Search This Blog

Monday, March 14, 2016


அரசியலில்  இதெல்லாம் சகஜமப்பா...! 12/03/2016

வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் மே 16-ந் தேதி வரை மேற்குவங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்குவங்காளத்தில் ஏப்ரல் 4, 11, 17, 21, 25, 30, மே 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. ஏனெனில், இந்த மாநிலங்களில் தேர்தல் நேரங்களில் வன்முறை வெடிக்கலாம் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், பாரதத்தாயின் செல்ல மகள்களான தமிழ்த்தாயும், கேரள அம்மேயும் குடியிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் எப்போதுமே அமைதி தவழும் மாநிலங்களாகும். எனவே, இந்த மாநிலங்களில் மட்டும் மே 16-ந் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்பது நிச்சயமாக பெருமைப்படத்தக்க விஷயமாகும்.

பொதுவாக, தேர்தல் என்றாலே, நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற வகையில், நேற்று வரை ஒரு கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள், இன்று அதற்கு நேர் எதிர் போவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் கொள்கை ரீதியாகவே இருவேறு திசையில் நிற்பவர்கள். கேரளாவை எடுத்துக் கொண்டால், 1970-களிலேயே கூட்டணி அரசியலுக்கு வித்திட்டது இந்த மாநிலம்தான். இங்கு எப்போதுமே காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையில்தான் போட்டியிருக்கும். இருவரும் மாறி மாறித்தான் ஆட்சியமைத்து கொண்டிருப் பார்கள். இப்போது முதல் முறையாக பா.ஜ.க.வும் களத்தில் இறங்கியிருக்கிறது. ஆக, காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் நீயா?, நானா? என்ற வகையிலேயே கேரளாவில் இவ்வளவு நாளும் மட்டுமல்லாமல், இப்போதும் தேர்தல் களத்தில் நிற்கிறது.

ஆனால், அதே காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் மேற்குவங்காளத்தில் மட்டும் கைகோர்க்கும் நிலையை பார்க்கும்போது, “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்ல வேண்டியிருக் கிறது. மேற்குவங்காளத்தில் இதுவரை யாராலும் வீழ்த்த முடியாது என்ற வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த வரலாற்றையே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 294 இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 184 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 40 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ஓட்டு சதவீத எண்ணிக்கையை பார்த்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 39.8 சதவீத வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 30.08 சதவீதத்தையும், காங்கிரஸ் கட்சி 8.91 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மந்திரத்தை இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கையில் எடுத்துக் கொண்டன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்க, மார்க்சிஸ்டும், காங்கிரசும் கூட்டணி வைக்கவில்லை. ஆனால், உடன்பாடு வைத்திருக்கிறோம் என்று இரு தரப்பிலும் செயல்கள் நடக்கிறது. கூட்டணி என்றால் என்ன?, உடன்பாடு என்றால் என்ன?. ஒருவர் நிற்கும் தொகுதியில் அடுத்தவர் நிற்காமல் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்பதுதானே?. இப்போது 294 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி 116 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், ‘ஒரேமேடையில் ஏறி பிரசாரம் செய்யமாட்டோம்’ என்று மட்டும் சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்கள். கேரளாவில் விரோதிகளாகவும், மேற்குவங்காளத்தில் நண்பர்களாகவும் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் களம் இறங்குவதுதான், அரசியல் அரங்கில் இப்போது பேச்சாக இருக்கிறது.

No comments:

Post a Comment