானையின் மீது அமர்ந்து பயணிப்பர். மன்னர்கள் அதிக அளவில் யானைகளை வளர்த்து பழக்கப்படுத்தி வைத்திருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. சேரமன்னர்களில் ஒருவனுக்கு பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற பெயர் இருந்தது. தங்களிடம் பரிசு பெற புலவர்களுக்கு யானைகளையும் பரிசாக அளிக்கும் பழக்கம் மன்னர்களிடம் இருந்தது. உலக அளவில் சோழமன்னர்களிடம் மட்டுமே ஆயிரக்கணக்கில் யானைகளை கொண்ட படைகள் இருந்ததாக அறிய முடிகிறது.  மனித இனம் இன்றும் கண்டு பிரமிக்கும் யானையை சர்வளசாதாரணமாகப் பிடித்து பழக்கி அவற்றை பயன்படுத்தியது தமிழர்களின் மிகச்சிறந்த பராக்கிரமத்திற்கு உதாரணம். எந்த அளவுக்கு விலங்குகள் தங்களுக்கு பயன்பட்டனவோ, அதே அளவுக்கு அந்த விலங்குகளுக்கு தகுந்த மரியாதையும், உயர்வான பராமரிப்பையும் கொடுத்து அவற்றை தங்களது குடும்பத்தில்  உறுப்பினராக உயர்த்தி வைக்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்ததமைக்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

No comments:

Post a Comment