Search This Blog

Sunday, April 26, 2015




தலைவலியின் வகைகள்
நமக்கு வரும் தலைவலிகளை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் வருகிறது. அதாவது மனஅழுத்தம், அயர்ச்சி, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறது. இரண்டாவது வகை உடல் சம்பந்தப்பட்டது. உடல் வகை, மருத்துவ வகை காரணங்களால் வரும் தலைவலி. இது கண்ணில் அதிகப்படி அழுத்தம், பல்வலி, பீனிசம் எனப்படும் மூக்கடைப்பு (சைனஸ்), சில வகை உணவுப்பொருட்கள், மருந்து வகைகளை சாப்பிடும் காரணத்தால், தூக்கமின்மையால், மிகக்குளிர்ந்த நீரில் குளிப்பதால், சினிமா, டி.வி. ஆகியவற்றை அருகில் இருந்து பார்ப்பதால், இப்படி பலவகை காரணங் களினால் இந்த தலைவலி ஏற்படுகிறது. மூன்றாவது வகை சிறிது ஆபத்தான வகையை சேர்ந்தது. யாரோ சுத்தியால் அடித்தது போல வலிக்கும். மூளைக்குள் ஏற்படும் சின்ன ரத்தக்கசிவுகள் தலைவலியாய் தோன்றி, மூளைக்குள் வலியாக வெடிக்கும். இது ‘மெனிஞ்சைட்டிஸ்’ என்ற காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி. ‘என்ஸெபலைட்டிஸ்’ என்கிற மூளைக்குள் வீக்கம் தான் இந்த வகை தலைவலியை உருவாக்கும். தாங்க முடியாத பயங்கரமான தலைவலி இது. பெரும்பாலான தலைவலிகள் முதல் வகையை சேர்ந்தவை. இந்த வகை தலைவலி வருவது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பொறுத்தது. அதாவது, எப்படி வாழ்கிறீர்கள்? எவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள்? எந்த அளவு பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. முதல் வகையில் சேரும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி மிகவும் ஆய்வு செய்யப்பட்டு, ஏராளமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை தலைவலிக்காரர்கள் பெரும்பாலானோருக்கு தலையில் பாகம் பிரித்தது போல் ஒரு பாதியில் மட்டும் வலிக்கும். காலையிலேயே இந்த தலைவலிக்கான எச்சரிக்கை ஏற்பட்டுவிடும். தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு செயல் மந்தமாகி, மாலையில் வாந்தி வருவது போல உணர்வு ஏற்படும். சிலருக்கு கண்ணுக்குள் கலர் கலராக மாடர்ன் ஆர்ட் போல தெரியும். இதெல்லாம் மைக்ரேன் வருவதற்கான அறிகுறி. இந்த ஒற்றைத் தலைவலியை ஒரு விதமான எச்சரிக்கை என்கிறார்கள்.

Tuesday, April 14, 2015




பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்
உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம். ஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும். சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், மழை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை. பசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.