Search This Blog

Thursday, March 17, 2016


உணவுக்காக ஒரு வங்கி 18/03/2016

ரத்த வங்கி, தாய்ப்பால் வங்கி என்று பல வங்கிகள், அவை சேகரிக்கும் பொருட்களை இருப்பவர்களிடம் பெற்று தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து வருகிறது. அந்த வகையில் ‘ரொட்டி வங்கி‘ என்ற பெயரில் மராட்டிய மாநிலத்தில் அவுரங்காபாத் என்ற இடத்தில் ஒரு வங்கி இயங்கி வருகிறது. பசியால் வாடும் மக்களுக்கு உணவு தருவதற்காக இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

ஜவுளித்தொழில் செய்து வரும் யூசுப் முகதி என்பவர் தான் இதன் நிறுவனர். பசி நிறைந்த மக்கள் ஒரு புறமும், அத்தகைய மக்களுக்கு உதவும் மனநிலையில் இருக்கும் மக்கள் மறுபுறமும் இருப்பதைக் கண்ட யூசுப். இவர்களை இணைக்கும் விதமாக, இந்த வகை வங்கியை ஆரம்பித்தார். காலை 11 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இந்த வங்கி திறந்திருக்கும்.

பிச்சைக்காரர்களுக்கு இங்கு அனுமதி இல்லை. அவர்களைத் தவிர மற்ற யார் வேண்டுமானாலும் இங்கு வந்து உணவைப் பெற்றுக்கொண்டு போகலாம். பெரும்பாலும் பசியில் வாடும் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இந்த வங்கிக்கு வருகிறார்கள்.  இவர்களுக்கு உணவளிக்க விரும்புபவர்கள், இந்த வங்கியில் அன்னதானம் செய்யலாம். அதற்கென்று ஒரு படிவம் தரப்படும். அதில் உணவளிப்பவரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கொடுத்து உணவையும் தந்துவிட்டு போகலாம். இந்த பெயர் மற்றும் முகவரி கூட உணவின் தரம் பற்றி சொல்வதற்காகத்தான் வாங்குகிறார்கள்.

சிலர் தினசரி வந்து உணவு தருகிறார்கள். சிலர் எப்போதாவது வந்து தருகிறார்கள். அசைவம், சைவம் என்று எந்த வகை உணவையும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி பெறப்படும் உணவு வகைகள் ரொட்டி வங்கியில் தனி உணவுப் பாக்கெட்டுகளில் அடைத்து குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். உணவு என்று பசியோடு  வருபவர்களுக்கு  அதை தருகிறார்கள்.

ஆரம்பத்தில் 250 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கியில், இரண்டே வாரங்களில் உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துவிட்டது. உறுப்பினர்கள் டெபாசிட் செய்யும் உணவு மட்டுமில்லாமல், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்தும் உணவை கொண்டு வந்து தருகிறார்கள். தற்போது தினமும் 500 பேர் இங்கு உணவு பெற்று பயனடைகிறார்கள்.

வங்கியில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு வட்டி கிடைக்கும். ரொட்டி வங்கியில் டெபாசிட் செய்யும் உணவுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று இங்குள்ள உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். அதென்னவோ உண்மைதான்..!

No comments:

Post a Comment