Search This Blog

Friday, February 12, 2016

சமையல் கியாசுக்கு மானியம் வேண்டாம் 
13/02/2016

ஒரு காலத்தில் விறகு வைத்து, அடுப்புமூட்டி சமையல் செய்துகொண்டிருந்த நிலைமை போய், நிலக்கரி, உமிஅடுப்பு, மண்எண்ணெய் ஸ்டவ் என வந்து, தற்போது நாட்டில் பெரும்பாலான வீடுகளில் கியாஸ்சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்தவேண்டும் என்ற ஆசையால், அதற்கே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விறகு அடுப்பு என்பது வனவளத்தை சீரழிக்கும் வகையில், மரங்கள் வெட்டப்படுவதை அதிகரிக்கும் என்பதாலும், இத்தகைய அடுப்புகளிலிருந்து வெளிவரும் புகை சுற்றுச் சூழலை பாதிக்கும் என்பதாலும், சமையல் கியாஸ்சிலிண்டர் பயன்பாட்டையே எல்லோரும் பெரிதும் ஊக்குவிக் கிறார்கள்.

இந்தியாவில் ஏறத்தாழ 17 கோடி குடும்பங்களில் சமையல் கியாஸ்சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கும் வகையில், ரூ.40 ஆயிரம் கோடிக்குமேல் அரசு செலவழிக்கிறது. மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் அமல்படுத்த தொடங்கியதிலிருந்து, 14 கோடியே 74 லட்சம் குடும்பங்கள் மானியத்தை நேரடியாக பெற்றுவருகின்றன. மேலும், மானியச்செலவை குறைக்கவேண்டும் என்ற தத்துவத்தில், ‘எனக்கு அரசின் மானியம் வேண்டாம்’ என்று சொல்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கூறிவிடலாம். அவர்கள் மனமுவந்து தரும் அந்த மானியத் தொகையைக்கொண்டு, வறுமைக்கோட்டுக்கு கீழேஉள்ள ஏழை மக்களின் வீடுகளுக்கு கியாஸ்சிலிண்டர் வழங்கப் படும், அவர்களிடம் டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் கேட்காது, அவர்கள் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அரசின் இந்த அறிவிப்பை ஏற்று, இந்தியா முழுவதிலும் 68 லட்சத்து 34 ஆயிரம் பேர் எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று மனமுவந்து கொடுத்திருக் கிறார்கள். இந்ததொகையை வைத்து 57 லட்சம் பரம ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசாங்கம் புதிய கியாஸ் இணைப்புகள் வழங்கியிருக்கிறது. ஒரு கோடியே 77 லட்சத்து 74 ஆயிரம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ள தமிழ்நாட்டில், 2 லட்சத்து 3 ஆயிரம் பேர்தான் எங்களுக்கு மானியம் வேண்டாம் என்று தாராளமனதுடன் கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய அரசு, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் பெறுபவர்களின் மானியத்தை இந்த ஆண்டு தொடக்கம் முதல் ரத்துசெய்திருக்கிறது.

2014-ம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வுப்படி, இந்தியாவில் உள்ள 15 சதவீதம் வீடுகள் அதாவது, கியாஸ் சிலிண்டர் வாங்குபவர்களில் 25 சதவீதம் பேர் மானியத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடிய தகுதி படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இன்னும் ஏராளமானோர் மானியம் வேண்டாம் என்று சொல்வதற்கு முன்வருவதற்கான வழிவகைகளை அரசு செய்யவேண்டும். 5 சதவீத வீடுகளில் கார் இருக்கிறது. அவர்களும் மானியம்வேண்டாம் என்று சொல்லலாம். இதுபோல, ஆதார் அடையாள அட்டையில் ஆடம்பரபொருட்கள் வைத்திருக்கிறோம் என்று கூறியவர் களையும் மானியம் வேண்டாம் என்று சொல்லச்செய்யலாம். எல்லோரையும்விட, மக்கள் பிரதிநிதிகள் தாங்களாகவே முன்வந்து மானியம் வேண்டாம் என்றுசொல்லி முன்மாதிரியாக திகழலாம். தமிழ்நாட்டை பொருத்தமட்டில், 39 பாராளுமன்ற உறுப்பினர்கள், 18 டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள், 234 எம்.எல்.ஏ.க்கள், 12 மாநகராட்சி மேயர்கள், 919 மாநகராட்சி கவுன்சிலர்கள், 124 நகராட்சி தலைவர்கள், 3,613 நகராட்சி கவுன்சிலர்கள், 528 பேரூராட்சி தலைவர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள், 655 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 6,471 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 385 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,333 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 174 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மானியம் வேண்டாம் என்றுசொல்லி புதிய சரித்திரம் படைத்தாலே, இந்தியா முழுமைக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கும்.

No comments:

Post a Comment