Search This Blog

Saturday, February 27, 2016


தட்டைப்பாதங்கள் தரும் வேதனை 26/02/2016

மனிதனின் பாதங்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உடல் வலிமை உள்ளவர்களை சேர்த்துக்கொள்ளும் ராணுவம் கூட தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தடி போடுகிறது. ஏன்?

பிறந்த குழந்தையின் பாதத்தை தொட்டுப்பாருங்கள். அதன் வடிவம் தட்டையாகத்தான் இருக்கும். குறைந்தபட்சம் 2 வயது வரை இந்த தட்டைப் பாதம் நீடிக்கும். 7 வயதுக்குள் 95 சதவீத குழந்தைகளுக்கு கீழ் பாதத்தின் நடுப்பகுதி உள்பக்கமாக வளையத் தொடங்கும்.  நம் அனைவரின் பாதங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை. பல வடிவங்களில், பல அளவுகளில் காணப்படும். சொல்லப்போனால் ஒருவரின் வலது பாதத்துக்கும் இடது பாதத்துக்கும் இடையே கூட ஓரளவு வித்தியாசம் இருக்கிறது. சிலருக்கு நிற்கும் போது மட்டும் உடலின் எடை பாதத்தில் விழுவதால் பாதம் சற்று தட்டையாகத் தோன்றும். அவர்களே உட்கார்ந்தாலோ படுத்தாலோ பாதத்தின் நடுப்பகுதி சமத்தாக உட்புறம் வளைந்து நார்மலாகி விடும். இது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுள்ள தட்டைப் பாதம். பாதத்தின் இயல்பான வடிவத்தைக் காக்கும் தசைநார்கள் தொய்ந்து போயிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.

தட்டையான பாதம் கொண்டவர்களுக்கு தினசரி வேலைகளில் பிரச்சினை இருக்காது. அவசரமாக ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொள்வதில் கூட சிரமம் இருக்காது. ஆனால், நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்த்தால் பாதத்தில் குடைச்சல் ஏற்படும். தவிர ஓட்டப்பந்தய வீரராக வருவது கடினம். இதனால்தான் ராணுவத்தில் இவர்களுக்கு வேலை தருவதில்லை.

தட்டைப்பாதத்தில் எந்த வேதனையும் இல்லையென்றால் இது குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அதுபோலவே லேசான வலி அவ்வப்போது ஏற்பட்டு சரியானாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சிக்கலைத் தரக்கூடிய தட்டைப்பாத வகையும் உண்டு. அதை இறுகிய தட்டைப்பாதம் என்கிறார்கள். இவர்களுக்கு பின் பாதத்துக்கும், நடுப்பாதத்துக்கும் இடையே உள்ள எலும்புகள் பிறப்பிலேயே இணைந்து ஒருவித எலும்புப் பாலம் போல் ஆகிவிடும். அங்கு நெகிழ்வுத் தன்மை குறைந்து அதன் காரணமாகவும் தட்டைப்பாதம் உண்டாகலாம். தட்டைப் பாதம் கொண்டவர்களுக்கு அதிக வலி ஏற்பட்டால் அதற்கென்று இருக்கும் காலணிகளை அணிந்து கொள்ளலாம். அதிலும் பயன் கிடைக்காவிட்டால் பாதத்தின் வெளிப்புறமும் உள்புறமும் அசைவை குறைக்கும் வகையில் ஆபரேஷன் செய்வதே நல்லது. இதையும் 15 வயதுக்கு மேல் செய்வதே சிறந்தது. அப்போதுதான் பாதம் முழு வளர்ச்சியடைந்திருக்கும்.

No comments:

Post a Comment