Search This Blog

Saturday, March 12, 2016


நத்தை  வேகத்தில்  நகரும்  ரெயில்வே  திட்டங்கள் 07/03/2016

ஆங்கிலேயர், இந்தியாவை ஆண்ட நேரத்தில், அவர்கள் தந்த அருட்கொடை ஒன்று என்றால், அது  ரெயில்வே பாதைதான். 1853-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பயணிகள் ரெயில் மும்பையிலிருந்து தானேக்கு ஓடியது. ஆனால், அதற்கு முன்பே, இந்தியாவில் 1935-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து செங்குன்றம் வரை பரிசோதனைமுறையில் ரெயில்பாதை அமைக்கப்பட்டு, இந்தியாவின் முதல் சரக்குரெயில் இந்த பாதையில்தான் ஓடியது. இவ்வளவு பெருமை படைத்த தமிழ்நாட்டில், ரெயில்வே திட்டங்களை பொறுத்தமட்டில் பெரிய அளவில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படாதது மிகவும் வருந்தத்தக்கது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதை போட்டிருந்தார்கள், அதை அகல ரெயில்பாதை அதாவது, ‘பிராட் கேஜ்’ ஆக மாற்றும் திட்டங்கள் கூட இன்னும் முழுமையடையாதது, தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதோ? என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் வரை அகல ரெயில்பாதை போடும் பணிகூட மெல்லமெல்ல நகர்ந்து, 2008-ம் ஆண்டுதான் போக்குவரத்து தொடங்கியது. ரெயில் பயணத்தில் ‘‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரெயிலே’’ என்று மலைப்பாதையில் பயணம் செய்யும் சுகமே தனிசுகம்தான் என்று சொல்வார்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை ஒரு ரெயில்பாதை இருக்கிறது. அதுபோல, தென்மாவட்டங்களில் செங்கோட்டை-கொல்லம் இடையே 49.38 கி.மீ. தூரத்தில் செல்லும் பயணம் மேற்கு தொடர்ச்சிமலையில் எழில் கொஞ்சும் பசுமை காடுகளுக்கு நடுவே செல்லும்போது ரம்மியமாக இருக்கும். வழியில் 5 இடங்களில் மலைகளை குடைந்து குகைகள் வழியாக செல்ல வேண்டியதிருக்கும். இந்த ரெயில் பாதையில்தான் சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் செல்லும் ‘கொல்லம் மெயில்’ ஓடிக் கொண்டிருந்தது. இந்த கொல்லம் மெயில் 1904-ம் ஆண்டிலிருந்து ஓடிக் கொண்டிருந்தது. விருதுநகரிலிருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் இந்த ரெயிலில் செல்வதற்கு பயணிகளிடையே மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுபோல, திருச்செந்தூர்-நெல்லை-தென்காசி வழியாக இந்த பாதையில் சென்ற ‘மீட்டர் கேஜ்’ ரெயில்கள் சபரிமலை பக்தர்களுக்கும், முருக பக்தர்களுக்கும் பெரும் இணைப்பாக முன்பு இருந்தது.

முதலில் கொல்லம் வரை ஓடிய இந்த ரெயில், 1918 முதல் கொல்லம்-திருவனந்தபுரம் வரை ஓடத்தொடங்கியது. இந்த ரெயில்தான் ‘மீட்டர் கேஜ்’ ரெயிலில் முதலாவதாக குளுமை வசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளையும், முதல் வகுப்பு ரெயில் பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு ஓடிய ரெயில் என்று பெயர் பெற்றது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக ஆக்குவதற்கு 2000-ம் ஆண்டிலிருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எவ்வளவோ ரெயில் பாதை திட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த ரெயில் பாதைத்திட்டம் மட்டும் நத்தை வேகத்தில் நகர்கிறதே என்ற வருத்தம் எல்லோருக்கும் இருந்தது. இந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பாதையில் ரெயில் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ‘பெட்டர் லேட் தேன் நெவர்’, தாமதமானாலும் பரவாயில்லை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆக, இனி சென்னையையும், கேரள தலைநகராம் திருவனந்தபுரத்தையும் இணைப்பதற்கு 3 வழிகளில் ரெயிலில் போக முடியும். ஏறத்தாழ 50 கி.மீ. ‘மீட்டர் கேஜை’ அகல ரெயில் பாதையாக்க 16 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. இதுபோல, மதுரையிலிருந்து போடி வரை சென்று கொண்டிருந்த 86 கி.மீ. ‘மீட்டர் கேஜ்’ ரெயில்பாதையை, அகல ரெயில்பாதையாக்குகிறோம் என்று சொல்லி, 2010-ல் ரெயில்களை நிறுத்தி தண்டவாளங்களை பிடுங்கி விட்டு, அகல ரெயில் பாதையாக்கும் பணிகளும் நகராமல் இருக்கிறது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் ரெயிலையே மறந்து விட்ட சூழ்நிலை இருக்கிறது. இதுபோல, தமிழ்நாட்டில் அறிவித்தும், நிறைவேற்றப்படாமலும் அல்லது போதிய நிதி ஒதுக்காமல் சுணங்கிக் கொண்டிருக்கும் வகையிலும், நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு, எல்லா திட்டங்களையும் மாட்டுவண்டி வேகத்தில் இல்லாமல், உண்மையான ரெயில்வேகத்தில் நிறைவேற்ற எல்லாதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

No comments:

Post a Comment