Search This Blog

Saturday, March 12, 2016


வனத்துறை  கற்றுத்தரும்  பாடம் 04/03/2016

தமிழக வனத்துறைக்கு 161 ஆண்டுகால பாரம்பரியம் உண்டு. 1855-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் எச்.எப்.சி. கிளஹார்னுக்கு தாவரவியலில் இருந்த நிகரற்ற திறமையைக் கண்டு அப்போது இருந்த கவர்னர் ஹாரிஸ் பிரபு, டாக்டர் கிளஹார்னை அழைத்து, அரசுக்கு தனியாக ஒரு வனத்துறையை உருவாக்கும் பொறுப்பை கையில் கொடுத்தார். அதை திறம்பட செய்தவர் டாக்டர் கிளஹார்ன். 1869 வரை அவர்தான் வனத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றினார். அவருக்குப்பின் ஏராளமான அதிகாரிகள் குறிப்பாக, ஆனைமலையில் ஹுகோ வுட் போன்ற அதிகாரிகளின் அளப்பரிய பணியினால்தான், தமிழக வனத்துறை செழித்து வளர்ந்தோங்கியது. தற்போது தமிழக வனத்துறை தலைவரான முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் என்.கிருஷ்ணகுமார் தலைமையில், உயர் அதிகாரிகளான வி.கணேசன், ராஜீவ் கே.ஸ்ரீவத்சவா ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்ட ஒரு குழு, ஆங்கிலத்தில் ‘ஹால் ஆப் பேம்’ அதாவது, ‘புகழ் பெற்றவர்கள் மண்டபம்’ என்று ஒரு நூலை உருவாக்கி உள்ளனர். இந்த நூலில், டாக்டர் கிளஹார்ன் முதற்கொண்டு சமீபகாலம்வரையில் தமிழக வனத்துறையை மேம்பட உருவாக்கும் பணியில் இருந்த பிராண்டிஸ், பெட்டோம், லாட்ஜ், கவுலி பிரவுன், கேம்பிள், ஹுகோ வுட், பிஷர், சி.ஆர்.ரங்கநாதன், வி.எஸ்.கிருஷ்ணசாமி, சி.ஏ.ஆர்.பத்ரன், டி.ஜெயதேவ், கே.ஆண்டியப்பன், கே.வெங்கட கிருஷ்ணன், டி.அச்சயா, எம்.ஏ.பாட்ஷா, எஸ்.கொண்டாஸ், ஜே.வில்சன், எஸ்.சங்கரமூர்த்தி, எஸ்.சண்முகசுந்தரம், வி.கிருஷ்ணமூர்த்தி, எம்.கிருஷ்ணன், ரிச்சர்டு ராட்கிளிப், இ.ஆர்.சி.டேவிதார், கே.எம்.மாத்யூ ஆகிய 25 தன்னலமற்ற சேவை புரிந்தவர்களின் செயல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஹுகோ வுட் ஆனைமலையில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டில் தேக்குமரங்கள் செழிப்பாக ஓங்கி வளர்ந்து உயர்ந்து நின்றுகொண்டிருப்பதற்கு இவர்தான் மூலகாரணம். தினமும் காலையில் நடைபயணத்தின்போது தன் கால்சட்டையின் 2 பைகளின் நிறைய தேக்கு விதைகளை போட்டுக்கொண்டு காடுகளுக்குள் சென்று வாக்கிங் ஸ்டிக்கை வைத்து ஒரு குத்து குத்தி ஒரு விதையை போட்டு மூடிவிட்டு செல்வாராம். அவ்வாறு அவர் உருவாக்கிய காட்டில்தான் தனது கல்லறை இருக்கவேண்டும் என்று விரும்பிய அவரது விருப்பத்துக்கேற்ப, 1933-ம் ஆண்டு அவர் காலமானவுடன், அவர் வளர்த்த காடுகளுக்குள்ளேயே அவரது உடல் புதைக்கப்பட்டு இன்றளவும் கல்லறை இருக்கிறது. ‘என்னை நீங்கள் பார்க்க விரும்பினால், தயவு செய்து சுற்றிப்பாருங்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றிப்பார்த்தால் அவர் வளர்த்த காடுகள்தான் இருக்கின்றன. இன்றும் வனத்துறையில் புதிதாக வேலையில் சேருபவர்கள் எல்லோரையும் ஹுகோ வுட் கல்லறைக்கு அழைத்துச்சென்று காட்டுகிறார்கள். வனத்துறையில் இந்த 25 பேர்களைபோல, தமிழக அரசில் 36 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் இந்த 25 பேர்களைபோல சிறப்பாக பணியாற்றியவர்கள் பலர் இருப்பார்கள். காவல்துறையை எடுத்துக்கொண்டால், மறைந்த போலீஸ் உயர்அதிகாரிகள் பராங்குச நாயுடு, ராஜரத்தினம், தேவசகாயம், ஸ்டிரேசி, எப்.வி.அருள், எஸ்.ஸ்ரீபால், இப்போது சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்று புகழ்பெற்ற விஜயகுமார் என்று எவ்வளவோ அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். புதிதாக பயிற்சிபெறும் போலீசார் முதல் அதிகாரிகள்வரை உள்ள அனைவருக்கும், பணியில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற அதிகாரிகள் சிக்கலான சமயங்களில் அதை எப்படி சமாளித்து பணியை திறம்பட ஆற்றினார்கள் என்பதை விளக்கும் நூல் வெளியிடப்பட்டால், சிறந்த வழிகாட்டியாக இருக்கும். ஆனால், வனத்துறைபோல ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடாமல், தமிழிலும் வெளியிட்டால், கடைநிலை ஊழியர்களுக்கும், நிச்சயமாக அவர்களுக்கு முன்னால் பணியாற்றிய சீரிய பணிகளை அந்த துறைக்காக ஆற்றியவர்களின் அனுபவங்களை பாடங்களாக புரியவைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள 13 லட்சத்து 98 ஆயிரத்து 798 அரசு ஊழியர்களுக்கும், ஒவ்வொரு துறையிலும் அந்த துறையை மேன்மையாக வைத்திருக்க உதவியவர்களின் தியாகங்களை, சீரிய பணிகளை கற்றுக்கொடுக்க வனத்துறை வழிகாட்டிவிட்டது. மற்றவர்களும் பின்பற்றவேண்டும்.

No comments:

Post a Comment