Search This Blog

Thursday, February 18, 2016


60  ஆண்டு  கனவான அத்திக்கடவு-அவினாசி  திட்டம் - 18/02/2016

கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஏழை-பணக்காரன், படித்தவர்-படிக்காதவர், இந்த சாதி-அந்த சாதி, ஆண்- பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், ஒட்டுமொத்த மக்களே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று போராட்டத்தில் குதித்துள்ளனர். கொங்குமண்டலம் என்பது வேளாண்மையையே நம்பி வாழும் மண்டலம் ஆகும். இந்த மக்கள் கடந்த 60 ஆண்டுகளாகவே அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, 1957-ம் ஆண்டு முதல் 67-ம் ஆண்டு வரை மாரப்ப கவுண்டர் அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இந்தத்திட்டத்தை வலியுறுத்திய நேரத்தில், பெருந்தலைவர் காமராஜர் இதற்கு ஒப்புதல் அளித்து, ரூ.132 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான முயற்சிகளை தொடங்கினார். ஆனால், காமராஜர் ஆட்சிக்குப்பிறகு, இந்தத்திட்டம் கனவாகிவிட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மழைக்காலங்களில் ஊட்டி, குன்னூர் போன்ற பல பகுதிகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, காரமடைக்கு மேலேயுள்ள மலைப்பகுதியில் இருக்கும் பில்லூர் அணைக்கு வந்துசேரும். பில்லூர் அணை இருக்கும் பகுதிதான் அத்திக்கடவு என்று அழைக்கப்படுகிறது. இந்த பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் வெளிவரும் காலங்களில் ஏறத்தாழ 30 டிஎம்சி தண்ணீர் அளவில் கடலில் போய் கலக்கிறது. காமராஜர் போட்ட திட்டப்படி, அத்திக்கடவில் இருந்து கால்வாய் தோண்டப்பட்டு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில்  உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகளில் தண்ணீரை நிரப்பினால், இந்த மாவட்டம் முழுவதும் ஒருபக்கம் விவசாயத்துக்கு பயன்படுத்தினாலும், மறுபக்கம் நிலத்தடிநீர் மட்டமும் உயர்ந்துவிடும் என்பது இதன் உண்மையான பயனாகும். கொங்குமண்டலத்தில் இப்போது நிலத்தடிநீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே போய்விட்டது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் வந்தால், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து 50 அடியில் தண்ணீரை பார்க்கலாம்.

தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால், இந்த திட்டம் குறித்து ஒரு உறுதியான தகவல் வேண்டும் என்பதுதான் இந்த மக்களின் குறிப்பாக வேளாண் பெருமக்களின் கோரிக்கையாகும். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், “2011-ம் ஆண்டில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக ரூ.1,862 கோடி செலவில் திட்ட அறிக்கை தீட்டப்பட்டது. பில்லூர் அருகில் பவானி ஆற்றில் இருந்து 2 ஆயிரம் கனஅடி வெள்ள உபரிநீரை எடுத்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 31 பொதுப்பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்புவதற்கு வகைசெய்யும் இந்த திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை நிதிஉதவி கோரி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. நீர்ப்பாசனம், நிலத்தடிநீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக இதை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி, மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும். அதேசமயம் இந்த திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு இந்த பட்ஜெட் அறிவிப்புக்கு நிர்வாக ரீதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவேண்டும். வரப்போகும் புதிய அரசு அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து மாநில அரசு திட்டமாக செயல்படுத்தவேண்டும். அதுபோல, கடலில் வீணாக போய் கலக்கும் தாமிரபரணி, காவிரி உள்பட அனைத்து ஆறுகளின் நீரையும் சேமித்து, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை நிறைவேற்றுவதையே தனது முதல் கடமையாகக் கொள்ளவேண்டும். இலவசம் பெரிதல்ல, மாநிலத்தின் வளமே பெரிது என்பதை குறிக்கோளாகக்கொண்டு அடுத்து அமையப்போகும் அரசு செயல்படவேண்டும்.

No comments:

Post a Comment