Search This Blog

Wednesday, March 16, 2016


‘இலுப்பை’யின் சிறப்புகள் 17/03/2016

இலுப்பை மரத்தில், ‘நெட்டிலை இலுப்பை‘ என்றொரு வகை உண்டு. இது 200 முதல் 400 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. கருமையான, தடிப்பான அடிமரத்தைக் கொண்டது. கடந்த 2,000 ஆண்டுகளாக இது சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கோவில்களுக்கு அருகிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

மெதுவாக வளரும் இந்த மரம் மிக அதிக வெப்பநிலை கொண்ட மணற்பாங்கான அல்லது கற்கள் நிறைந்த திறந்தவெளிகளில் காணப்படுகிறது. கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் மிளிரும்.

நெட்டிலை இலுப்பை வேனிற்காலத்தில் பூக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்டவை, மணம் கொண்டவை, கொத்தாகக் காணப்படுபவை. பூவிதழ்கள் தடித்தவை, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அமைந்தவை பூக்கள் துளைஉடையனவாக இருக்கின்றன.  மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு பூவின் அகவிதழ் தொகுப்பு மரத்தின் உயர்ந்த கிளைகளில் இருந்து காற்றில் சுழன்று, வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக வீழ்வது வெண்மையான ஆலங்கட்டி மழை வானில் இருந்து வீழ்வதுபோலத் தோன்றும் பூக்கள் வாடாமல் இருக்கும்போது யானைத் தந்தத்தின் நிறமும், உறுதியும் கொண்டவை. வாடியபின் மீன் தூண்டில் போன்று இருக்கும். இலுப்பையின் அனைத்து உறுப்புகளும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

 மரக்கட்டை விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரப்பட்டைகள் பொருட்களுக்கு சாயமேற்றவும், காய்ச்சல், தோலரிப்பு, புண்கள், வீக்கம்போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகவும், வலிகள், எலும்புப்பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. குழந்தை ஈன்ற பழங்குடிப்பெண்கள் இலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்துக்கொண்டனர்.

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பை எண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை“ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ.  இலுப்பைப் பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் பூக்கள்தான். பூக்களின் தடித்த அகவிதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால் பழங்குடியினர் இதை சர்க்கரையைப் போன்று பயன்படுத்தினர். இதழ்களை நேரடியாகவோ, உலர்த்தியோ, அரிசியுடன் சமைத்தோ, வெல்லத்துடன் சேர்த்து உருட்டியோ, தேனில் தொட்டோ உண்டனர். பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்தது.

No comments:

Post a Comment