Search This Blog

Tuesday, July 14, 2015



மிகப்பெரிய அறுவை சிகிச்சை
வரலாற்றுக் காலத்தில் வைத்திய முறையில் எந்த வகை நோய்க்கும் உடலுக்குள் செல்லும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டு வந்தது. உறுப்பு உபாதைகள், உடல் காயங்கள், கட்டிகள் போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் இதே போன்ற உள் மருந்து, சூரணம், லேகியம் ஆகியவையே கொடுக்கப்பட்டன. பாதிப்பு உண்டாக்கும் கட்டிகள், உறுப்புப் பகுதிகள் அந்நாட்களில் உடலில் இருந்து அகற்றப்படாமல் மருந்து மூலமே குணமாகி விடும் என்றே நம்பினார்கள். இதனால் கொடிய நோய் வாய்ப்பட்டவர்கள் பலர் அதிக எண்ணிக்கையில் இறந்து போனார்கள். 16-ம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை முறை அறிமுகம் ஆனது. முதன் முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனி நாக்கில் இருந்த ஒரு சிறு கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்த முதல் அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா? 

ஒரு எரியும் மெழுகுவர்த்தியும், குறடு ஒன்றும், நோயாளி வலி தாங்க முடியாமல், துள்ளி எழுந்து விடாமல் இருக்க, அமுக்கி பிடித்துக் கொள்ள 2 வேலையாட்களும் இருந்தனர். சில காலம் சென்ற பின் விஞ்ஞான வளர்ச்சியையொட்டி மருத்துவமும் முன்னேற அறுவை சிகிச்சை முறையும் மிகவும் பிரபலம் அடைந்தது. உறுப்புக்களை மாற்றி வைத்து தைக்கும் அளவுக்கு அறுவை சிகிச்சைகள் முன்னேற்றம் பெற்றன. இந்த முன்னேற்றத்துக்கு ஒரு மைல் கல்லாக சில ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக ஆப்பிரிக்காவில் டாக்டர் கிறிஸ்டியன் மெர்னார்டு செய்த அறுவை சிகிச்சை விளங்கியது. இது ஒரு மிகச் சிறந்த, கடினமான அறுவை சிகிச்சை என ஒப்புக் கொள்ளாத மருத்துவ நிபுணரே உலகில் எவரும் இல்லை. ஆனால் இதைவிட மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்று அமெரிக்காவில் நடந்தது. இந்த சிகிச்சையில் 90 கிலோ எடை உள்ள கர்ப்பப் பை கட்டி ஒன்றினை 30 வயதுப் பெண்ணின் வயிற்றில் இருந்து எடுத்தார்கள். 

கலிபோர்னியாவில் பல்கலைக்கழக மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 7 மருத்துவர்கள் கொண்ட குழு 1978-ம் ஆண்டு மே மாதம் இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்தது. இந்த அறுவை சிகிச்சையின்போது வெளிப்பட்ட கட்டி 74 லிட்டர் நீராக உடைந்து வெளியேறிய பின்னும் 18 கிலோ எடை சதைப் பிண்டமாக இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன் 172 கிலோ எடையில் இருந்த அந்த நோயாளி சிகிச்சை முடிந்ததும் 82 கிலோ எடையானார் என்றால் இது எவ்வளவு பெரிய அளவில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment