Search This Blog

Monday, May 16, 2016வஞ்சிக்கப்பட்ட இனத்தின் பெண் முகம் 17/05/2016

மே.சி.ஜெமிசன் என்பவருக்கு கருப்பினத்தில் இருந்து விண்வெளிக்குப் போன முதல் பெண் என்ற பெருமை கிடைத்திருக்கிறது.  வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வளர்ச்சிக்கான பெண்முகம் என்று இவரை உலகம் கொண்டாடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்கா அனுப்பிய விண்கலம் ஒன்று வானத்தில் பறப்பதற்கு பதிலாக பசிபிக் கடலில் விழுந்தது. நாசாவிற்கு அது கவுரவப் பிரச்சினை. உடனே அடுத்த விண்கலத்தை ஏவ தயாரானது. அதற்காக 2000 விண்ணப்பங்களிலிருந்து வடிகட்டி, வடிகட்டி குறைவான நபர்களை விண்ணில் பறப்பதற்கான பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தது.  1987-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெமிசனுக்கு அடுத்த ஐந்தாண்டுகள் அதுவே வாழ்க்கையானது. இத்தனைக்கும், நாசாவிற்கு வருவதற்கு முன்பு வரை ஜெமிசன் ஒரு மருத்துவர். ஸ்டான்போர்டிலும், கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்து பொது மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் வானம், விண்மீன்கள், விண்வெளி என பால்ய காலத்து கனவு அவரை துரத்தியது. துணிந்து நாசாவுக்கு விண்ணப்பித்தார். முதல் ஆண்டு தேர்வாகாமல் நிராகரிக்கப்பட்டார். சோர்ந்துவிடாமல், அடுத்த ஆண்டு விண்ணப்பித்ததில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பின சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்  அவர். அப்போதும் விண்வெளிக்கு போவது நிச்சயமில்லை. நாசா எப்போதும் மூன்று அடுக்குகளாகத்தான் ஆட்களை தேர்ந்தெடுக்கும். விண்கலம் ஏவும் நேரத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சரியான பேக்-அப் தேவை என்பதற்காக, எப்போதும் ரிசர்வில் ஆட்கள் இருப்பார்கள். ஜெமிசனுக்கு, அவர் படித்த மருத்துவர் பட்டம் காப்பாற்றியது.

விண்கலத்தில் புவியீர்ப்பு விசையில்லாத போது மனிதர்களுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள், பாதிப்புகள் உண்டாகின்றன என்பதை துல்லியமாக அருகிலிருந்து கணிக்க வேண்டும். அந்த வாய்ப்பு மருத்துவரான ஜெமிசனுக்கு செப். 12, 1992-ல் கிடைத்தது. எண்டவர் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தில் ஜெமிசனையும் சேர்த்து ஆறு நபர்கள் பயணிக்க முடிவாயிற்று. ஜெமிசன் விண்வெளி வீரர்களுக்கான உடையை மாட்டினார். எண்டவரில் எட்டு நாட்கள், 190 மணி நேரங்கள் விண்வெளியில் மிதந்தார். எட்டு நாட்கள் கழித்து செப்டம்பர் 20-ந் தேதி அனைவரும் பூமிக்கு திரும்பினார்கள். பூமியில் காலடி வைத்த அந்த நொடியில் இருந்து கருப்பினத்தவர்களின் வரலாறு மாறியது.

Friday, May 6, 2016


ஏழைகள்  ரெயில்  எப்போது? 07/05/2016

மக்களின் அன்றாட வாழ்வில் போக்குவரத்து என்பது மிக இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். தினமும் தொழிலோ, படிப்போ, மருத்துவமோ, அல்லது சொந்த காரணங்களுக்காகவோ ரெயில் பயணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு செய்த நன்மை ஒன்று உண்டென்றால், அது நிச்சயமாக ரெயில் போக்குவரத்துதான் என்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது. நாடு முழுவதிலும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள், 2 கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது. 7 ஆயிரத்து 172 ரெயில் நிலையங்கள் இவர்களை ரெயிலில் ஏறவும், இறங்கவும் வைக்கிறது.

பயணிகள் ரெயில்களை பொறுத்தமட்டில், தென்னக ரெயில்வே பயணிகள்தான், ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம்செய்வது மட்டுமல்லாமல், பதிவுசெய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுக்கும் பயணிகள் ஒருபோதும் பதிவுசெய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் ஏறுவதில்லை என்பது, வடமாநிலங்களுக்கு ரெயில்களில் பயணம்செய்யும் ஒவ்வொரு பயணியின் அனுபவமாகும். ஆனால், புதிய ரெயில்கள் விஷயத்தில் ரெயில்வே நிர்வாகம் தென்னக ரெயில்வேவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே என்பது எல்லோருடைய ஆதங்கம் ஆகும். ரெயில் பயணம் என்பது வசதி படைத்தவர்களைவிட, சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கே அத்தியாவசிய தேவையாகும். ஆனால், ரெயில்வே நிர்வாகம் சில வழித்தடங்களில் ஓடும் ரெயில்களில் அதிக கூட்டநெரிசலோ, அல்லது ஏராளமான பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் சூழ்நிலையிலோ, அவர்களுக்கெல்லாம் வசதியாக கூடுதலாக சிறப்பு ரெயில்களை விடவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாகும். ஆனால், இப்போது ரெயில்வே நிர்வாகம் இத்தகைய நேரங்களில் விடும் சிறப்பு சுவிதா ரெயில்களின் கட்டணம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கிறது.

சாதாரண ரெயில் கட்டணங்களைவிட, மும்மடங்கு கட்டணம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றால், தூங்கும் வசதிகொண்ட பெட்டிக்கு ரூ.315 கொடுத்து டிக்கெட் எடுக்கவேண்டும். ஆனால், சுவிதா ரெயிலில் டிக்கெட் எடுத்தால் ரூ.1,135 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடிமகன் இவ்வளவு தொகை கொடுத்து பயணம் செய்யமுடியுமா? என்று கேட்டபோது, சுவிதா சிறப்பு ரெயில்களில் மொத்த இருக்கைகளின் முதல் 20 சதவீத இடங்கள் முன்பதிவுக்கு 415 ரூபாய்தான் வசூலிக்கிறோம். அதன்பிறகு ஒவ்வொரு 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத கட்டணம் உயரும். இந்த வகையில் அடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 525 ரூபாய், அதற்கடுத்த 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டின் விலை 775 ரூபாய், 4-வது 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்கு 995 ரூபாய், கடைசி 20 சதவீத இடங்களுக்கான டிக்கெட்டுக்குதான், 1,135 ரூபாய் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். இதேபோலதான் 3-வது வகுப்பு தூங்கும் வசதிகொண்ட குளிர்சாதன பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 810 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக, இந்த ரெயிலில் 3,185 ரூபாயும், 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு சாதாரண ரெயிலில் 1,140 ரூபாய், இந்த ரெயிலில் 4,470 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக, பயணிகளின் பணத்தை கறப்பதிலேயே குறியாக இருக்கும் இந்த ரெயில்வே நிர்வாகம், ரெயில்வே பட்ஜெட்டில் ஏற்கனவே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் என்ற ஏழைகள் ரெயில் அதாவது, முழுக்கமுழுக்க பதிவு செய்யப்படாத ‘அன்ரிசர்வ்டு’ ரெயில்வே பெட்டிக்கொண்ட சூப்பர் பாஸ்ட் ரெயில்களை விடும் அறிவிப்புகளை தென்னக ரெயில்வேயில் விரைவில் அறிமுகப்படுத்தவேண்டும். இதுபோல, தொலைதூர ரெயில்களில் 2 முதல் 4 வரை பதிவு செய்யப்படாத கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பையும் தென்னக ரெயில்வேயில் விரைவில் நிறைவேற்றப்படவேண்டும். இந்த அந்தியோதயா என்ற ஏழைகளின் ரெயிலையும், தீனதயாளு ரெயில் பெட்டிகளையும் விரைவில் அறிமுகப்படுத்தினால்தான், சாதாரண ஏழை, எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியுமே தவிர, சுவிதா ரெயிலால் அல்ல.


ஏன் சாப்பிடும் போது பேசக்கூடாது? 07/05/2016

மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை. வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது. சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும். இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும். சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.

சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். மனிதர் தூக்கத்தில்தானே செய்கிறார் என்று சுவாசக் குழாய் விட்டுவிடாது. உடனே அந்த உமிழ்நீரை வெளியே தள்ளும். இதைத்தான் தூக்கத்திலேயே புரையேறுதல் என்கிறார்கள். தூங்கும்போது நடக்கும் மற்றொரு முக்கியமான நிகழ்வு குறட்டை. விழித்திருக்கும்போது தாடை சதைகள் கெட்டியாக இருக்கும். தூங்கும்போது இந்த கெட்டித் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து விடும். ஆழ்ந்த தூக்கத்தில் முழுமையாக கட்டுப்பாடு இழந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அழுத்தும். இதனால் தடங்கல்கள் உண்டாகி காற்று போகும் முயற்சி தடைபடும். அப்போது ஏற்படுகிற கொர்... கொர்.. சத்தம்தான் குறட்டை விடுதல் என்கிறார்கள். குறட்டை விடுதல் சில சமயம் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் கூறுகிறார்கள் மருத்துவர்கள். குறட்டையைத் தடுக்க 500 வழிகள் இருப்பதாகவும், இதில் எது ஒத்துவருமோ அதன் மூலம் குறட்டையை கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். அதிகமாக குறட்டை விடுபவர்கள் கண்டிப்பாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்க்க வேண்டும்.

Thursday, May 5, 2016


விலங்குகளின் நுட்பம் 05/05/2016

விலங்குகள், பறவைகள் போன்ற சில உயிரினங்களுக்கு மிக நுட்பமான நுண்ணுணர்வுகள் இருக்கின்றன. இத்தாலி நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலத்த சேதம் விளைந்தது. இதை முன் கூட்டியே அறிந்திருந்தன, சில வீட்டு விலங்குகள். நிலப்பிளவு ஏற்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே நடக்கப்போகும் விபரீதத்தை அந்த உயிரினங்கள் தெரிந்து கொண்டன. அதோடு நிற்காமல் அவை அந்த இடத்தை விட்டு வெளியேறி பத்திரமான இடத்திற்கு சென்று விட்டன.

விசுவாசம் கொண்ட ஒரு நாய் மட்டும் தனது எஜமானரை விட்டுப் போக மனமில்லாமல் அவருக்கு துணையாக அங்கேயே நின்றது. அப்போதும் அது சும்மா இருக்கவில்லை. இரவு, பகல் பாராமல் குரைத்துக்கொண்டே இருந்தது. தனது எஜமானுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை அது அறிவித்துக் கொண்டே இருந்தது.

ஆனால், அந்த எஜமானர் அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர் அந்த நாய்க்கு வெறி பிடித்து விட்டதாகவே கருதினார். பொழுது விடிந்தது. நிலம் லேசாக நடுங்கத் தொடங்கியது. அந்த நடுக்கம் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து பெரிதாக ஆடியது.

அது நில நடுக்கம்தான் என்று உணர்வதற்குள் நிலம் பிளவு படத் தொடங்கியது. அந்த எஜமானர் அவசரம், அவசரமாக அங்கிருந்து ஓடத்தொடங்கினார். அதற்குள் நிலம் பிளந்து பூமிக்குள் விழுந்தார். நன்றியுள்ள நாய் முன் கூட்டியே இந்த இயற்கை சீற்றத்தை அறிவித்தும், அதைப் பற்றி முன்பே தெரிந்திருந்தும் எஜமான் மீது இருந்த விசுவாசத்தால் அவருடன் சேர்ந்து அதுவும் பூமிக்குள் விழுந்து உயிரை விட்டது.

பூகம்பம் பூமியின் மேற்பகுதியை அடைவதற்கு முன்பே பூமியின் வெகு ஆழத்தில் அதற்கான ஆரம்ப வேலைகள் தொடங்கி விடும். அப்போது அது பயங்கரமான சத்தத்தை ஏற்படுத்தும். அந்த மிகப் பெரும் ஒலி மனித காதுகளுக்கு கேட்காது. மனிதனின் காதுகள் ஒரு குறிப்பிட்ட டெசிபல் அளவு ஒலிகளை மட்டுமே கேட்க முடியும். இந்த பூகம்ப ஒலி வித்தியாசமானது என்பதால் மனிதனுக்கு அந்த சத்தம் கேட்கவே கேட்காது. ஆனால் விலங்குகளின் காதுகளுக்கு இந்த ஒலி நன்றாக கேட்கும்.

இதனால்தான் பூகம்பத்தின் போது நாய், பூனை மற்றும் சில பறவைகள் தப்பித்து விடுகின்றன. மனிதர்களுக்கு அந்த சத்தம் கேட்காததால் அதை அறிந்து கொள்ள முடியாமல் உயிரை விடுகிறார்கள்.


இந்திய உளவு நிறுவனங்கள் 06/05/2016

இந்தியாவில் மிக முக்கிய உளவு நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்று, ‘இன்டெலிஜென்ஸ் பீரோ‘, சுருக்கமாக ஐ.பி. என்று அழைக்கிறார்கள். மற்றொன்று ‘ரிசர்ச் அண்ட் அனலிசிஸ் விங்‘, இதனை சுருக்கமாக ‘ரா‘ என்று அழைக்கிறார்கள்.

உள் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள், தீவிரவாத அமைப்புகள், மக்களின் மனநிலை போன்றவற்றை உளவு செய்து வருவது ஐ.பி.யின் கடமை. இது 1885-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகிலேயே மிக பழமையான உளவு நிறுவனம் இதுதான். உள்நாட்டில் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்க உளவு பார்த்து தகவல்களை சேகரிப்பதும், அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் முக்கிய வேலை. இந்தியாவின் மற்ற பாதுகாப்புப்படை பிரிவுகளுக்கும் தகவல்களை தந்து எச்சரிக்கை செய்யும்.

அடுத்த உளவு அமைப்பான ரா. 1968-ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான மற்ற நாடுகளின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதுதான் இதன் பிரதான வேலை. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பணியை சமாளிப்பதே இதன் வேலையாக இருக்கிறது.

உலகநாடுகளுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி முடிக்க இந்த இரு உளவு அமைப்புகளுமே உதவின. பாகிஸ்தானில் இருந்து நேரடியாக தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க முடியாது என்பதால் பாதுகாப்பு குறைவாக உள்ள நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளை அனுப்பி, பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என்பதை உலகுக்கு முதலில் அறிவித்ததும் ‘ரா‘தான்.

நேபாளத்தில் இருந்து இந்தியா வந்த விமானம் 1999-ம் ஆண்டு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளில் தனது பாதுகாப்பு குறைவாக இருப்பதை உணர்ந்த ‘ரா‘ அதன்பிறகு இந்த நாடுகளில் வலுவாக காலூன்றி விட்டது. தற்போது இந்த இரு நாடுகளிலும் பாகிஸ்தானின் ஆதிக்கம் பெருமளவு குறைந்ததற்கு ‘ரா‘வின் உளவு வேலைகளே காரணம். தேவைப்படும் சமயங்களில் ஐ.பி. உளவாளிகளையும் இவர்களோடு சேர்த்துக் கொள்வார்கள்.

இவர்களுக்காக செலவு செய்யப்படும் பணத்துக்கு அரசு பெரும்பாலும் கணக்கு கேட்பதில்லை. நமக்காக உயிரை பணயம் வைத்து உளவு செய்பவர்கள் அவர்கள், பண விஷயத்திலேயே அவர்களை நம்பவில்லை என்றால் அவர்கள் தரும் தகவல்களை எப்படி நம்ப முடியும் என்கிறது அரசாங்கம். உண்மைதானே!

Tuesday, May 3, 2016


வறட்சியை தாங்கி வளரும் தாவரங்கள் - ஜீன் வங்கி 04/05/2016


நமது நாட்டின் ஒருபுறம் தண்ணீர் கிடைக்காமல் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. மறுபுறம் தண்ணீர் கிடைத்தாலும் அதை பயன்படுத்த முடியாத அளவிற்கு உப்புத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இத்தகைய நிலையை எல்லாம் தாண்டித் தான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் விவசாயமே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இத்தகைய தண்ணீர் பிரச்சினையில் இருந்து விடுபட்டு விவசாயம் செய்வதற்கு ஏற்ற தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்விற்காக ரூ.12 கோடியை ஒதுக்கி உள்ளது.

வறட்சியையும், உப்புத் தண்ணீரையும் தாங்கும் திறன் கொண்ட தாவரங்களை கண்டறிந்து, அவற்றின் ஜீன்களை பெற்று, அதனைக் கொண்டு மேலும் பல தாவர வகைகளை உருவாக்கும் திட்டத்திற்கே இந்த 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பயொடெக்னாலஜி இதை சாதித்துக் காட்டுகிறது. இதன் மூலம் வறட்சியை தாங்கும் திறன் கொண்ட ஜீன்கள் தொகுக்கப்படும். அந்த ஜீன்கள் தற்போது பயன் தந்து கொண்டிருக்கும் தாவரங்களுக்குள் புகுத்தப்படும். இதனால் நெல் போன்ற பயன்தரும் தாவரங்கள் மனிதனுக்கான பயனை எப்போதும் போல் தந்து கொண்டே வறட்சியையும் தாங்கி வளரும். இதனால் உணவு உற்பத்தி தடையின்றி நடக்கும்.

இதேபோன்ற முயற்சி விலங்குகள் மீதும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதில் இன்னுமொரு பயனும் இருக்கிறது. தாவரங்களில் மேற்கொள்ளப்படும் ஜீன் மாற்றங்களால் நல்ல சத்துள்ள உணவை தரும் வகையில் அந்த தாவரங்கள் மாற்றப்படும்.

இத்தகைய ஆராய்ச்சி மூலம் இந்தியாவில் ஏற்கனவே சத்துள்ள உருளைக்கிழங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உருளைக்கிழங்கில் மாவுச்சத்து மிக அதிகமாக இருக்கும். ஆனால், ஜீன்கள் மூலம் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள ஜீன் வங்கியில் நான்காயிரம் மருத்துவ தாவரங்களின் ஜீன்களும், 500 நார்ச்சத்து தாவரங்களின் ஜீன்களும், 100 நறுமண தாவரங்களின் ஜீன்களும், எண்ணெய் வித்துக்களின் ஜீன்களும், 400 தீவனத் தாவரங்களின் ஜீன்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வேறுபட்ட உயிரினங்கள் வாழும் பகுதிகளில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையும், வடகிழக்கு இந்தியாவும் உலகின் 25 முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கின்றன.


சனிக்கிரகத்தில்  நிலவுகள் 
 03/05/2016

சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29½ ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 34 நிமிடம் நேரம் ஆகிறது.

சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக் கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக் கோளம் என்பதையும், கடினமாக இருக்கும் அதன் உட்பகுதி மிகச் சிறியது என்பதையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம். சனியின் சராசரி அடர்த்தி 0.71 என குறைவாக இருக்கிறது.

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்குதான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், சனியின் சராசரி வெப்பநிலை மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாய்க் காணப்படுகின்றது.

நமது பூமிக்கு ஒரு நிலவு என்றால் சனிக்கு 62 நிலவுகள். இந்த நிலவுகளின் மொத்த அளவில் 90 சதவீதத்தை 'டைட்டான்' என்ற ஒரு நிலவு மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது கிட்டத்தட்ட நமது பூமி அளவுக்கு பெரியது. சனியின் இரண்டாவது பெரிய நிலவான 'ரியா'வுக்கு சுற்று வளையம் உண்டு. 10 கி.மீ.க்கும் குறைவான விட்டம் கொண்ட நிலவுகள் 34 இருக்கின்றன. 10 கி.மீ. இருந்து 50 கி.மீ.க்குள் விட்டம் கொண்ட 14 நிலவுகள் இருக்கின்றன. இவை தவிர மீதமுள்ள மிகச்சிறிய அளவு கொண்ட நிலவுகள் சனியில் இருக்கின்றன.   பிறகோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியை சுற்றி உள்ளது என்பது சனியின் சிறப்பம்சமாகும். சனியைப்பற்றிய பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப்போல குறிப்பிடும் படியாய் அதற்கு இல்லை.

சனி வளையங்கள் பற்றிய உண்மைகளை 1981 'வாயேஜர்' விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் சனியை துணைக்கோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாக தோன்றுகின்றன என்பதும், இவ்வாறு ஆயிரக்கணக்கான வளையங்கள் அதில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

சனியின் துணைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன. சனி வளையத்தின் கட்டமைப்பு சீர்குலையாமல், கோடிக்கணக்கான துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்றளவும் புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும்.

Sunday, May 1, 2016


விற்பனைப் பொருளான குடிநீர் 02/05/2016

கடந்த தலைமுறை வரை குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மக்களுக்கு மிக முக்கியமான அத்தியாவசியமான பொருளாக குடிநீர் இருந்தது. இப்போது அது கோடிகள் புரளும் மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவிட்டது.

குடிநீருக்கான வர்த்தகம் உலகம் முழுவதும் ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதனை வசப்படுத்துவதற்காக முதலாளித்துவ நாடுகள் ஒன்றோடு ஒன்று போட்டிப்போடுகின்றன. அதற்கான முதல் முயற்சிதான் குடிக்கும் குடிநீர் பாதுகாப்பற்றது என்ற கருத்தாக்கம். சாதாரணமாக நமது வீடுகளில் வரும் குழாய் தண்ணீரை குடித்தால் ஆரோக்கியம் போய்விடும். நோய்க் கிருமிகள் தாக்கும். என்ற எண்ணத்தை இந்த நிறுவனங்கள் திட்டம் போட்டுப் பரப்புகின்றன.

அதன் தாக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை குழாய் நீரை குடித்து வளர்ந்தவர்களின் வீடுகளில் இன்று மினரல் வாட்டர். ஒரு நாளைக்கு 50 ரூபாய் என்ற கணக்கில் மாதத்திற்கு குடிநீருக்காக மட்டும் 1,500 ரூபாய் செலவழிக்கிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு 552 கோடி ரூபாய்க்கு குடிநீர் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த வர்த்தகத்தையும் கைப்பற்ற தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. நீர் விற்பனை என்பது இரண்டு வகைகளில் நடைபெறுகிறது. ஒன்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நீர், மற்றொன்று மினரல் வாட்டர் என்கிற பெரிய கேன்களில் விற்கப்படும் குடிநீர். இரண்டுமே உடலுக்கு நல்லது செய்பவை அல்ல.

பாட்டில் நீரில் இனிப்பு பொருட்களோ, ரசாயனப் பொருட்களோ இருக்கக் கூடாது. சர்க்கரை சேர்க்கக் கூடாது. குறைந்த அளவு கலோரியே இருக்க வேண்டும். அதே வேளையில் பழங்கள், வாசனை பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட எசன்ஸ்களையும், சத்துப் பொருட்களையும் வாசனைப் பொருட்களையும் மிகச் சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றின் அளவு மொத்த எடையில் ஒரு சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது.

அப்படி ஒரு சதவீதத்திற்கு மேல் இது கூடிவிட்டால் அது பாட்டில் நீர் என்ற இனத்தில் இருந்து மாறி குளிர்பானம் என்ற பிரிவில் சேர்ந்துவிடும். சட்டப்படி எல்லா குடிநீரும் சோடியம் கலப்பு இன்றி தயாரித்திருக்க வேண்டும். இந்த குடிநீரும் அதிகபட்சம் 6 மாதம் வரைதான் பாதுகாப்பானது.

மினரல் வாட்டர் என்பது குடிநீரில் இயற்கையில் கலந்துள்ள தாது உப்புகளைக் குறிக்கிறது. தொடர்ந்து நீரை 180 டிகிரி சென்டிகிரேட்டில் கொதிக்க வைத்த பிறகு மீதமுள்ள தாது உப்புகளின் அளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரே இடத்தில் இருந்து கிடைக்கும் நீரிலேயே கால மாற்றத்திற்கு ஏற்ப கனிமங்களின் அளவில் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.

ஆனால், என்னதான் மினரல் வாட்டராக இருந்தாலும் அதில் எந்தவொரு தாது உப்பும் இருப்பதில்லை என்பதே உண்மை. தொடர்ந்து இப்படி சுத்தகரிக்கப்பட்ட நீரையே பருகுவதால் நீரின் மூலம் இயற்கையாக கிடைக்கக்கூடிய சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் பலவீனம் அடைகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காசு கொடுத்து மினரல் வாட்டரை வாங்குவதை விட வடிகட்டிய நீரை காய்ச்சிக் குடிப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவம் சொன்னாலும், தங்களின் வியாபாரத்திற்காக பல நிறுவனங்கள் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குழாய் நீரை கழிவுநீர் போல் சித்தரித்து மக்களை மூளைச் சலவை செய்து, தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்கின்றன என்பதே வருத்தமான உண்மை.

Saturday, April 30, 2016

காமராஜர் மதிய உணவு திட்டம்
Add caption