Search This Blog

Sunday, February 28, 2016


வசதி  படைத்தவர்களுக்கு மானியங்கள்  தேவையா? 29/02/2016


எந்தவொரு அரசாங்கத்துக்கும், பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கிச்செல்லும்போதும், பட்ஜெட்டை தயாரிக்கும்போதும், ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்வது பொருளாதார ஆய்வறிக்கையாகும். அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து நிலைமைகளையும் நன்கு ஆராய்ந்து, “நீங்கள் இப்படி சென்றால்தான் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடமுடியும், அந்த திசைநோக்கி செல்லமுடியும்” என்ற ஒரு நல்ல பாதையை பொருளாதார ஆய்வறிக்கை காட்டும். தற்சமயம் இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக தமிழரான அரவிந்த்  சுப்பிர மணியன் இருக்கிறார். அவர் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். இந்த ஆய்வறிக்கையில், வருகிற ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் மக்களின் வாங்கும் திறன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள கணக்கின்படி, இந்தியாவில் 30 சதவீதம் பேர்களை ஏழைகள் என்றும், 70 சதவீதம் பேர்களை வசதியுள்ளவர்கள் என்றும் பிரித்துள்ளது. இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையை 3.9 சதவீதத்துக்குள் நிச்சயமாக வைத்துக்கொள்ளமுடியும் என்று கூறி, தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைகளையும், எதிர்காலத்தில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதும் வரைபடம்போல காட்டப்பட்டுள்ளது.

பொதுவாக, தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், தேர்தல் நேரங்களில் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, நாட்டின் வளர்ச்சிகளை மறைக்கும் வகையில், இலவசங்களையும், மானியங்களையும் அள்ளித்தருகிறோம் என்று கூறுவார்கள். ஆனால், பொருளாதார நிபுணர்கள், மானியங்களும், இலவசங்களும் குறைவாக இருக்கும் நிலையில்தான் வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். எல்லோரும் சுற்றிச்சுற்றி சொன்ன கருத்தை, பொருளாதார ஆய்வறிக்கை பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டது. மானியங் களை முழுமையாக ரத்து செய்யச்சொல்லவில்லை. நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வதுபோல, ஏழைகளுக்கான மானியங்கள், வசதிபடைத்தவர்களுக்கும் செல்லும் நிலைமையை சுட்டிக்காட்டி
இருக்கிறார்கள். மண்எண்ணெய், ரெயில்வே, மின்சாரம், சமையல் கியாஸ் சிலிண்டர், தங்கம், விமான பெட்ரோல், சிறுசேமிப்பு திட்டங்களுக்காக வசதிபடைத்தவர்களுக்கும் அளிக்கப்படும் மானியங்கள் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கிறது. அவர்களுக்கு இந்த மானியத்தை தாராளமாக கொடுப்பதை நிறுத்தினால், அந்தத்தொகை மிச்சமாகி, ஏழைகளுக்காக செலவழிக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறுசேமிப்புக்கு அளிக்கப்படும் ஊக்க செலவுகளை நிறுத்தவேண்டும் என்று கூறுவது, இப்போதுள்ள சூழ்நிலையில் சரியாக இருக்குமா?. வருங்கால வைப்பு நிதி மற்றும் வரியில்லாத சேமிப்பு பத்திரங்கள் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களில் பணத்தை திரும்பப்பெறும்போது, அந்த தொகையை வரிக்கு உட்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்போதே .25 சதவீத வட்டி பல சேமிப்பு திட்டங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டால், சிறுசேமிப்பு மீது ஆர்வம் மிகவும் குறைந்துவிடும்.

சமையல் கியாஸ் பொருத்தமட்டில், தற்போது 180 ரூபாய் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்குவதற்கு பதிலாக, மானியத்தோடு கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். சமீபத்தில் நடந்த மற்றொரு ஆய்வில், சமையல் கியாசுக்காக கொடுக்கப்படும் மானியத்தில் 40 சதவீத பரமஏழைகள், 13 சதவீதத்தைத்தான் பெறுகிறார்கள். அதற்குமேல் உள்ள 60 சதவீதம் பேர்கள்தான் 85 சதவீதத்தை பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோல, இந்தியாவில் தற்போது வருமானவரி கட்டுபவர்கள் 5.5 சதவீதம்தான். மற்ற பல நாடுகளைவிட, இந்தியாவில்தான் வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. மேலும் அதிகம்பேர் வருமானவரி கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்புக்குரியதாகும். மொத்தத்தில், நாட்டின் வளர்ச்சிக்கான பல பரிந்துரைகள் இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாராளுமன்றத்தில் இதை முழுமையாக விவாதித்து, உரிய நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment