Search This Blog

Monday, March 14, 2016


தர்மபுரி பஸ் எரிப்பில் 3 மாணவிகள் பலி 
அ.தி.மு.க.வினர் 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து 12/03/2016

ஆயுள் தண்டனையாக குறைப்பு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

3 மாணவிகள்  பலியான  தர்மபுரி  பஸ் எரிப்பு வழக்கில், அ.தி.மு.க.வினர்  3 பேருக்கு    விதிக்கப்பட்ட   தூக்கு  தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

புதுடெல்லி, மார்ச்.12-<p></p>கொடைக்கானல், ‘பிளசன்ட் ஸ்டே’ ஓட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சென்னை தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

3 மாணவிகள் பலி

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டி அருகே கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் பயணம் செய்த பஸ்சை, அ.தி. மு.க.வினர் தீ வைத்து கொளுத்தினர். இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, நாமக்கல்லைச் சேர்ந்த கோகிலவாணி, விருத்தாசலத்தைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலி ஆனார்கள்.

 3 பேருக்கு தூக்கு தண்டனை.
இந்த வழக்கை விசாரித்த சேலம் கோர்ட்டு முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு கூறியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு இந்த தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குற்றவாளிகள் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மறுஆய்வு மனு தாக்கல் இதைத்தொடர்ந்து முனியப்பன், நெடுஞ்செழியன் மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். அதில், “இந்த வழக்கில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை வழங்கி இருக்கிறது. 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை குறித்து முடிவெடுக்க முடியாது. 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் மறுஆய்வு மனு மீது திறந்தவெளி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

விசாரணை

இந்த மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.மூத்த வக்கீல்கள் நாகேஸ்வர ராவ் மற்றும் சுசில் குமார் ஆகியோர் குற்றவாளிகள் தரப்பில் ஆஜர் ஆனார்கள். குற்றவாளிகள் தரப்பில் முன்வைத்த வாதத்தில், “இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே 3 பேருக்கும் மரண தண்டனை என்பது அதிகபட்ச தண்டனை. இதனை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. மேலும், ஆயுள் தண்டனை குறித்து சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் அப்போது முன்வைக்கப்பட்டன. உதாரணத்துக்கு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பிறகு, ஆயுள் தண்டனையின் காலஅளவு என்ன என்பது பற்றியும், குற்றவாளிகளை மாநில அரசு விடுதலை செய்வது குறித்து எழுந்த வாதங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

தமிழக அரசு வக்கீல் வாதம். தமிழக அரசின் சார்பில் வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜர் ஆனார். அவர் தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:- இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில், குற்றத்தில் இவர்களின் செயல்பாடுகள் அனைத்து வகையிலும் தண்டனைக்கு உரியதாகவே இருந்துள்ளதாக கூறி உள்ளது. அந்த தண்டனை என்பது தூக்கு தண்டனையா? அல்லது ஆயுள் தண்டனையா? என்பதை அரிதிலும் அரிதான கோட்பாட்டின் அடிப்படையில் பரிசீலித்து இந்த குற்றத்துக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். இந்த வழக்கு மறுஆய்வுக்கான பரிசீலனைக்கு ஏற்புடையது அல்ல. எனவே மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு யோகேஷ் கன்னா கூறினார்.

ஆயுள் தண்டனையாக குறைப்பு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

அரசியல் தலைவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த கலவரத்தின் போது, பொது சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கும் வகையில் நடந்த சம்பவம் இது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். எனவே இதனை திட்டமிட்டு செய்த செயலாக கருத முடியாது.

கலவரம் நடந்த நேரத்தில் பொது சொத்தை நாசமாக்கும் நோக்கில் செய்த செயல். உணர்ச்சிவசப்பட்டு செய்த தவறு. எனவே, மறுஆய்வு மனு ஏற்கப்படுகிறது. குற்றவாளிகள் மூவருக்கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்

No comments:

Post a Comment