Search This Blog

Tuesday, February 23, 2016


இவர்களுக்கு  என்ன  நியாயம்? - மும்பை குண்டு வெடிப்பு (22/02/2016)

இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் மும்பை நகரில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் 4 நாட்கள் நடந்தன. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அனுப்பிய 10 தீவிரவாதிகள், மும்பை நகருக்குள் புகுந்து 12 இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசியும், துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் 166 மக்களை கொன்றனர். இவர்களில் கடமை தவறாத துணிச்சல்மிக்க போலீஸ் அதிகாரிகள், காவலர்களும் அடங்கும். 308 அப்பாவி மக்கள் காயமும் அடைந்தனர். இந்த 10 தீவிரவாதிகளில் 9 பேர்களை உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய போலீசாரும், ராணுவத்தினரும் சுட்டுக்கொன்றுவிட்டனர். சதிகாரர்களில் ஒருவனான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்குப்பிறகு தூக்கிலிடப்பட்டான். இந்த கொடூரசம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான இடங்களை கண்டறிந்து, தீவிரவாதிகளுக்கு துப்பு சொன்னதற்காக பாகிஸ்தான் வம்சாவளியான டேவிட் ஹெட்லியை, அமெரிக்க உளவு நிறுவனம் 2009-ம் ஆண்டு கைது செய்தது. அவருக்கு அமெரிக்க கோர்ட்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, தற்போது அமெரிக்க சிறையில் அடைத்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு சாட்சி அளித்து வருகிறார். இந்த சாட்சியத்தில் அவர் மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை அளித்ததோடு மட்டுமல்லாமல், குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடியும், உள்துறை மந்திரியாக அமித் ஷாவும் இருந்த நேரத்தில், 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி குஜராத்தில் ஆமதாபாத் அருகே நடந்த ஒரு என்கவுண்ட்டர் வழக்கில் ஒரு முக்கியமான சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவலைத்தந்துள்ளார். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கலவரத்துக்கு பழிவாங்குவதற்காக வந்ததாக மும்பையை அடுத்த மும்பிராவைச்சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பரான ஜாவீது ஷேக் என்று சொல்லப்படும் பிரானேஷ் பிள்ளை, பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோஹர் ஆகியோரை குஜராத் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நரேந்திர மோடியைக் கொல்வதற்காக வந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது போலி என்கவுண்ட்டர் என்று டி.ஐ.ஜி. வன்சாரா உள்பட ஜி.எல்.சிங்கால், பி.பி.பாண்டே என்று 8 போலீஸ் அதிகாரிகளை குற்றம்சாட்டி இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தபிறகு, குஜராத் ஐகோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த உயர் போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இப்போது ஹெட்லி, கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படையை சேர்ந்தவர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தான் புலன் விசாரணை நடவடிக்கையில் உள்ள முன்னாள் உளவுப்பிரிவு சிறப்பு இயக்குனர் ராஜேந்திர குமாரும் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் சொல்லிவந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மீண்டும் ஒரு பாரபட்சமற்ற புலன்விசாரணை நடத்தி யார் சொல்வது உண்மை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை ஹெட்லி சொல்வது உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிறையில் இருந்ததற்கும், அவர்களின் பணிப்பாதிப்புக்கும் என்ன நியாயம் கிடைக்கப்போகிறது?. நரேந்திர மோடி, அமித் ஷா மீது அரசியல் ரீதியாக சொன்ன பழிச்சொற்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கப்போகிறது?, இனி எந்த வழக்கு என்றாலும், ஆழமாக விசாரணை நடத்தவேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துவிடலாம். ஆனால், ஒரு நிரபராதி அநியாயமாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.

No comments:

Post a Comment