Search This Blog

Saturday, February 20, 2016

வங்கிகளில் வாராக் கடன் 20/02/2016

இங்கிலாந்து நாட்டில் 1883-ம் ஆண்டு பிறந்து, 1946-ம் ஆண்டு வரை வாழ்ந்த மிகச்சிறந்த பொருளாதார மேதை ஜான் மேனார்டு கெயின்ஸ். இவர்தான் உலக வங்கி, சர்வதேச பண நிதியம் போன்ற பல அமைப்புகளை உருவாக்கியவர். வங்கிக்கடன் பற்றி அப்போது இவர் சொல்லிய ஒரு கருத்து இன்றளவும் நினைவில் வைத்து பேசப்படுகிறது. நீ வங்கியில் 1000 பவுண்டு கடன் வாங்கியி ருந்தால், நீ வங்கியின் தயவில் இருப்பாய். ஆனால், 10 லட்சம் பவுண்டு கடன் வாங்கியிருந்தால் வங்கி உன் தயவில் இருக்கும் என்றார். அன்று அவர் சொன்னது இன்றளவும் யதார்த்த உண்மையாக நிலவுகிறது.

கல்விக்கடன் உள்பட சிறிய தொகையைக் கடனாகக் கோரும் ஏழை மக்கள் என்றாலும் சரி, லட்சங்கள் முதல் ஒரு சில கோடி ரூபாய் கடன் கேட்கும் வணிகர்கள், தொழில் அதிபர்கள் என்றாலும் சரி, கடன் வாங்கும் நடைமுறைகளால் பலமுறை அலைக்கழிக்கப்பட்டு, பல உத்தரவாதங்கள், அடமானங்கள் கேட்கப்பட்டு, இறுதியில் விண்ணப்பித்த சிலருக்கு மட்டுமே கடன் கிடைக்கிறது. அதுபோல, வட்டியைக் கட்டும்போதும் சரி, கடனை பைசல் செய்யும் போதும் சரி, வங்கிகள் மிகக்கறாராக இருக்கிறது. பல நேரங்களில் அடமானம் வைத்த சொத்துக்கள், நகைகள் ஏலத்துக்கு வந்துவிடுகிறது. சிறிய அளவில் கடன் வாங்கு பவர்களுக்கு வங்கிகள் என்றால் சிம்ம சொப்பனம். மறுபடியும் கடன் கேட்க அவர்களிடம்தானே போக வேண்டும் என்ற பயத்தில் கடன் தவணையை சரியாக கட்டி விடுவார்கள். ஆனால், பெரிய அளவில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பக் கட்டாததால், 27 பொதுத்துறை வங்கிகள் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயை வராக் கடன் என்ற பட்டியலிட்டு, அந்த தொகை முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் பல தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப் பட்டது. இந்த செய்தியை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் 500 கோடி ரூபாய்க்குமேல் கடன் வாங்கி கட்டாதவர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி 6 வாரகாலத்துக்குள் ஒரு சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிறார்கள். பெரிய மோசடி இது. 2015 ஒரே ஆண்டில் மட்டும் 10 பெரிய வங்கிகள் 40 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. திரும்ப வராது என்று தெரிந்தும், கடன் கொடுத்து இருக்கிறார்கள். ரிசர்வ் வங்கி இதைக் கண்காணிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காரசாரமாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வங்கிகளின் லாபம் குறைந்ததற்கு வாராக்கடன் தள்ளு படியை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தொழில் நசிந்துபோய், கடனை கட்ட கையில் எதுவுமே இல்லை என்றால் தள்ளுபடி தவிர, வேறு வழியில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், வேண்டுமென்றே வசதியிருந்தும், கடனை கட்டாதவர்களுக்கு தள்ளுபடி என்பதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எப்படி இருகை தட்டினால் தான் ஓசை வருமோ, அதுபோல வங்கி அதிகாரிகள் துணையில்லாமல், இப்படி வாராக்கடன் தொகை அதிக மாவதற்கு சாத்தியமே இல்லை. ஆக, வாராக்கடன் என்றால், அதை எளிதில் கொடுக்க வகை செய்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தை கொடுக்க வேண்டும். ஆக, வங்கிக்கடன் விஷயத்தில் சிறு கடன் தாரர்கள் மீது பாயும் நடவடிக்கைகள், பெரிய தொகை கடன் வாங்குபவர்கள் மீதும் பாய வேண்டும். ஏற்பட்டிருப்பது பெரிய காயம், இதை பிளாஸ்திரி போட்டு சரிசெய்ய முடியாது, அறுவை சிகிச்சைதான் சிறந்த வழி. 

No comments:

Post a Comment