Search This Blog

Saturday, March 12, 2016


கடல்வழி சுற்றுலா 08/03/2016

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்பார்கள். ஆனால், நிச்சயிக்கப்படும் திருமணங்கள் எங்கு, எப்படி நடக்கும் என்பதை, அவரவர்தான் முடிவுசெய்கிறார்கள். இப்போதைய இளைஞர்கள் தங்கள் திருமணம் வித்தியாசமான முறையில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகாயத்தில் பறந்துசெல்லும் பலூன்களில் அமர்ந்து, மேகக்கூட்டங்களிடையே திருமணம் செய்வதை சிலர் சாதனையாக நினைக்கிறார்கள். வடநாடுகளில் திருமணம் நடந்தவுடன், மணமக்கள் ஹெலிகாப்டரில் பறந்து மணமகன் வீட்டிற்கோ, மணமகள் வீட்டிற்கோ செல்வதை கவுரவமாக நினைக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில், வெளிநாடுகளைப்போல, கடலில் மிதந்துகொண்டிருக்கும் கப்பலில் திருமணம் செய்வது நிறைய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. ஏனெனில், வெளிநாடுகளில் இத்தகைய சாகச திருமணங்கள் அதிலும் குறிப்பாக, கடலில் செல்லும் படகுகளிலும், கப்பல்களிலும் நடக்கும் திருமணங்கள் நமது இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ‘அந்தநாள் என்று வருமோ’ என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு, நிச்சயமாக முடியும் என்ற நம்பிக்கையை மத்திய கப்பல் துறை அமைச்சகமும், கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரியும் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துமகா சமுத்திரத்திலோ, வங்காள விரிகுடாவிலோ, அரபிக்கடலிலோ செல்லும் சொகுசு கப்பலில் திருமணங்கள் நடத்தும் வசதியை உருவாக்கலாம். அந்த கப்பலிலேயே விருந்துக்கான வசதி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னையிலிருந்து, இதுபோல மும்பைக்கு ஒரு சொகுசுகப்பலை விட்டு, அந்த கப்பலில் இதற்கான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்த தனியார் கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என்று நிதின் கட்காரியே அறிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தமட்டில், 7 ஆயிரத்து 500 கி.மீட்டர் நீளத்திற்கு கடற்கரை இருக்கிறது. இதில் 7-ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதாவது, ஆயிரத்து 76 கி.மீ. நீளகடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. எண்ணூர், சென்னை, தூத்துக்குடி ஆகிய மூன்று பெரிய துறைமுகங்களும், 7 சிறிய துறைமுகங்களும் மற்றும் 10 தனியார் முதலீட்டு துறைமுகங்களும் இருந்தாலும், கடல்வழி போக்குவரத்தையோ, சொகுசு கப்பல் சுற்றுலாவையோ, வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் கடல்வழி சாகச விளையாட்டுகளையோ, கடல்வழி சுற்றுலாவையோ இன்னும் சுற்றுலாத்துறை மேம்படுத்தவில்லை. துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கூட அங்குள்ள சொகுசு படகுகளுக்கு இரவு உணவுக்காக சென்றால், கடலில் மிதந்து கொண்டே பொழுதுபோக்குக்காக பாடல்-நடனங்களையும் பார்க்கமுடியும், நல்ல உணவுகளையும் உண்ணமுடியும் என்ற வகையில், அங்குபோவது கட்டாயம் என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட தற்போது தண்ணீரில் இறங்கும் கடல் விமானத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்தவதற்கான முயற்சிகள் நடக்கிறது. விமானத்தளம் போன்று இந்த கடல் விமானம் வந்து இறங்க தண்ணீர் தளமாக ஒரு இடம் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, ஏற்கனவே கொச்சிக்கும் - லட்சத்தீவுக்கும் இடையே இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும், சுற்றுலாத்துறை அதை சரியாக பயன்படுத்தவில்லை என்ற ஒரு நிலை இருக்கிறது. தேர்தல் முடிந்து அடுத்து ஆட்சிக்குவரும் அரசு, இதில் தீவிர கவனம் செலுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், கடல்வழி விளையாட்டுகள், சொகுசு கப்பல்கள், பயண கப்பல்கள், துபாய் போல மிதக்கும் ஓட்டல்கள் என்று பல கடல்வழி சுற்றுலா வசதிகளுக்கான முயற்சிகளை ஆராய்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். சுற்றுலா என்பது பண்பாட்டு பரிமாற்றம் என்பது மட்டுமல்லாமல், அரசுக்கும் அதிக அளவில் வருமானம் ஈட்டித்தரும் என்பதால், தமிழக அரசின் சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை, சிறு துறைமுகங்கள் துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். இதுபோன்ற சுபகாரியங்களை நடத்தும் சிறிய கப்பல்களை தமிழக சுற்றுலாத்துறையின் சார்பில் விடலாமே!.

No comments:

Post a Comment