Search This Blog

Monday, March 14, 2016


ஆயுளை குறைக்கும் ஆஸ்பெஸ்டாஸ் 13/03/2016

மலிவான விலையில் உறுதியான ஒரு கூரையை வாங்க முடியுமா? அது ஆஸ்பெஸ்டாஸாக இருந்தால் முடியும். ஆஸ்பெஸ்டாஸ் எளிதில் தீப்பிடிக்காது என்பதற்காகவே வாகனங்களிலும், கப்பல்களிலும் கூட பயன்படுத்தப்படுகிறது. ‘சர்பன்டைன்‘, ‘ஆம்பிபோல்‘ என்ற இரண்டு விதமான ஆஸ்பெஸ்டாஸ்கள் உள்ளன. ‘சர்பன்டைன்‘ வகையில் ‘கிரைசோலைட்‘  என்ற வெண்மை நிற ஆஸ்பெஸ்டாஸ்தான் உலக அளவில் 95 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. உறுதி மட்டுமல்லாமல் வெப்பத்தை தாங்கும் திறனும் இருப்பதால் கட்டுமான பணிகள், மின்சாதனங்கள் உள்பட 3 ஆயிரம் வேலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆஸ்பெஸ்டாஸ் எப்படி மனித ஆயுளை குறைக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் இழைகள் கண்ணுக்கு தெரியாத மிக நுண்துகள்களாக மாறக்கூடியவை. இந்த துகள்கள் கண்ணுக்கு தெரியாது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் மட்டுமே தெரியும். இவை எப்போதும் காற்றில் கலந்தே இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ், உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமல்ல, குப்பையில் தூக்கி எறியும்வரை சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த துகள்கள் காற்றில் கலந்து விட்டால், வேறு எங்கும் தங்குவதில்லை. இதனால் சுவாசித்தலின் போது மிக சுலபமாக மனித நுரையீரலுக்குள் புகுந்து தங்கிக்கொள்கிறது.  விபத்துக்களில் உயிரிழப்பவர்களை விட, ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் இடத்தில் உருவாகும் துகள்களை நீக்குவதற்காகவே அனுமதி பெற்ற ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த துகள்களை நீக்க விண்வெளி வீரர்களை போன்ற பாதுகாப்பு கவச உடை, சிறப்பு சுவாச வசதி பெற்று துகள்களை நீக்குகிறார்கள்.

 இதன் பாதிப்பு எப்படி தெரியும்? மூச்சிறைப்பு, நெஞ்சிறுக்கம், வறட்டு இருமல், விரல்கள் ஊனமடைதல் ஆகியவை இந்தநோயின் அறிகுறிகள். நுரையீரல் சுவர்கள் புண்ணாகித்தடித்துப்போகும். இதற்கு மருந்தே கிடையாது. இது மார்புச்சளி, இதயம் செயலிழத்தல், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 24 மாதங்களுக்குள் உயிரிழப்பார்கள். சுவாசத்தில் ஊடுருவும் இந்த துகள்கள் உடலில் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்கிறது.

2000-ம் ஆண்டு வரை உலகில்  அதிக அளவு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் செய்து வந்த கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்போது ஆஸ்பெஸ்டாசுக்கு தடைபோட்டு விட்டன. இவற்றை தொடர்ந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, ஐக்கிய அரபு நாடுகள், போலந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து போன்ற 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆஸ்பெஸ்டாசுக்கு தடைவிதித்து விட்டன. இங்கு இன்னம் தடை வராவிட்டாலும், ஆஸ்பெஸ்டாஸ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. வேறுவழியின்றி பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது, அதன் மீது நன்றாக பெயின்ட் அடித்துவிடுங்கள். எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றால் பெரிய அளவில் நன்மை இல்லையென்றாலும், ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். புதிய ஆஸ்பெஸ்டாஸை விட பழைய ஆஸ்பெஸ்டாஸில்தான் பாதிப்பு பல மடங்கு அதிகம்.

No comments:

Post a Comment