Search This Blog

Monday, July 6, 2015


மொழியும், ஒலியும்

பேசப்படுவதே மொழி. ஒலியை அடிப்படையாகக் கொண்டதே மொழி. செயற்கையாக பல ஒலிகளை மனிதன் ஒலித்து தன் கருத்தை பிறருக்கு அறிவிப்பதே மொழி. இத்தகைய மொழி ஒன்றேயானாலும் அது வட்டாரத்திற்கு, வட்டாரம், இடத்திற்கு இடம் சில மாறுபாடுகளை அடைந்து காணப்படும். இந்த மாறுபாடுகள் பேச்சு முறையில் ஏற்பட்ட மாறுபாடுகளுக்கு ஏற்பவும், உள்ளூர் வழக்கத்திற்கு ஏற்பவும் மாறுபடும். ஆனாலும் மூல மொழியில் இருந்து பெரும்பாலும் மாறுவதில்லை. அப்படி மாறுபாடு அதிகமாகி விட்டால் அது ஒரு தனி மொழியாகி விடும். இவற்றை ஆங்கிலத்தில் ‘டையலக்டஸ்’ என்றும், தமிழில் ‘திசை மொழி’ என்றும் குறிப்பிடுகிறோம். கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு இவை யாவும் தமிழின் திசை மொழிகளே. நாளடைவில் இவற்றின் வேற்றுமை அதிகமாகி விட்டதால் இந்த திசை மொழிகள் தனி மொழிகள் ஆகி விட்டன. எழுத்து வடிவிலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகள் கிரந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழுடன் ஒரு சம்பந்தமும் இல்லாதபடி மாறிவிட்டன. துளுவுக்கு சமீபத்தில்தான் எழுத்து வடிவம் உருவானது. அதற்கு முன் அது வெறும் பேச்சு, வழக்கு மொழியாக மட்டுமே இருந்தது. எது உண்மையான மொழி. எது வட்டார மொழி என்பதில் மொழி வல்லுநர்களிடம் கூட குழப்பம் இருக்கிறது. என்றாலும் உலகம் முழுவதும் இன்று 2500 முதல் 5000 மொழிகள் வரை உள்ளன. மொழிகள் எப்படி தோன்றியிருக்கும் என்பதிலும் நிறைய கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. மொழியின் தோற்றம் பற்றி மாக்ஸ்முல்லர் 3 வகையான கொள்கைகளை கூறியிருக்கிறார். முதல் கொள்கைக்கு ‘பவ்-வவ்’ (‘பௌ’-‘வெள’) கொள்கை என்று பெயர் வைத்திருக்கிறார். இதன்படி ஆதிகால மனிதன் நாயைக் குறிப்பிட வேண்டும் என்றால் அது கத்துவது போல் ‘லொள்’, ‘லொள்’ என்று கூறியிருப்பான். பூனையை ‘மியா’- ‘மியா’ என்று சொல்லியிருப்பான். இவ்வாறு இன்றுள்ள பல உயிரினங்களின் பெயரை நாம் ஆராய்ந்தால் அதன் மூல வேர்ப்பகுதி அந்த விலங்கு ஏற்படுத்திய ஒலியை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். 2-து கொள்கை, உணர்ச்சி வசப்படும்போது இயல்பாக எழும் ஒலிக் குறிப்புகளே மொழிக்கு அடிப்படை என்கிறார். உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் என இதை நாம் கருதலாம். கோபத்தில் கத்துவது, காதல் வயப்படும் போது காதல்- புலம்பல் இவற்றை இதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர். வலியால் ஓ, ஆ, என கத்துவது, வியப்பால் ஆ என்பது போன்ற எல்லாம் உணர்ச்சி வெளிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. கலகலவெனச் சிரிப்பதும் ஒரு வித மகிழ்ச்சி உணர்வே. மொழிக்கு உணர்ச்சிகள் அடிப்படையாக உள்ளதை இந்த 2-வது கொள்கை விளக்குகிறது. 3-வது கொள்கை ‘யோ--டோ’ என்பது. ஒரு செயலைச் செய்யும் போது இயற்கையாக எழுப்பும் ஒலிக்குறிப்பு. ஒரு கயிற்றை இழுக்கும் போதோ, நடனம் ஆடும் போதோ பெருமூச்செறிதல் போன்றவை. இன்றைக்கும் கூட கடினமான காரியத்தை செய்யும் போது அம்மா, அப்பா, ஐயோ, ஹை போன்ற ஒலிகள் நம்மை அறியாமலேயே பிறக்கின்றன. ஐலேசா, ஏலேலோ, போன்ற பாடல்களும் இந்த கொள்கையின் அடிப்படையில் பிறந்தவைதான். ஒவ்வொரு தொழில் செய்யும் போதும் நாம் ஒவ்வொரு பாட்டைப் பாடுகிறோம் அல்லவா. இந்த மாதிரி ஒவ்வொரு முயற்சிக்கும் ஒவ்வொரு வித ஊக்க ஒலி ஆதியில் தோன்றி மொழியாக வளர்ந்திருக்கலாம் என்பதுதான் இந்தக் கொள்கையின் கருத்து. மொழிகள் வளர்ச்சி அடைவதற்கு முன்பு இத்தகைய ஒலிக் குறிப்புகள் அதற்கு அடிப்படையாக இருந்திருக்கலாம். மொழியின் அடிப்படை தத்துவமே. நமது கருத்தைப் பிறருக்கு அறிவிப்பதும், தாம் பிறர் கருத்தை அறிந்து கொள்வதும், அதற்கேற்ப எதிர்வினை ஆற்றுவதும் தான். மாக்ஸ்முல்லர் குறிப்பிட்ட இந்த 3 கொள்கைகளும் மொழி தோன்றுவதற்கு அடிப்படைக் காரணங்கள்.

No comments:

Post a Comment