Search This Blog

Monday, March 14, 2016


தீவிரவாதம்  காலூன்றக்கூடாது! 14/03/2016

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து காத்திருப்போரின்  எண்ணிக்கை       87 லட்சத்தை தாண்டிவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையும் சேர்த்தால், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். திறன்சாராத உடல்உழைப்பு வேலைகள் ஓரளவு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் இந்த வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, தமிழ்நாட்டிற்கு வந்து வேலையையும் பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் மாநிலத்தை ஒப்பிடும்போது, இங்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வழங்கும் சம்பளத்தை கருத்தில்கொண்டால், இங்கு அவர்களை வேலையில் அமர்த்துபவர்கள் கொடுக்கும் சம்பளம் தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்பளத்தைவிட குறைவானது என்பதால், அவர்களையே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் எடுத்த ஒரு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 10 லட்சத்து 67 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில், 27 சதவீதம் பேர் பல்வேறு பொறியியல் தொழிற்கூடங்கள் போன்ற உற்பத்திப்பிரிவுகளில் வேலைபார்க்கிறார்கள். 14 சதவீதம் பேர் ஜவுளி தொழிற்கூடங்களிலும், 11.41 சதவீதம் பேர் கட்டுமான தொழில்களிலும் வேலைபார்க்கிறார்கள். இதுதவிர, ஓட்டல்களில் வேலை பார்ப்போர், காவல்பணியில் ஈடுபடுபவர்கள் என்று ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மேற்குவங்காளம், ஒடிசா, பீகார், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற பல மாநிலங்களிலிருந்து வேலைக்கு வருகிறார்கள். இன்றும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்றால், தினமும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு சென்றால் வேலைகிடைக்கும் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையை மனதில் வைத்து அலை அலையாய் வருவதைப்பார்க்க முடியும்.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில், அரபு நாடுகளில் வேலைக்கு சென்றவர் என்றால், அந்த குடும்பத்துக்கு தனி மவுசு இருப்பதுபோல, வடமாநிலங்களில் உள்ள கிராமங்களில் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு சென்றவர்களின் குடும்பங்களுக்கு தனி மவுசு உள்ளதாக கூறுகின்றனர். இவர்களெல்லாம் யார்?, இவர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது?, அங்கு ஏதாவது குற்றவழக்குகளில் ஈடுபட்டு தப்பித்து வந்திருக்கிறார்களா? என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் சரியாக தெரிவதில்லை. சமீபத்தில் சென்னையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரயாதவ் என்ற தீவிரவாதியை ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் தமிழக ‘கியூ’ பிராஞ்சு போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.    32   வயதான   இந்த  தீவிரவாதி, 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தில் கண்ணிவெடி வைத்து 7 போலீசார் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவன். ‘மாவோயிஸ்டு’ இயக்கத்தின் மண்டல தளபதியாக செயல்பட்டுவந்தவன். பீகார், சத்தீஷ்கார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 17 கொலை வழக்குகள் இவன் மீது இருக்கிறது. சத்தீஷ்கார் மாநிலத்தில் இவனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சத்தீஷ்கார், ஜார்கண்ட் மாநில போலீசார் இந்த தீவிரவாதியை வலைவீசி தேடிவந்தனர். ஆனால், எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தண்டலத்தில் வடஇந்திய தொழிலாளர்களுடன் பதுங்கியிருந்ததை, கியூ பிராஞ்சு போலீசார் கண்டுபிடித்து கைதுசெய்தது, பெரிய நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் வேரூன்ற திட்டமிட்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு தீவிரவாதி தமிழக சட்டமன்ற தேர்தலை சீர்குலைக்கும் திட்டத்துடன் பதுங்கியிருந்தான் என்ற தகவலும் வெளிவருகிறது. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில், தீவிரவாதம் எந்தவகையிலும் காலூன்றிவிடக்கூடாது. எனவே, தமிழக போலீசார் இந்த விஷயத்தில் மிகத்தீவிரமாக கண்காணிப்பு பணிகளை முடுக்கிவிடவேண்டும். வடமாநில சகோதரர்கள் வேலைபார்க்க வருவது சரிதான். வந்தாரை வாழவைப்பதுதான் தமிழ்நாடு. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் பின்னணி குறித்து ஆராய எந்தெந்த வகையில், என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை காவல்துறையும், தமிழக அரசும் தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment