Search This Blog

Thursday, July 9, 2015



உப்புக்கு வேலி

வேலி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதென்ன உயிர்வேலி? மரங்கள், செடிகள் போன்ற உயிருள்ள பொருட்களை கொண்டு அமைக்கப்படுவது தான் உயிர்வேலி. பெரிய விளைநிலங்களை விலங்குகள், மனிதர்கள் மற்றும் பெரும் காற்றில் இருந்து பாதுகாக்க இப்படிப்பட்ட வேலிகளை விவசாயிகள் அமைப்பார்கள். இது அதிகபட்சமாக ஓரிரு கி.மீ. நீளம்தான் இருக்கும். ஆனால், ஒரு அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான கி.மீ. நீளத்துக்கு உயிர்வேலி அமைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். கிட்டத்தட்ட 6,430 கி.மீ. நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய வேலி உருவாக்கப்பட்டது இந்தியாவில். அதை அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். மராட்டியத்தில் உள்ள பர்ஹான்பூரில் ஆரம்பித்து மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் ணீஉள்ள சிந்து மாகாணத்தில் சென்று முடிகிறது அந்த வேலி. 1803-ம் ஆண்டில் வேலியை அமைக்கத் தொடங்கியவர்கள், 1843-ல் முடித்தார்கள். 12 அடி உயரம் கொண்ட அந்த உயிர்வேலி முள்மரங்கள் வளர்க்கப்பட்டு இணைத்துக்கட்டி உருவாக்கப்பட்டது. அந்த வேலியை கடந்து எவரும் போக முடியாது. இந்த உயிர்வேலியை பராமரிக்கவும் பாதுகாக்கவும் 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் முழுநேரப் பணியில் இருந்தார்கள். கிட்டத்தட்ட 40 வருடங்களாக கடினமான மலைகள், பொட்டல்கள், விளைநிலங்கள், பாலைவனங்கள், கிராமங்கள், நகரங்களில் இந்த உயிர்வேலியை எதற்காக அமைத்தார்கள்? காரணம் தெரிந்தால் இன்று நமக்கு சிரிப்புதான் வரும். ஆனால், அன்றைக்கு அது வருமானம் அள்ளித்தரும் ஒரு பொருளாக இருந்தது. அந்த பொருள் உப்பு. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் மிக முக்கிய வருமானமே அவர்கள் உப்புக்கு விதித்த உள்நாட்டு சுங்கவரிதான். அந்த வரியை வசூலிக்கவும் உள்நாட்டு உப்புப் பரிமாற்றத்தை தங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் தான் இப்படியொரு பிரமாண்ட வேலி. இந்தியாவில் உப்பு அதிகமாக கிடைக்கும் இடம் குஜராத்தில் உள்ள கட்ஜ் வளைகுடா பகுதிதான். அங்குள்ள கடலில் பெரிய நதிகள் எதுவும் கலப்பதில்லை. அதனால், அங்கு உப்பின் அடர்த்தி அதிகம். அதேபோல் காஷ்மீரின் கடைசி எல்லையாக இருந்த (தற்போது பாகிஸ்தானில் இருக்கும்) இமயமலையில்தான் உலகின் மிகப் பெரிய உப்பு மலைகள் உள்ளன. அங்கிருந்து மிக மிக சுத்தமான உப்பு மிக மலிவான விலையில் கிடைத்தது. இந்த உப்புதான் திபெத், சீனா போன்ற நாடுகளின் உப்புத் தேவையை நிவர்த்தி செய்தது. ஆங்கிலேயர்களின் தலைநகராக இருந்த கொல்கத்தாவிலோ நிலைமை வேறு. பிரம்மபுத்ரா, கங்கை போன்ற வற்றாத ஜீவநதிகளின் தண்ணீர் பெருமளவு கலப்பதால், அங்குள்ள கடல்நீரில் உப்பின் அடர்த்தி மிக மிகக் குறைவாக இருந்தது. அந்த உப்பை எடுப்பதற்கு அதிக செலவாகியது. இதனால், இந்தியாவின் உப்பு தேவையை மேற்கு கடற்கரை பகுதியே நிவர்த்தி செய்தது. ஒரு மாதத்துக்கு ஆகும் உப்பின் செலவு மொத்த உணவு செலவைவிட அதிகம். வடஇந்தியாவில் இருக்கும் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும், உப்பு எவ்வளவு வருமானம் தரும் பொருள் என்று... அதற்காகத்தான் ஆங்கிலேயர்கள் இவ்வளவு பெரிய வேலியை அமைத்தார்கள். 1879-ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்து செய்யும் வரை அந்த பிரமாண்டமான வேலி உயிர்ப்போடு இருந்தது. இன்று அதன் சுவடு கூட தெரியவில்லை.

No comments:

Post a Comment