Search This Blog

Tuesday, July 14, 2015



கல்யாண மன்னன்

இன்று டி.வி., ரேடியோ, மருத்துவமனை, காவல் நிலையம் என்று 24 மணி நேரமும் இயங்கும் அமைப்புகள் பல இருக்கின்றன. ஆனால், அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இருக்கும் தேவாலயம் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். அந்த தேவாலயத்தின் பெயர் பிரெஞ்ச் குவாட்டர். எப்போது காதல் ஜோடிகள் வந்தாலும் அவர்களுக்கு அங்கிருக்கும் பாதிரியார் டோனி டலவேரா திருமணம் செய்து வைப்பது வழக்கம். இவருக்கு காதலர்கள் மத்தியில் ‘ரொமான்ஸ் பாதர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. 

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 5 வயது மிகாவும், 6 வயது அன்னாவும் குழந்தை காதலர்கள். அவர்களுக்கு ஆப்பிரிக்கா சென்று திருமணம் செய்து கொள்ள ஆசை. ஒருநாள் வீட்டில் பெற்றோர்கள் அசந்த நேரம் பார்த்து நீச்சல் உடை, குளிர் கண்ணாடி, மிதவைகளை பைகளில் அடைத்து வைத்து, அன்னாவும் அவளின் தங்கையையும் (சாட்சிக்காக) அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்றிருக்கிறான் மிகா. வெளிநாடு செல்ல விசா, பாஸ்போர்ட் போன்றவைகள் தேவை என்பதை தெரியாத மிகா போலீசில் மாட்டிக்கொண்டான். இப்பவே இப்படியா என்று மிரண்டு போன போலீஸ் 3 பேரையும் வீட்டுக்கு கொண்டுபோய் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு வந்தது. 

ஒரு தனி மனிதன் 158 திருமணங்கள் செய்து சந்தோஷமாக வாழ முடியுமா? அப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெர்சியாவின் அரசர். அவர் பெயர் பாத் அலி ஷா. இம்சை அரசன் 24ம் புலிகேசி போல இவருக்கும் போர் என்றால் பயம். எந்த மன்னராவது போர் தொடுக்க தயாரானால் உடனே வெள்ளைக் கொடியோடு ஆரவாரமாக கிளம்பிவிடுவார். அந்த நாட்டு இளவரசியை மனைவியாக்கிக் கொள்வார். சொந்தக்காரன் கிட்ட என்ன சண்டை போடுவது என்று எதிரி அரசர்களும் விட்டு விடுவார்கள். இப்படியாக மொத்தம் 158 பேரை திருமணம் செய்து கொண்டார் ஷா. கடைசிவரை இந்த கல்யாண மன்னனுக்கு, தனது மனைவிகளின் பாதிப்பேரின் பெயர் கூட தெரியாது. 158 மனைவிகள் மூலம் 260 குழந்தைகளை பெற்று தள்ளி இருக்கிறார். அவர் இறக்கும் போது 780 பேரக்குழந்தைகள் இருந்தனர். நிஜத்திலும் ஒரு இம்சை அரசன் இருந்திருக்கிறார்.

No comments:

Post a Comment