Search This Blog

Thursday, July 23, 2015


அறுவடைத் திருவிழா
உணவுப் பயிர்கள் அறுவடை செய்யும் போது நடத்தப்படும் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அதற்கு பல காரணங்களும் சொல்லப்படுகின்றன. அறுவடை செய்யும் போது பயிர்களில் உள்ள ஆவி கோபமடையும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த கோபத்தை குறைக்க அவற்றுக்கு படையல் செலுத்த வேண்டும் என்பது ஆதியில் இருந்து வரும் நம்பிக்கைகளில் ஒன்று. இதன் அடிப்படையில் தான் அறுவடைத் திருவிழாக்கள் இன்றைக்கும் நடத்தப்படுகின்றன. 

கிரேக்க, ரோம், எகிப்திய, எபிரேய கலாச்சாரங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழாக்களை கொண்டாடியிருக்கின்றனர். கொரியாவில் ‘சூசாக்‘ எனும் பெயரிலும், ஜப்பானியர்கள் ‘டோரினோய்ச்சி‘ என்ற பெயரிலும் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். 

அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமையும், சீனாவில் ஆகஸ்ட் நிலா விழா என்ற பெயரிலும் அறுவடைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. வியட்நாமில் ‘தெட் திரங்‘ எனும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் 15-ம் நாளில் நடத்தப்படுகிறது. இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் 15-வது நாள் சக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த விழாவை கிறிஸ்தவர்களும் கொண்டாடி வருகிறார்கள். 

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் 3 நாட்கள் விழா நடைபெறுகிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இந்த விழாவில் இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்பு பரிசுகளாக கருதப்பட்டு பெருமைப்படுத்தப்படுகின்றனர். ரோமானியர்கள் அக்டோபர் 4-ம் நாள் செரிலியா எனும் விழாவை கொண்டாடுகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுகின்றன. 

ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் ஜூன் மாதம் 2-ம் நாள் அறுவடை நாள் விழா நடத்தப்படுகிறது. தமிழர்களின் பொங்கல் விழாவும் அறுவடைத்திருநாள் தான். 

இவ்வாறு உலகமெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்கள், இயற்கையோடு மனிதனுக்கு உள்ள தொடர்பையும், இறைவனோடும் சக உயிர்களுடனும் மனிதன் கொள்கிற உறவையும் வெளிப்படுத்துவதாக திகழ்கின்றன.

No comments:

Post a Comment