Search This Blog

Tuesday, July 28, 2015


சென்னையில் ஓடிய ஆறுகள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று சென்னையை இரண்டாகப் பிரிக்கும் கூவம் ஆறு. மற்றொன்று தென் சென்னையில் ஓடும் அடையாறு. இந்த அடையாற்றின் கரையில் தான் முதல் கர்நாடகப் போர் நடைபெற்றது. 

கூவம் ஆறு, செம்பரம்பாக்கம் ஏரியில் உற்பத்தியாகிறது. கிட்டத்தட்ட 32 கி.மீ. துரத்திற்கு ஒரு வாய்கால் போல ஓடி வரும் கூவம். அதன்பின் அகன்ற ஆறாக ஓடி வருகிறது. காடுவெட்டி உள்ள திருவேற்காட்டில் இதை பழம்பாலாறு என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட்ட நதி இது என்றால் இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். கூவம் ஆறு கோயம்பேடு பகுதியில் சென்னைக்குள் நுழைந்து சேப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. விவசாயத்திற்கு பயன்பட்ட சமயத்தில் சுத்தமான நீர் இந்த கூவத்தில் ஓடியது. மக்கள் இதில் குளித்து இருக்கிறார்கள். கோமலீஸ்வரன் பேட்டை அருகே இது வடக்கு நோக்கி பாய்கிறது. இப்படி வடக்கு நோக்கி பாய்வதை உத்தரவானி என்று அழைக்கிறார்கள். வடக்கு நோக்கிப் பாயும் நதியை புண்ணிய நதி என்பார்கள். அந்த வகையில் கூவமும் புண்ணிய நதியாக இருந்தது. இப்படி சிறந்து விளங்கிய கூவம் ஆறு, இன்று கழிவு நீர் நிறைந்து ஓடும் சாக்கடையாக மாறி இருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் கூவம் நதியின் குறுக்கே 10 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 

கூவத்தின் மொத்த நீளம் 48 கி.மீ. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்து ஏரிகள் நிரம்பும் பொழுது கூவத்தில் அதிகமாக நீர் பாயும். கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வருகிறது. கூவம் போலவே சென்னையில் ஓடும் மற்றொரு ஆறு அடையாறு. இது காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர், கூடுவாஞ்சேரி, எரித்தாங்களில் உற்பத்தியாகிறது. இது அனகாபுத்தூர் வழியாக ஓடி ஈக்காட்டுத்தாங்கல் அருகே சென்னைக்குள் நுழைகிறது. அதன்பின் சைதாபேட்டை, கிண்டி வழியாக சென்று அடையாறு அருகே கடலில் கலக்கிறது. சென்னை நகரில் அடையாறு மீது 4 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆறிலும் ஒரு காலத்தில் சுத்தமான நீரே ஓடியது. மக்களுக்கும் பயன்பட்டது. 

இன்றைக்கும் கூட அடையாறு சென்னைக்குள் நுழையும் வரை சுத்தமான நீராகவே இருக்கிறது. சென்னையில் நுழைந்தவுடன் அதில் சாக்காடை நீர் கலந்து விடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகவே சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளும் சென்னைவாசிகளை பிராணயாமம் செய்ய வைக்கிறது. இந்த ஆறுகளை அழகுபடுத்த அவ்வப்போது திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிவதுதான் வேதனை.

No comments:

Post a Comment