Search This Blog

Thursday, December 31, 2015



இந்தியாவில் புகையிலை
புகையிலை இந்தியாவில் சிகரெட், பீடி, சுருட்டு தொழில், ஜர்தா, வாயிலிட்டு மெல்லும் புகையிலை தொழில், மூக்குப்பொடி தொழில் என பல்வேறு வகைகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் சிகரெட் தொழிற்சாலைகள் மும்பை, பரோடா, மாங்கீர், கொல்கத்தா, அலகாபாத், ஜலந்தர், ஐதராபாத் முதலிய இடங்களில் உள்ளன. உலகத்தரம் வாய்ந்த வெர்ஜினியா வகை புகையிலை பிரகாசம், குண்டூர், கர்னூல், மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா பகுதிகளில் பயிராகிறது. வருடத்திற்கு 40 ஆயிரம் டன் புகையிலை, சிகரெட் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய புகையிலை வளர்ச்சி கம்பெனி இதை தூய்மைப்படுத்தி தரம் பிரித்து, சிகரெட் தொழிற்சாலைகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறது.
இந்தியாவில் பீடித்தொழில் ஒரு குடிசைத்தொழிலாக நடைபெறுகிறது. இதற்கு 75 ஆயிரம் டன்னிலிருந்து 80 ஆயிரம் டன் வரை புகையிலை பயன்படுகிறது. குஜராத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தில் இருந்தும் புகையிலை வருகிறது. இதனுடன் பீகார், உத்திரப்பிரதேசம், தென் கர்நாடகம் போன்றவற்றிலிருந்து வரும் தரம் குறைவான புகையிலையும், பீடி புகையிலையுடன் கலக்கப்படுகிறது. தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ஒரிசா மாநிலக்காடுகளில் பீடி சுற்றும் இலைக்குரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆசிய, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 5 ஆயிரம் கிலோவுக்கு மேல் பீடிகளை ஏற்றுமதி செய்கிறது. மட்டரகப் புகையிலையில் இருந்து சுருட்டுகள் தயாரிக்கப்படுகிறது. 
ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி சுருட்டுகள் தயாரிக்கபடுகின்றன. இவை தமிழ்நாட்டிலுள்ள பல சிறு தொழிலகங்களில் தயாராகின்றன. சுருட்டு தயாரிப்பில் சென்னையும், திருச்சியும், மிகப்பெரிய உற்பத்தி மையங்களாகும். இந்தியா ஆண்டுக்கு ரூ.150 கோடி புகையிலை பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. 1975-ல் புகையிலை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. புகையிலை உற்பத்தியில் இந்தியா உலகில் மூன்றாவது நாடாக திகழ்கிறது. ஏற்றுமதியில் 8-வது இடம் பிடித்துள்ளது. டெல்லி, லக்னோ, கோரக்பூர் முதலிய வட இந்திய நகரங்களில் ஹூக்காவுக்கான புகையிலை அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் பல இடங்களில் பரவலாக மூக்குப்பொடி, மற்றும் வாயிலிட்டு சுவைக்கும் புகையிலையும் சிறு தொழில்களாக நடைபெறுகின்றன. ஜர்தா போன்ற ‘பான்’ வகைகள் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகி வரும் புகையிலைப் பொருள்களாகும். 30/12/2015