Search This Blog

Monday, July 27, 2015


பட்டு பிறந்த வரலாறு
பட்டு சேலைக்கு மயங்காத பெண்களே இல்லை எனலாம். காஞ்சிப் பட்டு, பனாரஸ் பட்டு, பெல்ஜியம் பட்டு என்று ஏகப்பட்ட பட்டு சேலைகள் மங்கையரின் கனவுகளில் தொந்தரவு செய்கின்றன. இந்த பட்டு பிறந்த கதை மிக சுவாரசியமானது. 

 சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் பட்டு உற்பத்தி செய்ய கற்று இருந்தனர். சீன நாட்டு அரசி ஷீலிங்ஷீ ஒரு நாள் கை கழுவும் போது, நீர்த் தொட்டியின் அருகில் இருந்த செடியில் பட்டுப் புழுக்கூடு தொங்குவதை பார்த்தாள். 

உடனே அதை எடுத்து தொட்டியில் போட்டு வைத்தாள். மறுநாள் காலை அந்த தொட்டியை பார்த்த போது, அதில் இருந்த நீரில் மெல்லிய நூலிழைகள் இருப்பதைக் பார்த்தாள். நூலின் ஒரு முனையை பிடித்து இழுத்த போது, அது தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இந்த நூலைக் கொண்டு ஆடைகளைத் தயாரிக்கலாம் என்று அரசி கூறினாள். 

இதையடுத்து பட்டுத் துணியின் மவுசு, வண்ணத்துப் பூச்சியாக சிறகடித்து உலகம் முழுவதும் பறந்தது. பல நூற்றாண்டுகள் வரை சீனர்கள் பட்டுத் தயாரிப்பை படுரகசியமாக வைத்திருந்தனர். இந்தப் பட்டுத் துணியை வாங்குவதற்காக பல நாட்டினரும் சீனாவுக்கு சென்றனர். இறுதியில் மூன்றாம் நூற்றாண்டில் ஜப்பானியர்களுக்கு பட்டின் ரகசியம் பிடிபட்டது. அவர்களும் வெகு நாட்கள் அதை ரகசியமாக வைத்திருந்தார்கள். 

கி.பி.550-ல் பைஸண்டிய நாட்டின் அரசன் ஜஸ்டினியன் பட்டு ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக, தனது ஒற்றர்கள் இருவரை மதகுருமார்கள் வேடத்தில் சீனாவிற்கு அனுப்பி வைத்தான். அவர்கள் மூங்கில் குழாயினுள் பட்டுப் புழு முட்டைகளை சேகரித்து ரகசியமாக சீனாவில் இருந்து கொண்டு வந்தனர். அதன் பின்பு பட்டுப்புழு வளர்ப்பு பெருகி, பட்டுநூல் உற்பத்தி செய்யும் கலை உலகெங்கும் பரவியது. 

தற்போது சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா, இத்தாலி ஆகிய நாடுகள் பட்டு உற்பத்திக்காக பட்டுப் புழுவை வளர்க்கின்றன. பெண் பட்டுப் பூச்சி, முசுக் கொட்டை செடியின் இலைகளில் 500 முட்டைகளை இடும். 10 நாட்களில் முட்டையில் இருந்து புழுக்கள் வெளிவரும். நோயுள்ள புழுக்களை எடுத்துவிட்டு ஆரோக்கியமான புழுக்களை வளர்க்கின்றனர். 

 இந்தப் பட்டுப் புழுக்களின் வாயின் அடியிலுள்ள துவாரம் வழியாக வரும் இழையே பட்டு. 25 நாட்களில் பட்டுப் புழு வளர்ச்சியடைந்தால் அதற்கு இறக்கை முளைத்து கூட்டைப் பிளந்து கொண்டு வண்ணத்துப் பூச்சியாகப் பறந்துவிடும். இப்படி பூச்சி வெளிவந்து விட்டால் நூல் ஒரே இழையாக நூற்க பயனற்றதாக ஆகிவிடும். அதானால்தான், பூச்சி வெளிவரும் முன்பே அதை வெந்நீரில் போட்டுக் கொன்றுவிடுகிறார்கள். 

ஒரு பட்டுப் புழுவில் இருந்து, அதன் எடையில் ஐந்தில் ஒரு பங்கு பட்டு கிடைக்கும். இந்த பட்டு 500 முதல் 1300 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பட்டு நூல் அதே கனம் கொண்ட உருக்குக் கம்பி போல் உறுதியானது. அழகையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் வைத்து பார்த்தால் உலகிலேயே மிகவும் தரமான மேன்மையான பட்டு இத்தாலிய நாட்டுப் பட்டுதான்.

No comments:

Post a Comment