Search This Blog

Monday, July 13, 2015


சிலந்திகள் பலவிதம்
சிலந்தி வலை அபூர்வமானது. இந்த வலையை போலவே சிலந்தி பூச்சியும் ஆச்சரியம் நிறைந்தது. எந்த சூழலிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் சிலந்திகள் காணப்படும். வானம், தண்ணீர், தரை, தரைக்கு அடியில் என எல்லா இடங்களிலும் சிலந்திகள் வாழக்கூடியவை. கண்ணுக்கு தெரியாத உருவத்தில் இருந்து 3 அங்குலம் வரையிலான சிலந்திகள் உள்ளன. ஒரு வருடத்தில் இருந்து 15 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன. தண்ணீரே கிடைக்காத இடத்தில் கூட ஒரு வருடம் வரை உயிரை தக்க வைத்துக் கொள்ளும் திறமை சிலந்திகளுக்கு உண்டு. சிலந்தியை பூச்சி வகையில் சேர்க்கக்கூடாது என்கிறார்கள், விஞ்ஞானிகள். சிலந்திக்கு எட்டுக்கால், எட்டுக்கண் உண்டு. இறக்கை கிடையாது. உடல் இரண்டு பாகங்களைக் கொண்டது. சிலந்தி பின்னும் வலை ஆச்சரியமான ஒன்று. சிலந்தி வலைக்கான நூல் அதன் அடிவயிற்றில் இருந்து மிக நுட்பமான துவாரங்கள் மூலம் வெளியே வருகிறது. வெளிவரும் போது திரவ நிலையில்தான் இருக்கும். காற்று பட்டதும் இறுகி நூல் போன்று ஆகிவிடும். சிலந்தி நூல்களில் பலவகை உண்டு. ஒட்டிக்கொள்ளும் நூல் ஒருவகை. இந்த நூல்கள் மூலம்தான் இரை கிடைக்கிறது. பசையுள்ள நூலில் பறந்து வரும் பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. அதில் இருந்து அந்த பூச்சிகளால் தப்ப முடிவதில்லை. சிலந்தி வலைக்கு குறுக்கே அமைக்கப்படும் நூல் கொஞ்சம் வலுவாக இருக்க வேண்டும். இதற்காக அமைக்கப்படும் நூல் ஒட்டாத வகை. மேலும் முட்டையிடும் போது அதை பாதுகாப்பாக சுருட்டி வைக்க ஒரு வகை நூலை பயன்படுத்துகிறது. இந்த நூல் பஞ்சு மெத்தை போல் இருக்கும். வலுவான நார் நாராக இருக்கும். சிலந்தி வலைகளிலும் நிறைய வடிவங்கள் இருக்கின்றன. வட்ட வடிவ வலை இரையை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. முதலில் சுமாராக ஒரு நீண்ட சதுரம் அமைத்துக் கொள்கிறது. இதுதான் அதன் அஸ்திவாரம். அதன்பின் குறுக்கு கோடுகள் அமைக்கின்றன. அதற்கடுத்து மூன்று அல்லது நான்கு சுற்றுக் கோடுகள் போடும். கடைசியில் குறுக்கு கோடுகள் போடும்போது அதனுடன் பிசினை சேர்த்துக் கொள்கிறது. சிலந்தி வலைகளில் சில தட்டையாக இருக்கும். சில வட்ட வடிவமாக இருக்கும். புனல் போல் சில வலைகள் இருக்கும். சில சிலந்திகள் பாட்டில் போல ஓட்டைப் போட்டு மூடியை மறித்து வைத்திருக்கும். மற்றொரு வகை பூமியில் துளை போட்டு அதன் சுவர்களில் கூடு கட்டி இருக்கும். நீரில் வாழும் சிலந்திகளும் உண்டு. மணி வடிவத்தில் நீர்பரப்புக்கு கீழே ஒரு அறை போன்று கட்டி முட்டை இட்டுக் கொள்கிறது. அதில் காற்றை நிரப்பி முட்டையை வைக்கிறது. எல்லா சிலந்திகளும் வலை பின்னுவதில்லை. பல்லியைப் போல் மெதுவாக ஊர்ந்து சென்று பூச்சிகளை பிடிக்கிற சிலந்திகளும் இருக்கின்றன. உலகில் இப்படி பலவகை சிலந்திகள் உள்ளன.

No comments:

Post a Comment