Search This Blog

Monday, July 6, 2015


பிறப்பு விகிதமும், பிரச்சினைகளும்

மக்கள் தொகை கணக்கில் பிறப்பு விகிதம் அதிகரிக்கத் தொடங்கியதும், மக்கள் தொகை அதிகரிப்பும் அதன் சமூக பொருளாதார விளைவுகள் பற்றிய உலகளாவிய கவலையும், கடந்த 50 வருடங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன. அமெரிக்க கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகை 2012 மார்ச் 12-ல் 700 கோடியை கடந்தது. மேலும் 2050-க்குள் இது 900 கோடியை கடக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன. அதேவேளையில் ஐரோப்பிய நாடுகளும் சிங்கப்பூர் போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளும் மேலும் மக்கள் தொகை குறைவதை எண்ணி கவலை அடைகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் தாமஸ் ராபர்ட் மால்தொஸ், மக்கள்தொகை பெருக்கத்தால் உணவுத்தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிவித்தார். அதன்பின்பு பல நாடுகளில் பிறப்பு கட்டுப்பாடு திட்டங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கின. இதன் விளைவாக 1970-களில் பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பலவகையான குடும்பக் கட்டுப்பாடு சாதனங்கள் விற்பனைக்கு வந்தன. இதில் தீவிரமாக ஆர்வம் காட்டிய பல ஐரோப்பிய, கிழக்காசிய நாடுகள் தற்போது அதன் விளைவுகளை சந்தித்து வருகின்றன. 2001-ல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி 40 ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 65 நாடுகளில் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சிறிய நாடான சிங்கப்பூர், குறைந்த பிறப்பு விகிதத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளானது. சிங்கப்பூரில் 2009-ல் 1.22 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2010-ல் 1.16 ஆக குறைந்தது. சிங்கப்பூர் தான் பிறப்பு விகிதத்தில் கடைசியாக இருக்கும் நாடு. மக்கள் தொகை அதிகரிப்பைப் போல, குறைவதும் பெரிய பிரச்சினையே. குழந்தை பிறப்பு குறைந்ததால் சிங்கப்பூரில் இப்போது வயதான மக்களே அதிக அளவில் இருக்கிறார்கள். இதை சரிக்கட்ட சிங்கப்பூர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இளம் தம்பதிகளை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துகின்றன. மாறாக, சீனாவும், இந்தியாவும் குழந்தை பிறப்பை குறைக்கும் விதமாக குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment