Search This Blog

Thursday, February 25, 2016


உள்ளாட்சி  அமைப்புகளில் 50  சதவீத  பெண்  பிரதிநிதிகள் 24/02/2016

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று பிறந்தநாள். 68 வயது முடிந்து 69-வது வயது பிறக்கும் இந்த நன்னாளில், எல்லோரும் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்கள். எப்போதுமே தனது திட்டங்களில் பெண்களை மையப்படுத்தும் ஜெயலலிதா, இந்த பிறந்தநாளுக்கு 4 நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் ஒரு மசோதாவை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றி, தாய்க்குலத்துக்கு தன் பிறந்தநாள் பரிசை அளித்துவிட்டார்.

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் மேயர்கள், 919 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோல, 124 நகராட்சிகளிலும் தலைவர்கள், 3,613 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 528 பேரூராட்சிகள் இருக்கின்றன. இங்கும் தலைவர்களும், 8,238 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுபோல, 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும் தலைவர்களும், 99,333 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுதவிர, மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் என்று மொத்தம் 1,32,883 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்த அமைப்புகளுக்கெல்லாம் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேறியது. அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு இருந்தாலும், 40 சதவீதத்துக்குமேல் பெண்கள் வெற்றிபெற்று உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை அலங்கரித்தனர். இப்போது 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்தன்மூலம், பெண்மைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு பெரிய பெருமையை அளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதில், ஆண்களும், பெண்களும் ஏறத்தாழ சரிசம எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். ஆண்களின் எண்ணிக்கை 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். 1,000 ஆண்களுக்கு 996 பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 50 சதவீதத்தை பெண்கள் நெருங்கிவிட்டார்கள். இந்த நிலையில், அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு அளித்திருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். மத்திய அரசாங்கம் நாடுமுழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றவகையில், ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர பரிசீலித்து கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் மெதுவாக கொண்டுவாருங்கள், நாங்கள் அதற்கு முன்பே 50 சதவீத இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டுவருகிறோம் என்ற வகையில், தமிழ்நாடு செயல்பட்டிருப்பது நிச்சயமாகவே பெருமைக்குரியதாகும்.

சில மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்தான் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கிராமப்பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது நிச்சயமாகவே பெருமைக்குரியதுதான். ‘‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற பாரதியின் கனவு, தமிழ்நாட்டில் நனவாகிவிட்டது.

பெண்கள் தங்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, பொதுவாழ்க்கையில் நுழைவதற்கு வாசலாக இருக்கும், இந்த அமைப்புகளில் இந்த தேர்தல்களில் பங்கேற்று, அவர்களின் ஒப்பற்ற சேவைமூலம் தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கவேண்டும். பொதுமக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களின் நிறைகுறைகளைக் கேட்டு, அவர்களுக்கு சேவைசெய்ய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் பெரிதும் உதவும் என்பதால், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வமுடையவர்கள் அனைவரும், அக்டோபர் மாதத்தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள இப்பொழுதே மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்.

No comments:

Post a Comment