Search This Blog

Tuesday, December 9, 2014




அதிக விலை சினிமா டிக்கெட்டுகள்
உலகிலேயே மிகக் குறைவான சினிமா கட்டணம் கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு இருந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், உடனடியாக மக்களிடம் இருந்து வசூல் செய்து விட வேண்டும் என்ற நெருக்கடியால் கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமா கட்டணத்தின் அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.அதன்படி 10 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒருவர் சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடம் உழைத்தால் போதும். வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமாவைப் பார்த்து விட முடியாது. அதனால் அன்றைய உழைப்பாளர் வர்க்கத்தை சினிமா கட்டணம் பெரிதாக பாதிக்கவில்லை. அப்போது சராசரியாக சினிமா டிக்கெட் விலை ரூ.8 ஆக இருந்தது. இதேபோல் அமெரிக்காவில் ஒரு சினிமா பார்க்க அமெரிக்கர் 24 நிமிடம் உழைத்தால் போதும் என்று இருந்தது. இன்று நிலைமையே தலைகீழ். இன்றைக்கு சினிமா டிக்கெட்டின் விலை ரூ.100-ல் தொடங்கி ரூ.350 வரை ஆகிறது. ஒருமுறை குடும்பத்துடன் சினிமா தியேட்டருக்கு போய்வர சராசரி இந்தியன் தனது மாத வருமானத்தில் 27 சதவீதம் வரை செலவழிக்கிறார்.இந்தியர்களின் சராசரி மாத வருமானம் ரூ.3,700 மட்டுமே. லட்சங்கள் இல்லை. லட்சங்களில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் மட்டும்தான். மற்றவர்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். அமெரிக்காவில் எப்படி என்றால், அங்கு சராசரி மாத வருமானம் 3,400 டாலர்கள். சினிமா டிக்கெட்டின் விலை 9 டாலர் முதல் 10 டாலர் வரை தான். ஒருசில தியேட்டர்களில் மட்டுமே அதிகபட்சமாக 25 டாலர் வரை சினிமா கட்டணம் உள்ளது. இதனால் ஒரு அமெரிக்கர் ஒருமுறை சினிமா பார்க்க தனது மாத வருமானத்தில் 0.30 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறார். இங்கிலாந்திலும், அதேநிலை தான் உள்ளது. அங்கு ஒரு பிரிட்டிஷ் காரர் சம்பளமாக 3 ஆயிரம் டாலர் பெறுகிறார். அங்கு சினிமா டிக்கெட்டின் விலை 9 டாலரில் இருந்து 28 டாலர் வரை உள்ளது. சரி, சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டாம். கேபிள் டிவி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், இந்தியாவின் நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. இந்தியாவில் கேபிள் டிவி., டிடிஎச் இணைப்புகளின் மாத சந்தா ரூ.150-ல் இருந்து 350 ஆக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி மாத வருமானத்தில் 10 சதவீதமாகும். அமெரிக்காவில் டிடிஎச்-சின் மாத சந்தா 50 டாலரில் இருந்து 100 டாலராக இருக்கிறது. ஒரு அமெரிக்கர் டிடிஎச் சந்தாவாக மாதம் 3 சதவீதம் மட்டுமே செலுத்துகிறார். இங்கிலாந்திலும் டிடிஎச். சந்தா 75 டாலர் முதல் 125 டாலர் வரை உள்ளது. இதுவும் 5 சதவீதத்திற்கும் குறைவான தொகையே.ஆக மொத்தம் இந்தியாவில் தான் தற்போது உலக அளவில் சினிமா, கேபிள் டிவி., டிடிஎச். போன்ற பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு அதிக தொகை செலவழிக்கிறார்கள். நம்மை விட வளர்ந்த நாடுகள்கூட பொழுதுபோக்குக்காக செலவிடும் தொகை குறைவு தான்.