Search This Blog

Friday, July 10, 2015


இயற்கையின் வினோதம் (11.07.2015)
இயற்கை எப்போதுமே வினோதம் நிறைந்ததுதான். அதில் ஒன்று தான் வெயில். இந்த வெயில் அதிகரிப்புக்கும், சூரியன், பூமிக்கும் இடையேயான தொலைவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 6-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் மிக கடுமையாக இருந்தது. சென்னையைப் பற்றி கேட்கவே வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளில் மிக உயர்ந்தபட்ச வெப்பமாக 40.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்றைக்குத்தான் சூரியன், பூமியை விட்டு வெகு தொலைவில் இருந்தது. சரியாக சொல்வதென்றால் 15 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரத்து 480 கி.மீ. தூரத்தில் இருந்தது. இயற்கை நியதிப்படி சூரியன் தொலைவில் இருக்கும் போது வெப்பம் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், அன்று அப்படி இருக்கவில்லை. இன்னொரு உதாரணத்தை பார்ப்போம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. அன்றைக்கோ சூரியன் பூமிக்கு மிக அருகில் இருந்தது. அன்றைய தினம் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவு 14 கோடியே 70 லட்சத்து 96 ஆயிரத்து 204 கி.மீ. இருந்தது. ஜூலை மாதம் 6-ந்தேதிக்கும், ஜனவரி மாதம் 4-ந்தேதிக்கும் இடையே சூரியனின் தொலைவு கிட்டத்தட்ட சுமார் 49 லட்சம் கி.மீ. வித்தியாசம் இருந்தது. இந்த தூரம் எப்படி வித்தியாசப்படுகிறது என்பதற்கு நாம் சிறுவயதில் படித்த நீள்வட்டப் பாதையில் பூமி சூரியனை சுற்றுவதுதான் காரணம். இதில் புதிரான விஷயம் என்னவென்றால், சூரியன் அருகே இருக்கும் போது குளிராகவும், தொலைவில் இருக்கும் போது வெப்பமாகவும் இருக்கிறதே இதற்கு காரணம் என்னவென்று அறிவியல் அறிஞர்களிடம் கேட்டால், பூமியின் சாய்மானம்தான் என்று அவர்களிடமிருந்து பதில் வருகிறது. நமது பூமி எப்போதுமே 23 டிகிரி சாய்வாகத்தான் சுற்றி வருகிறது. இதனால் மார்ச் மாதம் முதல் இந்தியா போன்ற பூமியின் நடுகோட்டுக்கு வடக்கே உள்ள நாடுகளில் கோடைகாலமாக இருக்கிறது. வெப்பமும் அதிகமாக தாக்குகிறது. வெயிலின் தாக்கம் சூரியன் தொலைவில் இருக்கும் போது கூட வீரியமாக இருக்கிறது. அதே காலகட்டத்தில் பூமியின் நடுகோட்டுக்கு கீழே உள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியுசிலாந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுகின்றன. இதனால் அங்கு குளிராக இருக்கிறது. நமக்கு கோடையாக இருக்கும் போது இந்த நாடுகளுக்கு குளிராகவும், அவர்களுக்கு கோடை காலமாக இருக்கும் போது, நமக்கு குளிராகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் பூமியின் சாய்மானமே காரணம்.

No comments:

Post a Comment