Search This Blog

Thursday, February 25, 2016


வைர எரிகற்கள் 24/02/2016

வானம் ஒரு பிடிபடாத மர்மம். விண்ணில் இருந்து அவ்வப்போது ஏதாவது ஒன்று பூமியில் வந்து விழுகிறது. அது என்னவென்று சுதாரிப்பதற்குள், எல்லாவற்றையும் எரித்து விடுகிறது. அப்படித்தான், 1908 ஜூன் 30-ந்தேதி ஒரு சம்பவம் நடந்தது.  ரஷியாவின் மத்திய சைபீரியா பகுதியான துங்கஸ்காவில் அதிகாலை நேரத்தில் வானத்தில் இருந்து ராட்சத தீக்கோளம் பூமியை நோக்கி மிக வேகமாக வந்தது. அது விழுந்து வெடித்தபோது, நூற்றுக்கணக்கான மைல் தொலைவுக்கு சத்தம் கேட்டது.  அதன் தாக்கத்தால் இரண்டாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இதனால் ஏற்பட்ட பயங்கர அதிர்வு பூமியை இரண்டு முறை சுற்றி வந்தது. இது நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும்கூட, வானத்தில் பரவியிருந்த நெருப்புத் துகள்களால் இரவு-பகல் என்ற வேறுபாடின்றி வெளிச்சம் நிறைந்திருந்தது.

அந்த வெளிச்சத்தில் துங்கஸ்காவில் இருந்து 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லண்டனில் இரவில் பேப்பர் படிக்க முடிந்தது. இந்த சம்பவத்தைத்தான் விஞ்ஞானிகள் ‘துங்கஸ்கா நிகழ்ச்சி‘ என்று அழைக்கிறார்கள்.

இது எதனால் ஏற்பட்டது என்று உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், தான் தெரிந்தது அதுவொரு வால் நட்சத்திரத்தின் பகுதி என்பது. கிரகங்களுக்கு நடுவே சிறியதும், பெரியதுமாக ஏகப்பட்ட வால் நட்சத்திரங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.  சிறியது என்பது தூசு அளவு இருக்கும். பெரியது என்பது இலங்கை தீவு அளவு இருக்கும். துங்கஸ்காவில் விழுந்த எரிகல் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவு இருந்தது. மணிக்கு 70 ஆயிரம் கி.மீ. வேகத்தில் வந்து பூமி மீது மோதியிருக்கிறது.  எரிகற்கள் என்பது வானச்சத்திரங்களில் இருந்து விழும் துண்டுகள் தான். ஒரு இரவுக்கு 10 எரிகற்கள் வரை பூமியில் விழுகின்றன. இதுவரை விழுந்த எரிகற்களில் மிகப் பெரியது 9 அடி நீளம் கொண்டது. பெரும்பாலும் எரிகற்கள் பூமியின் பாதையில் காற்றுமண்டலத்தில் நுழைந்ததும் வெப்பத்தால் எரியத்தொடங்கி விடுகின்றன.

சுமார் 100 கி.மீ. உயரத்திலேயே அவை சாம்பலாகிவிடுகின்றன. சாம்பலாவதற்குள் பூமியை வந்தடையும் கற்கள் பெரும்பாலும் கடலில்தான் விழுகின்றன. இதற்கு காரணம் பூமியின் பெரும்பகுதி கடலாக இருப்பதுதான்.  எரிகற்களில் இரண்டு வகை உள்ளன. அவை உலோக எரிகற்கள், வைரம் கலந்த எரிகற்கள். இதில் உலோக எரிகற்கள் நிக்கல், இரும்பு கலவையுடன் கூடியது. பூமியில் விழும் எரிகற்களில்  சில சமயம் வைரக்கற்களாக கொட்டவும் வாய்ப்பு உண்டு. கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால், எரிகற்கள் அப்படியல்ல. அவை கிரகங்களில் மோதி அங்கேயே தங்கி விடுகின்றன.  எரிகற்களில் இருந்து நமது பூமியை காப்பாற்றுவது நமது காற்றுமண்டலம்தான். அது மட்டும் இல்லாவிட்டால் பூமியெங்கும் பள்ளங்களாகவும், எரிகல் பாறைகளாகவும் இருக்கும். ஒவ்வொரு கல் விழும்போதும் ஏராளமான உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும். இவையெல்லாம் நடைபெறாமல் காற்றுமண்டலம் தான் நம்மை காப்பாற்றுகிறது. அது நமது அதிர்ஷ்டம்தான். 

No comments:

Post a Comment