Search This Blog

Thursday, February 18, 2016


சியாச்சின்  மலையில்  பாதுகாப்பு  அவசியம் 19/02/2016

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லை   பகுதிகளெல்லாம் பல  ஆபத்தான மலைப் பகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. மனிதகுலம் வாழவே முடியாத இடங்களில் அதிலும் குறிப்பாக, சியாச்சின் பனிமுகட்டில் முட்டளவுக்கும்மேல் பனிக்குள் நின்றுகொண்டு இருநாட்டு வீரர்களும் உயிரைப்பணையம்வைத்து காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சியாச்சின் பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமானதுதான், முன்பெல்லாம் இந்திய, பாகிஸ்தான் வரைபடங்களை பார்த்தால், இந்திய வரைபடத்தில் சியாச்சின் பகுதி இருக்கும். பாகிஸ்தான் வரைபடத்தில் சியாச்சின் இல்லாமல் இருக்கும்.

1970-ம் ஆண்டுகளில் ஒரு  அமெரிக்க  பூகோள  வரை படத்தில் திடீரென சியாச்சின் பகுதியை பாகிஸ்தானுக்குள் வைத்து வரைந்ததால், பாகிஸ்தான் மலையேறும் பயிற்சி வீரர்களுக்கு சியாச்சின் போக அனுமதி வழங்கத்தொடங்கியது. அதிலிருந்து 1984-ம் ஆண்டு முதல் 19 ஆயிரத்து 600 அடி உயரமுள்ள சியாச்சின் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் காவலுக்கு அனுப்பப்பட்டனர். அந்தப்பக்கம் பாகிஸ்தான் வீரர்களும் நிறுத்தப்பட்டனர். இந்திய ராணுவத்தில் வீரத்திற்கு பெயர்போனது மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்று சொல்லப்படும் படைப்பிரிவு ஆகும். 1988 முதல் மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள் படைப்பிரிவு சியாச்சின் எல்லையை பாதுகாக்க செல்லத்தொடங்கியது. இந்தப்பகுதியில் அடிக்கடி பனிப்பாறைகள் சரிந்துவிழுந்து, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு உயிரோடு சமாதி கட்டிவிடும். சியாச்சின் போனால் திரும்ப வந்தால்தான் நிச்சயம் என்ற வகையில், ஒவ்வொரு படைப்பிரிவும் 90 நாட்களுக்கு காவலுக்கு அனுப்பப்படும். அந்தவகையில், கடந்த 30 ஆண்டுகளில் இந்திய  பகுதியில்  இதுபோன்ற  பல  பனிச்சரிவுகளால் 879 விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோய்விட்டன.

சமீபத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்டை சேர்ந்த 10 வீரர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தபோது, மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று சரிந்துவிழுந்து, 10 வீரர்கள் உயிரை பறித்துவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஹவில்தார் ஏழுமலை, இருமுறை சியாச்சினில் பணியாற்றிய லான்ஸ் ஹவில்தார் எஸ்.குமார் (மதுரை மாவட்டம், சொக்கதேவன் பட்டியை சேர்ந்தவர்), ராணுவ வீரர் ராமமூர்த்தி  (கிருஷ்ணகிரி  மாவட்டம்,  குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர்), ராணுவ வீரர் ஜி.கணேசன் (தேனி மாவட்டம், குமணன்தொழுவைச் சேர்ந்தவர்) ஆகிய 4 வீரத்தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இந்திய பகுதியில் சியாச்சின் பாதுகாப்புக்காக தினமும் ரூ.5 கோடி செலவழிந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் டெல்லியில் ‘தந்தி’ டி.வி.க்கு, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித் அளித்த சிறப்பு பேட்டியில், ‘பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளுமே பரஸ்பரமாக சியாச்சினிலிருந்து படைவீரர்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பொதுசபையில் குறிப்பிட்டதைக்கூறி, விரைவில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, மேலும் மனித உயிர் இழப்புகள் ஏற்படாமல் தடுக்க, இந்த யோசனையை செயல்படுத்த முன்வரலாம்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார். ஆனால், இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியமில்லை. இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளுக்கிடையே 2,910 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லை இருக்கிறது. இதில், ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதியில் மட்டும் 772 கிலோமீட்டர் எல்லைக்கோடு இருக்கிறது. அதில் 550 கிலோமீட்டர் தூரத்துக்கு வேலி போடப்பட்டுள்ளது. 76 கிலோமீட்டர் சியாச்சின் பனி முகடு. இந்த எல்லைப்பகுதி முழுவதும் போர் பதற்றம், தீவிரவாதிகள் ஊடுருவல் என்று பல விஷயங்களில் பாதுகாப்பு இருக்கவேண்டிய நிலையில், எல்லா இடங்களிலும் ராணுவ வீரர்கள் போர் தளவாடங்களுடன் தயார் நிலையில் நின்றுகொண்டு இருக்கும்போது, சியாச்சின் பனி முகட்டில் 76 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டும் படையை விலக்கினால், அதை பயன்படுத்தி அந்த இடங்கள் வழியாக ஊடுருவல் நடந்துவிடும்.

அமெரிக்கா-கனடா எல்லையில் பரஸ்பர ராணுவ காவலே கிடையாது. ஏனெனில், அவர்கள் நட்பு நாடுகள். அதுபோல, இந்தியா-பாகிஸ்தான் நட்பு நாடுகளாக இருந்தால் மட்டுமே எல்லையில் ராணுவத்தை விலக்க முடியும்.

No comments:

Post a Comment