Search This Blog

Tuesday, February 23, 2016


‘கடவுளின் சொந்த பூமி‘ 23/02/2016

கடவுளின் சொந்த பூமி‘ என்ற வார்த்தையை கேரளா மட்டும் பயன்படுத்தவில்லை. இன்னும் சில நாடுகளும், சில இடங்களும்  பயன்படுத்துகின்றன.

இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் எட்வர்ட் டு போய்ஸ் என்ற கவிஞர். இவர்தான் அயர்லாந்தில் இருக்கும் விக்லோ மலைகளின் அழகையும் அதன் வசீகரிக்கும் சூழலையும் வைத்து கடவுளின் சொந்த இடம் இப்படித்தான் இருக்கும் என்று, அந்த வார்த்தையிலிருந்து கவிதையை தொடங்கினார். அந்த கவிதை புகழ் பெற, அந்த இடமே கடவுளின் சொந்த பூமியானது. அன்றிலிருந்து அதாவது கி.பி.1807-ல் இருந்து அது கடவுளின் பூமியாக இன்றுவரை இருக்கிறது. உலகின் முதல் கடவுளின் சொந்த பூமி இதுதான்.  அதன் பின்னர் ஐரோப்பா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய வெள்ளையர்கள் சும்மா இருப்பார்களா..! அமெரிக்காவில் இருக்கும் இயற்கை அழகு நிறைந்த இடத்திற்கெல்லாம் ‘கடவுளின் சொந்த பூமி‘ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

உலகின் இரண்டாவது கடவுளின் சொந்த பூமி என்ற பெருமையை, அமெரிக்காவின் மிக்சிகன் அருகே உள்ள டென்னெசி என்ற இடமும், கலிபோர்னியா அருகே இருக்கும் மிசிசிப்பி சமவெளியும் கி.பி.1860-ல் பெற்றன.  அமெரிக்கா சென்று பெயரிட்ட வெள்ளையர்கள் அடுத்து குடியேறியது நியூசிலாந்தில். அங்கும் கடவுளின் சொந்த பூமியை தேடத் தொடங்கினார்கள். மொத்த நாடுமே அழகாய் இருந்ததால் கி.பி.1890-ல் அந்த நாட்டையே கடவுளின் நாடாக மாற்றி விட்டார்கள்.

அடுத்த கடவுளின் நாடாக மாறியது ஆஸ்திரேலியா. இது நடந்தது கி.பி.1900-ல். அதற்கடுத்து, 1970-ல் ஜிம்பாவே நாடு கடவுளின் சொந்த பூமியாக மாறியது.  கி.பி.1989-ல் வால்டர் மென்டேஸ் என்ற விளம்பர பட இயக்குனர், கேரளாவைப் பற்றிய விளம்பரத்தில் கடவுளின் சொந்த பூமி என்ற கேப்ஷனை பயன்படுத்தினார். இந்த வார்த்தையை அப்படியே கேரளா சுற்றுலாத் துறை உள்வாங்கிக் கொண்டது. அதையே முன்னிறுத்தி, இன்று வரை சுற்றுலாவில் பின்னி எடுக்கிறது.

சரி, இந்தியாவில் இன்னொரு இடமும் கடவுளின் சொந்த பூமியாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது, அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவே அமைந்துள்ள மஜுலி என்ற தீவுதான். இயற்கையின் மொத்த அழகையும் கொள்ளை கொள்ளும் இந்த இடத்தில்தான் பகவான் கிருஷ்ணர் சிறுவனாக இருக்கும்போது தனது தோழர்களுடன் விளையாடியதாக கூறுகிறார்கள். அதனால் அது கடவுளின் சொந்த பூமியாக மாறியது.  இப்படியாக கடவுளின் சொந்த பூமிகள் உலகில் நிறைய இருக்கின்றன. இதில் கேரளா கடைசியாக இடம் பெற்றது தான். எனவே கேரளா மட்டும் தான் கடவுளுக்கு சொந்தம் என்று நினைத்துவிடக் கூடாது. வேறு சில இடங்களும், கடவுளுக்கு சொந்தமாக இருக்கின்றன.

No comments:

Post a Comment