Search This Blog

Monday, July 6, 2015



வெயில் அதிகம் உள்ள பகுதி

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தற்போது வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் எங்கு வெயில் அதிகம் என்பதை சரியாக கணித்துச் சொல்ல முடியாது. உலகிலேயே அதிக மழை பொழியும் இடம் எது என்று கேட்டால் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியை சொல்கிறோம். அதுபோல் வெயிலை சொல்ல முடியாது. ஏனென்றால் வெயில் ஒரே பகுதியில் அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆண்டு தோறும் வெயில் மாறும் தன்மை கொண்டது. ஒரு ஆண்டில் ஒரு பகுதியில் அதிகமாக இருக்கும் வெயில், மறு ஆண்டில் வேறொரு பகுதியில் அதிகமாக இருக்கும். இருப்பினும் விஞ்ஞானிகள் உலகிலேயே அதிகமாக வெயில் அடிக்கும் பகுதிகளாக 3 இடங்களை சொல்கிறார்கள். அதில் முதலாவது இடம் பிடித்து இருப்பது ஈரானில் உள்ள லூட் பாலைவனம். உலகில் உள்ள மிகப்பெரிய பாலைவனங்களின் வரிசையில் 25-வது இடத்தை பிடித்திருக்கும் இந்த இடத்தை உப்பு பாலைவனம் என்றும் சொல்வார்கள். இங்குதான் பூமியிலேயே மிக அதிகமான வெயிலின் அளவு பதிவாகி இருக்கிறது. 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் 70.6 டிகிரி செல்சியஸ் வெப்பம், அதாவது 159 பாரன்ஹீட் என்ற மிக உச்சபட்ச அளவு பதிவாகி இருந்தது. இதற்கடுத்து, இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பது லிபியாவில் உள்ள அல்அசியா. இது லிபியாவின் தலைநகரான திரிபோலியில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வர்த்தகப் பகுதியான இங்கு மலையும், பாலைவனமும் மிகுந்து இருக்கின்றன. சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1922-ம் ஆண்டு 136 பாரன்ஹீட் வெயில் பதிவானது. மூன்றாவது இடத்தை கலிபோர்னியாவில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு பிடித்துள்ளது. இங்கு 1913-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி 134 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்த மூன்று இடங்களுக்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஏமன், அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அதிகபட்சமாக 132 பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை ஒடிசா மாநிலத்தில் உள்ள அனுகுல் என்ற இடத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பதிவான 131 பாரன்ஹீட் வெப்பமே இந்தியாவின் உச்சபட்ச வெப்பமாகும். நூறு பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் அதிகமானாலே நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் உலகில் 130 பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் உள்ள இடங்களில் கூட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஆறுதலான விஷயம் தான்.

No comments:

Post a Comment