Search This Blog

Thursday, September 25, 2014


இதைவிட உண்மையை எப்படிச் சொல்வது..?!!





இந்திய பாரம்பரிய உணவுகள்




































Wednesday, September 24, 2014

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இலையுதிர்கால இன்னிசை இரவு விழா

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் இலையுதிர்கால இன்னிசை இரவு விழா


வணக்கம். 20.09.2014 அன்று அமெரிக்கா ஓஹியோ மாநிலம் கொலம்பஸ்  தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலையுதிர்கால இன்னிசை இரவு விழாவில் கலந்து கொண்டேன்.அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். இந்த நாளை நான் மறக்கவே முடியாது. ஏனென்றால் இந்த நாள் புரட்டாசி சனிக்கிழமை என தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படும் நாள். மேலும் அன்று (20-09-2014) காலையில்தான் சென்னையில் இருக்கும் எனது மகன்-மருமகள் (சங்கர்-அனிதா தம்பதியினர்) எல்லாம் வல்ல இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றனர். எனவே, எனக்கு பேரன் பிறந்த நாளில் கலந்து கொண்ட இனிமையான நிகழ்ச்சி என்ற விதத்தில் இந்த நிகழ்ச்சியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. எனது மருமகன் திரு.ஜெயந்த் மற்றும் அவரது பெற்றோருடன் இந்த நிகழ்ச்சியில் பெற்ற எனது அனுபவங்களை உங்களோடு கலந்து கொள்கிறேன்.
வரவேற்பு இடத்தில் துவங்கிய மகிழ்ச்சி முழுமையாக இருந்தது. தமிழ்நாட்டு கிராமங்களில் சிறுவர்கள் கைகளில் கட்டும் சவ்வு மிட்டாய் போல ஒரு அடையாள காகிதத்தை சுற்றிக் கொண்டது வித்தியாச அனுபவம்.Eureka SuperKidz என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தாரும் வரவேற்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். அரங்கினுள் செல்லும்போதே வரவேற்புரை தொடங்கிவிட்டது. தொடர்ந்து முழுமையான ஆங்கிலத்தில் பெண்மணி ஒருவர் Eureka SuperKidz பற்றியும் தமிழ்ச்சங்க செயல்பாடு பற்றியும் விவரித்தார். அதே போல பாடல் நிகழ்ச்சியின் இடையிலும் அனுஷ்யா என்னும் பெண் தமிழிலும்,  இன்னொருவர் அமெரிக்க ஆங்கிலத்திலும் மதுரை அருகில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் நடந்த சில கல்வி கற்பித்த  சூழ்நிலைகளை பகிர்ந்து கொண்டனர். சரி... சரி... அமெரிக்க தமிழ்ச்சங்கம் என்பதால் இப்படி ஆங்கில உரையும் இருக்கிறது போலும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்.

பின்னர் ஆவலோடு எதிர்பார்த்த இன்னிசை நிகழ்வு தொடங்கியது. ஜனனி ஜனனி எனத் துவங்கி செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை என நுழைந்து அம்மா என்றழைக்காத உயிரில்லையே என உணர்ச்சிப் பிழம்பாக பாடல் துவங்கியது. GV சைந்தவி, சத்யபிரகாஷ், ரவிசங்கர், ஆகியோருடன் இசைக்கலைஞர்கள் பங்கேற்க நல்ல தமிழில் பெண்மணி ஒருவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து தெய்வமகள் திரைப்பட பாடலை சைந்தவி பாட விழா களைகட்டியது.(3) பளிங்கினால் ஒரு மாளிகை (கறுப்புப்பணம்).., (4) ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்(ஜானி).., (5) ஓம் சிவோஹம் (நான் கடவுள்).., (6) ஐயையோ ஆனந்தமே (கும்கி)..., (7) வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்(கிழக்கு வாசல்)...,  (8) என் வானிலே ஒரே வெண்ணிலா (ஜானி).., (9) மச்சானைப் பார்த்தீங்களா (அன்னக்கிளி).., (10) வராக நதிக்கரை ஓரம் (சங்கமம்)..., (11) பூமாலையே தோள் சேரவா (பகல்நிலவு).., (12) மலர்களே.. மலர்களே.. இது என்ன கனவா (லவ் பேர்ட்ஸ்).., (13) நிலா அது வானத்து மேலே (நாயகன்).., (14) பொன் ஒன்று கண்டேன் (படித்தால் மட்டும் போதுமா).., (15) இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன. (மரியான்) (16) பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப்  பட்டிணம்).., என பாடல்கள் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. உதித் நாராயணன் பாடியிருந்தால் கர்ணன் திரைப்பட பாடல் "உள்ளத்தில் நல்ல உள்ளம்.. " எப்படியிருக்கும் என்பதையும் பாடிக் காட்டி நகைச்சுவை செய்தனர் மேடைப் பாடகர்கள். தொடர்ந்து சிற்றுண்டி இடைவேளை வந்தது. அதன் பின்னர் இங்கு கொலம்பஸில் இருக்கும் எனது நண்பர்களின் வீட்டுக்கு இரவு 7.30க்கு செல்ல ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்தேன். எனவே நாங்கள் கிளம்பும் நிலையாகிவிட்டது.

சமீபத்தில் ஒருநாள் தமிழ்நாட்டு டி.வி. செய்தியில் பார்த்தேன். காய்கறி விலையேற்றம் குறித்து ஒரு பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார் நிருபர். அந்தப் பெண் ," வெஜிடபுல்ஸ் ரேட் எல்லாம் ரொம்ப ஹை ஆயிட்டே போகுது. பேமிலிய ரன் பண்றது ரொம்ப டிபிகல்ட் ஆக இருக்கு " என்று பேசுகிறாள். எந்த விலங்கும் கூட இன்னொரு விலங்கின் மொழியில் பேச முயற்சி செய்வதில்லை - பேசுவதை பெருமையாகக் கருதுவதும் இல்லை. " காய்கறி விலையெல்லாம் கூடிகிட்டே போகுது. குடும்பம் நடத்த சிரமமாக இருக்கு " என எளிய தமிழில் பேச முடியவில்லையா..? அல்லது பேச விருப்பம் இல்லையா..? என்பதே பெரியதொரு கேள்வி. அட அப்படியாவது நல்ல ஆங்கிலத்திலாவது பேசத் தெரியுமா என்றால் அந்த மொழிவளமும் கிடையாது., தெரியாது என்பது ஒரு கசப்பான உண்மை. செம்மொழி என்னும் பெருமை உடையது நமது மொழி. வரிவடிவம் இல்லாத பல மொழிகள் உலகில் உள்ளன. இந்தியாவில் சொல்லப் போனால் நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியும், சௌராஷ்டிர மக்கள் பேசும் சௌராஷ்டிர மொழியும் பல லட்சம் மக்கள் பேசுவதை நாம் அறிவோம். அந்த மொழி பேசும் மக்கள் இன்றளவும் அவர்களது குழந்தைகளுக்கு அவரவர் மொழியை தாய்மொழியாக கற்பித்தும் பேசியும் வருகின்றனர். ஆனால் நமது தமிழர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதிலும், தமிழில் பேசுவதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். விழா மேடையில் தமிழில் பேசத் தெரியாமல் நின்ற சிறுவனைக் கண்டதும் எனக்கு இவ்வாறு தோன்றியது. தமிழில் பேசத் தெரியவில்லை என்றால் வீட்டில் தமிழ் இல்லை என்பதுதானே அர்த்தம்..? அதனால் நண்பர்களே நாமாவது சேர்ந்து நல்ல தமிழை பேச-கற்பிக்க முயற்சி செய்வோம். வேறு எந்த மொழியாக இருந்தாலும் அதையும் நல்லமுறையில் பேச பயிற்சி எடுப்போம்.

விழாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு கையேடு அளிக்கப்பட்டது.அதில் "மனித மாண்பு" என்ற தலைப்பிலும், "சான்றான்மையும் வள்ளுவரும்" என்ற தலைப்பிலும் திரு அழகப்பன் கனகசபாபதி அவர்கள் தந்திருந்த தொகுப்பினைப் படித்து மகிழ்ந்தேன். அந்தக் கையேட்டில் தமிழ்நாடு மதுரையில் 1899ஆம் ஆண்டு திரு.பாண்டித்துரை தேவரால் துவங்கப்பட்ட முதலாம் தமிழ்ச் சங்கம் பற்றிய குறிப்புக்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட 15 நோக்கங்களையும் அறிந்து கொள்ளவும் முடிந்தது. கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் - தமிழ்ப்பள்ளி பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. விழாவில் Eureka Foundation க்கு 10.000 டாலர்கள் நன்கொடை வழங்கியதையும் கண்டேன். உள்ளபடியே மெய் சிலிர்த்துப் போனேன். நமது இந்திய மதிப்பில் சுமார் 6 லட்ச ரூபாய்களை நன்கொடை வழங்கிய கொலம்பஸ் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் சொல்கிறேன்.

தமிழ் வாழ்க.. தமிழர் ஒற்றுமை உணர்வு ஓங்குக.