Search This Blog

Sunday, February 7, 2016

பற்பசை டியூபில் உள்ள கோடுகள்

நாம் பயன்படுத்தும் பற்பசை டியூப்பின் அடிப்பாகத்தில் பட்டையாக பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் கோடு இருக்கும். இந்த கோடு எதை குறிக்கிறது தெரியுமா..?  பச்சைநிறக் கோடு அந்த பற்பசை இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதையும், நீலநிறக் கோடு இயற்கையான மூலப்பொருட்கள் 75 சதவீதம், செயற்கையான மூலப் பொருட்கள் 25 சதவீதம் கலந்து தயாரிக்கப்பட்ட பற்பசை என்பதையும், சிவப்புக் கோடு செயற்கையான மூலப்பொருட்கள் 75 சதவீதம் இயற்கையான மூலப்பொருட்கள் 25 சதவீதம் கலந்து உருவாக்கப்பட்டது என்பதையும் குறிக்கும். இதுவே கருப்பு நிறம் என்றால் முழுவதும் செயற்கையான ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.  ஆனால் இதில் உண்மை இல்லை. உள்ளிருக்கும் பொருட்களில் எந்த வகையான பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை பாக்கெட் மேல் இருக்கும் பட்டியலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இதற்கு தனியாக ரகசிய கோடு ஒன்று கொடுக்க வேண்டியதில்லை.  அப்படியென்றால் இந்த கோடுகள் எதை குறிக்கின்றன? அது தயாரிப்பு மற்றும் பேக்கிங் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கிறது. நீளமாக வரும் டியூப்பை எங்கு 'கட்' செய்ய வேண்டும்? அதில் எவ்வளவு பற்பசையை நிரப்ப வேண்டும்? எந்த இடத்தில் மடித்து, அதில் தயாரிப்பு தேதியை குறிப்பிட வேண்டும்? என்பன போன்ற விவரங்கள் அந்த கோடுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும்.  இந்த கோடுகளை அதிவேகத்தில் செல்லும் இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரானிக் கண்கள் பார்த்துவிடும். அந்த கோடுகளின் அளவு தடிமன், நிறம் ஆகியவற்றைக் கொண்டு அதற்கான பேக்கிங் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதற்கான தொழில்நுட்ப குறியீடுதான் நிறத்தினாலான இந்த கோடுகள்.

No comments:

Post a Comment