Search This Blog

Monday, March 14, 2016


வேகமாகப் பரவும்  வெடிகுண்டு- கள்ளத்துப்பாக்கி  கலாசாரம் 11/03/2016

தமிழ்நாடு காலம்காலமாக அமைதி பூங்காவாக திகழ்ந்து வந்தது. பெரும்பாலும் தமிழர்களுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. வயல்களில், காடுகளில், ஏன் பல நிறுவனங்களில் காவல் பணியில் உள்ளவர்கள்கூட ஒரு கைத்தடியை வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். துப்பாக்கி என்பது எல்லோராலும் நிச்சயமாக வாங்கமுடியாது. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு கண்டிப்பாக லைசென்சு வாங்கவேண்டும். இந்த லைசென்சை பெறுவது எளிதல்ல. மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் அனுப்பினால், ‘இவருக்கு எதற்கு துப்பாக்கி?, அது இவருக்கு தேவைதானா?’ என்றெல்லாம் துருவி, துருவி விசாரணை நடத்தித்தான் கொடுப்பார்கள். அதுவும் இப்போது காடுகளில்  வேட்டை யாடமுடியாது என்ற நிச்சயமான நிலை வந்தபிறகு, துப்பாக்கி மீதான ஆர்வம் மக்களிடையே குறைந்துவிட்டது.

அந்தக்காலங்களில்  சில   நேரங்களில்   சமூகவிரோதிகளால் அரிவாள், கத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. ஆனால், அதெல்லாம் அபூர்வமாக இருந்தது. இந்த நிலையெல்லாம் இப்போது மாறி, தமிழ்நாட்டுக்குள் கள்ளத்துப்பாக்கி, வெடிகுண்டு கலாசாரம் நுழைந்தது, பெரிதும் கவலையளிக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் இருகோஷ்டியினருக்கிடையே மாறிமாறி நிகழ்ந்துகொண்டிருக்கும் கொலைகளின் தொடர்ச்சியாக, ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியை தீர்த்துக்கட்ட ஒரு காரிலும், 5 மோட்டார் சைக்கிள்களிலும் வந்து, அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி, அரிவாளால் தாக்கி, 2 பேரை படுகொலை செய்திருக்கிறார்கள். ஒருவர் தலையை துண்டித்து எடுத்துச்சென்று  வெகுதூரம்   கொண்டுசென்று  போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இதுபோல, தலைநகராம் சென்னையிலேயே கள்ளத்துப்பாக்கி விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கையில் அரிவாள், கத்தியை வைத்துக்கொண்ட குண்டர்கள், இப்போது ஹைடெக்குக்கு மாறி, .22 எம்எம், அல்லது 9 எம்எம் ரக கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். இவர்களுக்கு இந்த துப்பாக்கிகளெல்லாம் வெளிமாநிலங்களிலிருந்து கிடைக்கிறது. சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், வெளிமாநிலங்களில் இருந்து ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கிவந்து, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரிலேயே இப்படி சர்வசாதாரணமாக துப்பாக்கி விற்பனை நடக்கும்போது, மற்ற இடங்களில் எப்படி இருக்கும்? என்று எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இத்தகைய கைத்துப்பாக்கிகள் மேற்குவங்காளம், பீகார் மாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாகவும், லாரிகளிலும் கடத்தப்பட்டுவருவது போலீஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிச்சயமாக இது அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவங்களாகும். விவசாய தோட்டங்களில் காட்டுப்பன்றிகள்   அட்டகாசத்தை    ஒழிக்க   வெடிகுண்டுகளை   பயன் படுத்தத்தொடங்கி, இப்போது மனித  உயிர்களை  பறிக்க பயன்படுத்துவது வரை வந்துவிட்டது. தேர்தலையொட்டி, சோதனைச்சாவடிகள் வைத்திருக்கிறோம், போலீசாரின் கண்ணில் இருந்து எதுவும் தப்பமுடியாது என்று கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிகுண்டுகளோடு தைரியமாக காரில் வந்துகொண்டிருந்த நிலையில், போலீசார் இன்னும் கண்காணிப்புடன்  செயல் படவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. தென்மாவட்டங்கள் முழுவதும் வன்முறையில் ஈடுபடுவதற்கு வெடிகுண்டுகளை பயன்படுத்தும் மோசமான கலாசாரம் வளர்ந்து வருகிறது. எந்த ஊர் என்றாலும், தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வடமாவட்டங்களில் தோட்டக்காவலுக்கும் வெடிகுண்டுகள் வைத்திருக்கும் பழக்கம் வந்துவிட்டது. தமிழ்நாடு முழுவதும் வெடிகுண்டுகள் தாராளமாக கிடைப்பது ஒருபக்கம் கவலையளித்தாலும், கள்ளத்துப்பாக்கி நடமாட்டமும் இருப்பது வேதனையளிக்கத்தக்க வகையில் இருக்கிறது. <p></p>காவல்துறையும், குறிப்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் இதில் இனி தீவிரமாக தங்கள் பணிகளை முடுக்கிவிட்டு, வெடிகுண்டு கலாசாரம், கள்ளத்துப்பாக்கி கலாசாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்று ஆராய்ந்து, இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் அடிக்கடி சோதனை நடத்தவேண்டும். யாரிடமாவது வெடிகுண்டு கைப்பற்றப்பட்டால் கடும் தண்டனை விதிக்கப்பட்டால்தான், மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். முளையிலேயே இந்த வெடிகுண்டு, கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை கிள்ளி எறிந்தால்தான், வேகமாக வளர்ந்து நிலைமை மோசமாவதற்குள் தடுக்கமுடியும்.

No comments:

Post a Comment