Search This Blog

Friday, February 26, 2016


சாதுர்யம் நிறைந்த சர்ச்சில் 26/02/2016

சாகசம், சாதுர்யம், சாமர்த்தியம், வீரம், துணிச்சல் என்ற அத்தனை திறமைகளோடும் இரண்டாம் உலகப் போரை சந்தித்து இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தவர் தான், வின்ஸ்டன் சர்ச்சில். போர்க்களத்தில் நாட்டை வழிநடத்த சர்ச்சிலை விட சிறந்த பிரதமர் கிடையாது என்று புகழ்கின்றனர், இங்கிலாந்து மக்கள்.

1945-ம் ஆண்டு பிரதமராக இருந்த சர்ச்சிலின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. போரைக் கடந்து வந்த இங்கிலாந்திற்கு புதிய பிரதமர் தேர்தல் நடந்தது. இங்கிலாந்தின் ராணுவ வீரர்களை கிளர்ந்தெழச் செய்த சர்ச்சிலின் பேச்சுத்திறன், வாக்காளர்களை கவருவதற்கு பயன்படவில்லை. ஆம், சர்ச்சிலை எதிர்த்து போட்டியிட்ட லேபர் கட்சியினர் பெரும் வெற்றி பெற்றனர்.

“போர் நடக்கும் போது பிரதமராக இருக்க சர்ச்சிலை தவிர தகுதியானவர் யாருமே கிடையாது. ஆனால், போரின் இடிபாடுகளில் இருந்து நாட்டை மீட்டு சீரமைக்கும் பணி என்பது முற்றிலும் மாறுபட்டது. அதற்கு சர்ச்சில் பொருத்தமானவர் இல்லை“ என்று மக்கள் முடிவு கட்டிவிட்டனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவரான அவர், அடுத்த தேர்தலில் (1951) வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி விட்டார்.

சர்ச்சிலுக்கு சில சென்டிமெண்டுகள் இருந்தன. அவர் தனது கைத்தடியை எப்போதும் கூடவே வைத்திருப்பார். ஒருமுறை மறந்து வைத்துவிட்டுப் போன போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அதன்பின் கைத்தடி மீதான சென்டிமெண்ட் இன்னும் அதிகமானது.

இரண்டாம் உலகப்போரில் பங்கெடுப்பு, இரண்டு முறை இங்கிலாந்தின் பிரதமராக இருந்து ராஜதந்திர வித்தைகளை செய்தது, உலக சரித்திரத்தை திசை திருப்பியது என்று வாழ்நாள் முழுவதும் பரபரப்பாக இருந்தாலும், சர்ச்சில் தனக்கென்று நேரம் ஒதுக்கிக்கொண்டு தன்னுடைய கலை ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய ‘தி செகண்ட் வோர்ல்ட் வார்‘ புத்தகம் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. சர்ச்சில் மிகச் சிறந்த ஓவியரும் கூட.

சர்ச்சிலின் கடைசி காலத்தில் ஒருவர், ‘மரணம் என்றால் உங்களுக்கு பயமா?‘ என்று அவரிடம் கேட்டார். அதற்கு சர்ச்சில் ‘நான் என்னுடைய தயாரிப்பாளரை (கடவுள்) நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் தயாரா என்று தெரியவில்லை‘ என்று பதில் அளித்தார். 1965 ஜனவரி 25-ல் தனது 90-வது வயதில் சர்ச்சில் மறைந்தார்.

No comments:

Post a Comment