Search This Blog

Tuesday, March 1, 2016


ராசிகளை கண்டறிந்தவர்கள் 02/03/2016

எகிப்தின் ஒரு பகுதியாக இருந்தது, அஸ்சிரிய பேரரசு. அதனை வீழ்ச்சியுறச் செய்த நெபோபோலேசர் கி.மு.625-ல் தமது ஆட்சிப் பகுதியை பாபிலோனிய அரசாக அறிவித்துக் கொண்டார். பின்னர் பாபிலோனியா என்ற பெயர் மாறி ‘கால்டியா‘ என்று அழைக்கப்பட்டது. நெபோபோலேசருக்குப் பின் அவருடைய மகன் நெப்யூசட்னெசர் மன்னரானார்.

பாபிலோனிய ஆட்சியில் மிகப் புகழ் பெற்ற காலகட்டம் இவருடையதுதான். இவர் மீடிய இளவரசியை மணந்து மீடிய அரசை நட்பாக்கிக் கொண்டார். இதன்மூலம் வடஎல்லை,  பாதுகாப்பு மிக்கதாக ஆனது. அவர் கார்க்கிமிஷ் போரில் எகிப்தையும் அதன் ஆதரவாளர்களையும் தோற்கடித்தார். ஜெருசலேமை சூறையாடி யூதர்கள் பலரை சிறைபிடித்தார். இவரது ஆளுகையில் யூப்ரடீஸ் பள்ளத்தாக்கு, சிரியா, பாலஸ்தீனம் முதலியவை உட்பட்டிருந்தன.

இவர் சிறந்த போர் வீரர் மட்டுமல்ல பல வியக்கவைக்கும் கட்டிடங்களையும் கட்டினார். இவர் காலத்தில் களிமண்ணே கட்டிடப் பொருளாக இருந்தது. அதைக் கொண்டே மிகப்பெரிய கட்டிடங்களை கட்டினார். அரண்மனை மாடிகளில் அழகிய தோட்டங்களை அமைத்தார். உலகில் முதல் மாடித் தோட்டத்தை அமைத்தவர் இவர்தான்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தோட்டங்கள் போல் காணப்படும். அதனால் இதை பாபிலோனிய தொங்கும் தோட்டம் என்று அழைத்தார்கள். பண்டைய ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

அறிவியலிலும், மருத்துவத்திலும், ஜோதிடத்திலும் கால்டியர்கள் வல்லவர்களாக இருந்தனர். 12 ராசி சக்கரங்களை அமைத்தவர்கள் இவர்கள்தான் என்கிறது வரலாறு. நட்சத்திரங்களால் பூலோக வாசிகளின் வாழ்க்கை பாதிக்கிறது என்று நம்பினர். கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுக் கூறினர்.

நெப்யூசட்னெசருக்குப் பின் வாரிசு பிரச்சினை எழுந்தது. சுயநலப் பிறப்புகள் ஒன்று கூடி உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தினர். இறுதியில் நபெனிடஸ் என்ற அறிஞர் மன்னராக்கப்பட்டார். இவர் அரச விவகாரங்களில் அக்கறை செலுத்தவில்லை. கி.மு. 539-ல் பாரசீக பேரரசர் சையாஸ் பாபிலோனியாவை கைப்பற்றி பாரசீகத்துடன் இணைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment