Search This Blog

Monday, March 14, 2016

வாரத்துக்கு  ஒருநாள்  கைத்தறி  அல்லது  கதர் 10/03/2016

“சின்னச்சின்ன இழை பின்னி, பின்னிவரும் சித்திரக்கைத்தறி சேலையடி, நம்ம தென்நாட்டில் எந்நாளும் கொண்டாடும் சேலையடி” என்று ‘புதையல்’ என்ற படத்துக்காக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 1957-ல் எழுதிய பாடல் இன்றளவும் கைத்தறி வாரவிழாக்களில் பாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கைத்தறி நெசவாளர்கள், கதர் தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் தங்கள் உடல் உழைப்பில் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த தயாரிக்கும் கைத்தறி, கதர்துணிகளை அணிவதன் மூலம், கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் இந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் பசிப்பிணியை போக்க உதவமுடியும். இந்த நெசவாளர்களின் இன்னல்களைப் போக்கும் விதமாகத்தான், மறைந்த அண்ணா தன் தோளில் கைத்தறி துணிகளைச் சுமந்துகொண்டு, காஞ்சீபுரம் நகரில் வீதிவீதியாகச் சென்று விற்றார். பெருந்தலைவர் காமராஜர் முதல் அனைத்து தேசிய தலைவர்களும் கதர் தவிர வேறு எந்த துணியும் எந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தியது இல்லை. இன்றும் காங்கிரஸ் என்றால் கதர் துணியை அணிவதுதான் ஒரு அடையாளமாக இருக்கிறது.

பா.ஜ.க.வைப் பொருத்தமட்டிலும் பல தலைவர்கள் கதர், கைத்தறி துணிகளையே அணிந்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி கைத்தறி தொழிலுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். என்றாலும், நாகரீக உலகில் இப்போது கைத்தறி, கதர்துணிகளை அணிபவர்கள், விரும்புபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதால், இந்த தொழில்கள் நசிந்துபோய்விட்டது. இந்த தொழிலில் ஈடுபடும் குடும்பங்களுக்கு வேறுவேலை எதுவும் செய்யத்தெரியாது. அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்ட மத்திய அரசாங்கத்தில் பணியாற்றும் 42 லட்சம் ஊழியர்களையும், வாரத்துக்கு ஒருநாள், அதாவது வாரக்கடைசியில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் அணியச்சொல்லலாமா?, அல்லது விருப்பப்பட்டவர்களை மட்டுமாவது அணியச்சொல்லலாமா? என்று மத்திய அரசாங்கம் பரிசீலித்துக்கொண்டு இருக்கிறது.

நாடு முழுவதும் கதர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கு உதவும் வகையில், காதி தொழிலை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக மத்திய அரசாங்க ஊழியர்கள் கைகொடுக்க காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம், மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசாங்க ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு ஆடை வாங்கினால்போதும் விற்பனைபெருகும். ஒருமுறை அணிந்து பார்த்தால் உடலுக்கு இதமாகவும், மனதுக்கு மகிழ்வாகவும் இருக்கும். ஏற்கனவே பல மத்திய அரசாங்க அலுவலகங்களில் மேஜைவிரிப்பு போன்ற துணிவகைகளை கதர்துறையிலேயே வாங்குகிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கதர் நெசவாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். எனவே, கதரும் வேண்டும், கைத்தறி துணியும் வேண்டும் என்றவகையில், இரு தொழில்களையும் வளர்க்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில், மத்திய அரசாங்கத்தோடு விட்டுவிடாமல், அடுத்து ஆட்சிக்குவரும் தமிழக அரசும் கைத்தறி, கதர்தொழிலை வளர்க்க இதுபோன்ற முயற்சிகளை அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் ஊழியர்கள், பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று எல்லோரையும் ஊக்குவிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கைத்தறி வாரவிழாவின்போது, அப்போது கலெக்டராக இருந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவர் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த் ஆகியோர் அந்த ஒருவாரமும் கைத்தறி வேட்டி, சட்டை, சேலை அணிந்து அனைத்து இடங்களுக்கும் வந்ததால், மக்களும் அதை பின்பற்றி அங்கு கைத்தறி விற்பனை அதிகரித்தது. அதுபோல, அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருநாளாவது இந்த ஆடைகளை அணியவேண்டும். ஆனால், கதர், கைத்தறி ஆடைகள் இன்றைய நாகரீக உலகுக்கு ஏற்றவகையில் புதிய டிசைன்கள், புதிய ரகங்களில் இல்லையே என்ற குறை நியாயமான குறையாக இருக்கிறது. அந்த குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கதர், கைத்தறி தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியும், வருமானமும் ஈட்டமுடியும் என்ற நிலையை உருவாக்கமுடியும், கிராமப் பொருளாதாரமும் வலுவடையும்.

No comments:

Post a Comment