Search This Blog

Tuesday, February 23, 2016


உள்நாட்டு  கடல்வழி  சரக்கு  போக்குவரத்து 23/02/2016

உள்நாட்டு கடல்வழி சரக்கு போக்குவரத்தில் சென்னை துறைமுகத்தில் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக சென்னையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு கப்பல் மூலமாக 800 புதிய கார்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்திலிருந்து 6 நாட்களில் இந்த கப்பல் போய் சேர்ந்துவிட்டது. நாட்டிலேயே முதல் முறையாக கார்கள் உள்நாட்டுக்குள் கடல்வழியாக அனுப்பப்படுவது இதுதான் முதல் முறையாகும். ஏற்கனவே மங்களூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஹசீரா வரை கப்பல் மூலம் லாரிகள் அனுப்பப்பட்டுள்ளன. சாலை வழியாக சென்னையில் இருந்து குஜராத்துக்கு இந்த 800 கார்களையும் கொண்டுசெல்லவேண்டுமென்றால், டிரெய்லர்கள் மூலமாகத்தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஒரு டிரெய்லரில் 7 அல்லது 8 கார்கள்தான் ஏற்றமுடியும். அதன் வாடகை ஒரு டிரெய்லருக்கு ஏறத்தாழ ரூ.1½ லட்சமாகும். ஆனால், இவ்வாறு கப்பல் மூலமாக அனுப்பியதால் போக்குவரத்து செலவில் 30 சதவீதம் மிச்சமாகி யிருக்கும் என்கிறார்கள்.

மத்திய அரசு கடல்வழி சரக்கு போக்குவரத்தில் இப்போது தீவிர அக்கறை கொண்டுள்ளது. ஏனெனில், ஒருபக்கம் விபத்துகளை குறைக்கலாம் என்றாலும், மற்றொரு பக்கம் போக்குவரத்து நெரிசல், மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையால் ஏற்படும் இயற்கை சுற்றுசூழல் கேடுகளை தடுக்கமுடியும். எந்தவொரு பொருளையும் சாலை மூலமாக கொண்டுசெல்வதென்றால், ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாய் 50 காசு செலவாகும். அதேபொருளை ரெயில் மூலம் கொண்டுசென்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1 செலவாகும். ஆனால், கடல்வழியாக கொண்டுசென்றால் ஒரு கிலோ மீட்டருக்கு 25 காசுகள் முதல் 30 காசுகள்வரைதான் செலவாகும். அந்த வகையில், பொருளாதார ரீதியாகவும் இது மிகவும் லாபம் அளிக்கக்கூடியதாகும். தற்போது நாட்டில் மொத்த சரக்கு போக்குவரத்தில் இன்னும் ஒரு 5 சதவீதத்தை கடல்வழியாக கொண்டுசென்றால், ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் மிச்சமாகும். அதேநேரத்தில், 6 சதவீதம் சுற்றுச்சூழல் கேடு நிச்சயமாக குறையும்.

இந்தியாவில் மொத்தம் 7 ஆயிரத்து 517 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1,076 கி.மீட்டர் நீளமுள்ள கடற்கரை இருக்கிறது. தமிழ்நாட்டில் எண்ணூர், சென்னை, தூத்துக்குடியில் பெரிய துறைமுகங்கள் இருக்கிறது. இதுதவிர, குளச்சல் துறைமுகம் விரைவில் பன்னாட்டு துறைமுகமாகப்போகிறது. மேலும், கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், வாலிநோக்கம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன. இதுதவிர, தனியார் முதலீட்டில் நிறைய துறைமுகங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் விபத்துகளில் தமிழ்நாட்டில்தான் அதிகமான சாலை விபத்துகளும், அதிகமாக உயிர் இழப்புகளும் நடக்கின்றன என்ற கவலை அளிக்கத்தக்க அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இவ்வளவு நீண்ட கடல்வழியும், அனைத்து இடங்களையும் இணைக்கும் வகையில் துறைமுகங்கள் இருக்கும் தமிழ்நாட்டில், இன்னமும் கடல்வழி பயணப்போக்குவரத்தையும், சரக்கு போக்குவரத்தையும் பயன்படுத்தாமல் இருப்பது நிச்சயமாக பெரும் குறையாகும். கடல்வழி போக்குவரத்தை தமிழ்நாட்டில் பெரிதும் பயன்படுத்தினால், நிச்சயமாக சாலை போக்குவரத்தில் விபத்துகள் கணிசமாக குறையும். சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். மத்திய-மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உள்ள இந்த நல்வாய்ப்புகளை பயன்படுத்தி, கடல்வழி போக்குவரத்தில் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.

மத்திய அரசாங்கம் கடல்வழி போக்குவரத்தில் தீவிர அக்கறைகொண்டுள்ள இந்த நேரத்தில், இந்தியாவில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் கடல்வழியை 3 சதவீதம் முதல் 5 சதவீதம்வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சீனா, தென்கொரியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை பயன்படுத்துகிறார்கள் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறிய தகவலையே, நமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, அந்த கருத்தின் பலன் தமிழ்நாட்டுக்கு கிடைக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும்.

No comments:

Post a Comment