Search This Blog

Monday, July 20, 2015


இறக்கும் இந்திய குழந்தைகள்
இந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொருத்தவரை நமது நாடு சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. ஆனால், இளமை இந்தியாவில் குழந்தைகளின் நிலை மெச்சிக்கொள்ளும் அளவில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்து போவதாகவும், அதாவது ஒரு மணி நேரத்துக்கு 45.6 குழந்தைகள் பிறந்தவுடன் இறக்கிறார்கள் என்று சர்வதேச அமைப்பான ‘சேவ் த சில்ரன்’ கூறுகிறது. இந்த மோசமான நிலை, உலக அளவில் நமது நாட்டில் மட்டுமே உள்ளது. வங்காள தேசம் மற்றும் மோசமான வறுமையில் இருக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த அளவிற்கு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் இந்த வயதுடைய 3.8 குழந்தைகள் இறக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான். உண்மையான பாதிப்பை அறிந்துகொள்ள வளர்ந்த நாடுகளுடன், நமது குழந்தைகள் மரண விகிதத்தை ஒப்பிட வேண்டும். ஜப்பானில் குழந்தைகள் மரண விகிதம் 3.2 ஆக உள்ளது. சிங்கப்பூரில் 3 ஆக உள்ளது. நம் நாட்டின் நகர்ப்புறங்களில் இது 36 ஆகவும், கிராமப்புறங்களில் 58 ஆகவும் உள்ளது. இது உலக அளவில் மிக அதிகம் தான். ஐ.நா.வின் கணக்கீடுப்படி தற்போதைய உலக குழந்தைகள் இறப்பு விகிதம் 49.4. இதில் 33 சதவீதத்தினர் நமது நாட்டில் உள்ளனர். இவற்றில் பெருமளவு போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் தான் உள்ளனர். இது மோசமான சுகாதாரம் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் ஏற்படுகிறது. 2008-ம் ஆண்டு தகவலின்படி நாட்டில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ சுத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளுக்கான நிதி குறைந்த அளவில் ஒதுக்கபடுவதாலும், பொறுப்புணர்வு குறைந்த அரசுமே இதற்கு காரணம் என்கிறது ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு. நாட்டில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இளமையான மக்கள் தொகை நம் நாட்டிற்குக்கு சாதமாக இருந்தும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

No comments:

Post a Comment