Search This Blog

Saturday, March 12, 2016


தேசபக்தி  வளரட்டும் 01/03/2016

“தாயிற் சிறந்த கோவில் இல்லை” என்பது காலம்காலமாக போற்றி வணங்கும் நிதர்சன உண்மையாகும். தாய்ப்பாசத்துக்கு ஈடு இணையே கிடையாது. அதுபோல, தாயைப்போற்றி வணங்கவேண்டும் என்பது யாரும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லாத ஒரு உணர்வாகும். தாயைப் பழித்தவனை எந்த ஒரு இந்தியனும் விடவேமாட்டான். அந்த வகையில், நாம் பிறந்த இந்த நாட்டை தாய்க்கு இணையாகவே நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொருவரும் கருதுகிறார்கள். அதனால்தான், இந்திய நாட்டை தாய் நாடு என்று ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட அழைக்கிறான். தான் பிறந்த நாட்டை தாய் நாடாகக் கருதுவதால்தான், நாட்டை ‘பாரத மாதா’ என்று வணங்குகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலேயே பிறந்துவிட்டு, நாட்டுக்கு விரோதமாக செயல்படும் போக்கு ஆங்காங்கு முளைவிட்டுக்கொண்டு இருக்கிறது. நாட்டுக்கு விரோதமாக, நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலைச் செய்தவர்களை, செயற்கரிய செயலைச் செய்தவர்களாக, அவர்கள் புகழ்பாடும் செயலைச்செய்யும் போக்கு வளர்ந்துவருவது கவலைக்குரியது. எடுத்துக்காட்டாக, பாராளுமன்றத்தைக் குண்டுவீசி தகர்க்க முயன்ற சதிகாரன் தூக்கிலிடப்பட்ட நாளையே, நினைவில் போற்றத்தக்க நாளாக ஒரு பல்கலைக்கழகத்திலேயே கொண்டாடினார்கள் என்றும், தேசவிரோத கோஷங்களை எழுப்பினார்கள் என்றும் பலத்த விமர்சனங்கள் கூறப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்த ஒருவரை, மாணவர்களே அதுவும் பல்கலைக்கழகத்திலேயே கொண்டாடலாமா? என்று ஒருபக்கம் பலத்த எதிர்ப்பு கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, இந்த நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை எப்படியும் கைப்பற்றிவிடவேண்டும் என்ற ஆக்ரோஷத்தில், பாகிஸ்தான் எல்லையில் போரிட்டு வருகிறது. மேலும், இந்தியாவுக்குள் பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை அலை அலையாய் அனுப்பி, பல வன்முறைச்செயல்களை அரங்கேற்றுகிறது. எந்த காஷ்மீரைக் காப்பாற்ற எண்ணற்ற ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்களோ, அந்த காஷ்மீரில் சமீபத்தில் இளைஞர்கள் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் பாகிஸ்தான் கொடிகளை கையில் ஏந்தியிருக்கிறார்கள் என்ற தகவலும், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களைக் கிளப்பினார்கள் என்ற தகவலும், நாட்டுப்பற்று மிக்க நல்லோர் ஒவ்வொருவரின் ரத்தத்தையும் கொதிக்க வைக்கிறது. இந்த நிலையில், இந்த நாட்டு சுதந்திரத்துக்காக நமது முன்னோர்கள் எந்த அளவு ரத்தத்தைச் சிந்தி தியாகங்கள் செய்தார்கள் என்பதையும், தேசபக்தியையும் அனைவரிடையேயும் குறிப்பாக, மாணவர் சமுதாயத்தினரிடையேயும் புகட்டுவது இன்றியமையாததாகிவிட்டது. இதற்கு ஒரு நல்ல தொடக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி செய்துவிட்டார். இந்தியாவில் 46 மத்திய பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் தினமும் 207 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் எல்லோருக்கும் நன்றாக தெரியும் வகையிலும், பெருமைசேர்க்கும் வகையிலும் தேசியக்கோடியை ஏற்றவேண்டும் என்றும், இதுபோல அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களிலும் தினமும் தேசியக்கொடியை ஏற்றவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த முயற்சி மாணவர்களிடையே வலிமையான இந்தியா, ஒற்றுமையான இந்தியா என்ற வகையில் தேசபக்தியை வளர்க்கும். தேசியக்கொடியை ஏற்றும்போதும், அதைப்பார்க்கும்போதும் தானாடாவிட்டாலும், தன் தசை ஆடும் என்பதுபோல, தன்னையறியாமல் ஒவ்வொருவருக்கும் தாய்நாட்டின் மீது பக்தி ஏற்படும். இந்த நல்ல முயற்சியை மத்திய பல்கலைக்கழகங்களோடு விட்டுவிடக்கூடாது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தவேண்டும்.

பிஞ்சு மனதில் விதைக்கப்படும் தேசபக்தி, அவர்கள் வளரும்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல ஆழமாக வேரூன்றி இருக்கும். தேசியக்கொடி ஏற்றுவதோடு நின்றுவிடாமல், பாடத்திட்டங்களிலும் தேசபக்தியை உருவாக்கும் வகையில் பாடங்களைச் சேர்க்கவேண்டும். நிச்சயமாக இது கல்வி நிறுவன வளாகங்களில் தேசவிரோத சக்திகளின் நடவடிக்கைகளை அடக்கி ஒடுக்கும். கல்வி நிறுவனங்களோடு விட்டுவிடாமல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடியை தினமும் ஏற்றவேண்டும்.

No comments:

Post a Comment