Search This Blog

Tuesday, February 23, 2016

மனதை பாதிக்கும் கொடூரங்கள்

 ஒரு கொடூர சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? இயற்கை பேரிடர், விபத்து போன்ற சம்பவங்களை நேரில் பார்ப்பவர்களின் மன அதிர்ச்சியை க்ரோ மேடெல் என்பவர் கண்டறிந்து கூறியிருக்கிறார். 1995-ம் ஆண்டில் ரவண்டா நாட்டில் நடந்த கலவரத்தின் போது நடந்த படுகொலைகளை அந்த நாட்டை சேர்ந்த 95 சதவீத குழந்தைகள் நேரில் பார்த்தார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் தங்களின் தாயும், சகோதரிகளும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை நேரில் பார்த்தார்கள். நிறைய குழந்தைகளின் பெற்றோர்களும், உறவினர்களும் கத்தியால் குத்தப்பட்டோ அல்லது துப்பாக்கியால் சுடப்பட்டோ கொல்லப்பட்டார்கள். அங்கு வாழ்ந்த குழந்தைகள் மற்றவர்களை போன்று தாங்களும் சாகத்தான் வேண்டியிருக்கும் என்று முடிவெடுத்து மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 80 சதவீத குழந்தைகள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அடர்த்தியாக மண்டிக்கிடந்த புதர்களிலும், குன்றுகளிலும் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். உண்ண உணவில்லாமல் பட்டினி கிடந்தார்கள். திறந்த வெளியில் கடுங்குளிரில் அவதிப்பட்டார்கள். பல குழந்தைகள் 8 வாரம் வரை இப்படி வாழ்ந்தார்கள். ரவண்டா நாட்டில் குழந்தைகள் படித்து வந்த பல பள்ளிகள் குண்டுகளால் தகர்க்கப்பட்டன. தங்களுடைய நண்பர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை இந்த குழந்தைகள் நேரில் கண்டார்கள். நண்பர்கள் பலர் காணமல் போனார்கள். பல  குழந்தைகள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றார்கள். இந்த குழந்தைகள் வாழ்ந்து வந்த பல வீடுகள் எரித்து தரைமட்டமாக்கப்பட்டன. எரிந்து கொண்டிருக்கும் வீடுகளுக்குள் குழந்தைகள் உட்பட பலர் தள்ளப்பட்டு கொல்லப்பட்டதை குழந்தைகள் நேரில் கண்டனர். 10 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களை கடத்தி சென்று, அவர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி கொடுத்து அவர்களை யுத்த களத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்த குழந்தைகள் ‘வாழ வேண்டும்‘ என்ற ஆர்வத்தையே இழந்து விட்டிருந்தார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சிகள் இவர்களை ஒரு ஜடப்பொருளாக மாற்றியிருந்தன. இவர்கள் விளையாடுவதையும், சிரிப்பதையும் அறவே மறந்து விட்டு அழுது வந்தார்கள். சில சமயங்களில் பழிவாங்க வேண்டுமென்ற வெறி இவர்களை ஆட்கொண்டது. இவர்களில் பலர் சமூக விரோதிகளாக உருவெடுத்தார்கள் என்பது தனிக்கதை.

No comments:

Post a Comment