Search This Blog

Tuesday, July 7, 2015


விளம்பரம் உருவான கதை

விளம்பரம் இல்லையென்றால் எந்த பொருளையும் விற்கமுடியாது என்ற நிலைதான் நிலவுகிறது. அந்த அளவிற்கு எல்லா துறைகளிலும் விளம்பரம் ஆட்சி செய்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் பல வடிவங்களில் விளம்பரம் நம் கண்ணில் படுகிறது. இந்த விளம்பரம் உருவான கதை சுவாரஸ்யமானது. மனித சரித்திரத்தில் வர்த்தகம் என்று தொடங்கியதோ, அன்றே விளம்பரமும் தொடங்கிவிட்டது. வியாபாரி, தான் விற்கும் பொருளின் சிறப்புகளை, மக்களுக்கு எடுத்துக் கூறியது தான் முதல் விளம்பரம். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் பொருட்களின் அருமை, பெருமைகளை தொண்டை கிழிய கத்தி எடுத்துரைத்தார்கள். இப்படி சொல்வதற்காகவே வேலையாட்களை வைத்திருந்தார்கள். எத்தனை நாளைக்குத்தான் இப்படி கத்துவது என்று நினைத்த வியாபாரிகள், மவுன விளம்பரமாக கருதப்படும், சுவர் விளம்பரத்தை செய்யத் தொடங்கினர். பொருட்களை விற்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் சுவரில் பொருளின் பெருமைகளை எழுதி விளம்பரம் செய்தார்கள். 

கி.பி. 1450-ல் அச்சுத்தொழில் அறிமுகமானது. அதன்பின் விளம்பரத்துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. இது எளிமையாகவும் மலிவாகவும் இருந்தது. 1460-ல் ‘வில்லியம் காக்ஸ்டன்’ என்பவர் முதன் முதலாக சமயம் தொடர்பான ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலை மக்களிடையே அறிமுகப்படுத்த விளம்பரக் கலையை பயன்படுத்தினார். பின்னர் செய்தித்தாள் தொடங்கப்பட்டது. அந்த அறிமுகத்திற்குப் பிறகு விளம்பர உலகில் பெரும் புரட்சியே ஏற்பட்டது எனலாம். தற்போது வர்த்தகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், சமூகத் தொண்டர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் போன்றவர்களும், அரசும் மக்களுக்கு செய்திகளை சொல்ல செய்தித்தாள் விளம்பரங்களை பயன்படுத்துகின்றனர். விளம்பரங்களுக்காக மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. 1968-ல் மட்டுமே அமெரிக்கா 180 கோடி டாலர்களை விளம்பரத்திற்காக செலவிட்டது. மேற்கு ஜெர்மனி 40 கோடி டாலரும், ஜப்பான் 15 கோடி டாலரும், இங்கிலாந்து 12 கோடி டாலரும், பிரான்சு மற்றும் கனடா தலா 10 கோடி டாலரும் செலவு செய்தன. இன்றைக்கு விளம்பர செலவுகள் விண்ணைத் தொடுகின்றன. 2014-ல் மட்டும் 545.40 பில்லியன் டாலர்கள் விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளன. 

மக்கள் எந்த விளம்பரத்தின் மீதும் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு புற்றீசல்கள் போல் இப்போது விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நமது நாட்டில் வானொலி மூலம் ‘விவித் பாரதி வர்த்தக ஒலிபரப்பு’ என்ற பெயரில் 1967 நவம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட்டது. தொலைக்காட்சியில் 1976 ஜனவரி 4-ந்தேதி முதல் விளம்பர ஒளிபரப்பு தொடங்கியது. ஒரு நாடு, அந்த நாட்டின் மக்கள் தொகை, ஒரு வருடத்திற்கு செய்யும் விளம்பரச் செலவு, இவற்றையெல்லாம் கொண்டு ஒரு கணக்கீடு உருவாக்கி இருக்கிறார்கள். அதன்படி ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களின் பொருட்களை வாங்கச் செய்வதற்காக ஒரு தனிநபர் மீது எவ்வளவு செலவு செய்கிறது என்றால், அமெரிக்கா 589.29 டாலர்களை செலவு செய்கிறது. இரண்டாவது இடத்தில் நார்வே நாடு உள்ளது. அது ஒரு நபர் மீதான விளம்பரச் செலவாக 543.16 டாலர்களை கொண்டிருக்கிறது. மூன்றாவதாக ஆஸ்திரேலியா 509.45 டாலர்களை செலவழிக்கிறது. இந்தியாவை ஏழை நாடு என்கிறோம். இங்கேயும் கூட ஒரு இந்தியருக்காக வருடத்திற்கு 5.40 டாலர்கள் விளம்பர செலவுகள் செய்யப்படுகின்றன. 

கோடிகள் அரசாட்சி செய்யும் இந்த துறை, இன்று ஒரு கலையாக மட்டுமல்லாமல், அறிவியலாகவும் போற்றப்படுகிறது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க புதுப்புது யுத்திகளுடன் விளம்பரம் தயாரிக்கப்படுகிறது. விளம்பர உலகம் மாபெரும் இலக்கை நோக்கி வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment