Search This Blog

Saturday, July 25, 2015


ஆசியாவின் முதல் தேசிய பூங்கா
நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும் அரசு அதிகாரிகள் பலரை உருவாக்கும் பயிற்சி மையங்கள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ளன. இந்த மாநிலம் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. இங்கு தான், இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் பூங்கா உள்ளது. இது 1936-ல் தொடங்கப்பட்டது. அப்போது இந்த பூங்காவின் பெயர் ஹெய்லி தேசிய பூங்கா. இங்கு தான் முதன்முதலில் புலிகளை பாதுகாக்கும் மையம் தொடங்கப்பட்டது. அரிய வகை விலங்கினமான பெங்கால் டைகர்ஸ் என்று சொல்லப்படும் வங்காளப் புலிகள் இந்த பூங்காவில் மட்டுமே அதிக அளவு காணப்படுகின்றன. இந்த பூங்கா 201 மைல் பரப்பளவு கொண்டது. இதில் 73 சதவீதம் வனப்பகுதியாகும். 10 சதவீதம் பசும்புல் தரையை கொண்டது. இங்கு மரங்களில் வாழும் 110 உயிரினங்களும், 50 வகையான பாலூட்டிகளும், 580 வகையான பறவை இனங்களும், 25 அரியவகை உயிரினங்களும் உள்ளன. இந்த பூங்கா உருவாக்கப்படுவதற்கு முன்பு இந்த பகுதி தெஹ்ரி கார்வால் என்ற மன்னரின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. போக்சாஸ் என்ற பழங்குடி மக்கள் இந்த பகுதியில் குடியேறி பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். ஆனால் 1860-களில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது இவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வனப்பகுதியை பாதுகாப்பதில் பெரும் முயற்சி எடுத்தவர் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரி மேஜர் ரம்சே ஆவார். அவர் தான் முதன் முதலில் இந்த வனப்பகுதியை பாதுகாக்க, 1868-ல் வனத்துறை கட்டுப்பாட்டில் இந்த பகுதியை கொண்டு வந்தார். பின்னர் 1879-ல் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1900-ல் இந்த வனப்பகுதியில் ஒரு தேசிய பூங்கா உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் நிர்வாகம் 1907-ல் தனது முயற்சியை தொடங்கியது. 1930-ல் இந்த பகுதி பிரிட்டிஷ் அலுவலர் ஜிம்கார்பெட் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போதைய கவர்னர் மால்கம் ஹெய்லி பெயரில் 125 மைல் பரப்பளவில் தேசிய பூங்காவாக 1936-ல் உருவாக்கப்பட்டது. ஆசியாவின் முதல் தேசிய பூங்காவும் இது தான். இந்த வனப்பகுதியில் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, வீட்டு உபயோகத்துக்கான மரங்கள் வெட்டுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 2-ம் உலகப்போரின் போது இந்த பூங்காவில் விலங்குகளை வேட்டையாடி, கடத்தி செல்வதும், அளவுக்கதிகமாக மரங்கள் வெட்டுவதும் நிகழ்ந்தது. பின்னர் இந்த பூங்கா 1955-ல் ராம்கங்கா தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மறுபடியும் 1956-ல் கார்பெட் தேசிய பூங்காவாக பெயர் மாற்றம் பெற்றது. இந்த பெயர் பூங்காவை உருவாக்கிய ஜிம் கார்பெட் நினைவாக வைக்கப்பட்டது. வங்கப்புலிகள் தான் இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். அதற்கு அடுத்த இடத்தை யானைகள் பிடித்துள்ளன. இவை இரண்டும் அதிக அளவில் காணப்படுவது இந்தியாவில் இந்த ஜிம் கார்பெட் பூங்காவில் மட்டுமே. 1993- முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்ற காலாமாகும். இங்கு ஜீப், டிரக் ஆகியவற்றில் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். வனத்துறை சார்பில் தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment