Search This Blog

Thursday, July 16, 2015


காதல் திருவிழா

காதலுக்கென்றே யூதர்கள் ஒரு திருவிழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாற்கு ‘தூ பி ஆவ்’ என்று பெயர். யூதர்களின் மிக முக்கிய திருவிழாக்களில் இதுவும் ஒன்று. அவர்களின் காலண்டர் வழக்கப்படி ‘ஏவ்’ என்ற மாதத்தில் இது கொண்டாடப்படுகிறது. நமது காலண்டர்படி பார்த்தால் ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் இந்த திருவிழா வரும். இந்த மாதங்களில் கடுமையான குளிர் விடைபெற்று, கதகதப்பான கோடைகாலம் தொடங்கும். குளிருக்கு விடை கொடுத்து, ஒளியை வரவேற்பது தான் திருவிழாவின் நோக்கம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு இது மிக விஷேசமான திருவிழாவாகும். ஊரில் உள்ள திராட்சை தோட்டங்களில் கன்னிப் பெண்கள் அனைவரும் கூடுவார்கள். எல்லோருமே வெள்ளைநிற கவுன்தான் அணிய வேண்டும் என்பது விதி. பொருளாதார வித்தியாசத்தை உடையில் காட்டக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனாலும் பணக்காரப் பெண்களின் உடையை ஏழைத் தோழிகளும், ஏழைப் பெண்களின் உடைகளை பணக்கார தோழிகளும் அணிந்து கொள்வது நடக்கும். இது எல்லாமே ஆண்களை குழப்புவதற்குதான். திராட்சை தோட்டத்துக்கு வந்து குவியும் கன்னிப் பெண்கள் தங்கள் தோழிகளோடு சேர்ந்து ஆட்டம், பாட்டம் என திருவிழா, களை கட்டத் தொடங்கும். அப்போது அந்த ஊரில் உள்ள திருமணமாகாத ஆண்கள் வந்து சேருவார்கள். அதன்பிறகு தான் திருவிழா உச்சத்தை தொடும். பெண்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து கொள்வார்கள். ஒரு கூட்டம் ‘அழகுதான் பெண்களுக்கு பெருமை. அதைப் பொறுத்து முடிவு செய்!’ என்று ஆண்களைப் பார்த்து பாடும். உடனே அதற்கு பதில் கூறுவது போல் மற்றொரு கூட்டம், ‘குழந்தைகள் நல்லவிதமாக வளர வேண்டாமா? அதற்கு பெருமை மிகு குடும்பத்தின் நல்ல பெண்களை தேர்வு செய்!’ என்று பாடும். இப்படி கூட்டம் கூட்டமாக பாடும் பெண்கள் தனியாக பிரிந்து ‘என்னை தேர்வு செய், நமது திருமணம் சொர்க்கத்துக்கு ஒப்பானது. நான் உனக்கு பெரும் இன்பத்தையும், நல்ல குழந்தைகளையும் பெற்றுத் தருவேன்’ என்று பாடுவார்கள். திராட்சை தோட்டத்தில் இப்படி ஆடிப்பாடும் பெண்களுக்கு, ஒரு ஆண் அந்தப் பெண்ணின் காதலை ஏற்றுக்கொண்டால், அவர்கள் கடைசி வரை இணைபிரியாமல் கணவன், மனைவியாக வாழ்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. தற்போது நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் காதல் திருவிழா, திராட்சை தோட்டத்தில் நடைபெறுவதற்கு பதிலாக, மண்டபங்களிலும், ஓட்டல்களிலும் நடைபெறுகின்றன. பாரம்பரிய முறைப்படி மீண்டும், இந்த திருவிழாவை திராட்சை தோட்டத்தில் நடத்த வேண்டும் என்று ஒருதரப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

No comments:

Post a Comment