Search This Blog

Wednesday, March 16, 2016


வங்கிக்கடன்  வசூல் 17/03/2016

பொதுவாக ஏழைகள் என்றாலும், பணக்காரர்கள் என்றாலும் சரி, தங்களது அத்தியாவசிய, அவசர தேவைகளுக்காக நிதிநிறுவனங்களிலும், வங்கிகளிலும் கடன் வாங்குகிறார்கள். அது விவசாயி என்றாலும் சரி, பெரும் செல்வந்தர் விஜய் மல்லையா என்றாலும் சரி, வங்கிகளில் கடன் கொடுப்பதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள், விதிகளை ஏற்றுத்தான் கடன் வாங்குகிறார்கள். எனவே, யாராக இருந்தாலும் சரி, கடன் வாங்கும்போது ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், கடனை கண்டிப்பாக திருப்பிக்கட்டவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதை திரும்ப வசூலிப்பதில் மென்மையான அணுகுமுறைகளுக்கு பதிலாக, தேவைக்கு அதிகமாக கெடுபிடி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்தவாரம் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தில் டிராக்டர் வாங்குவதற்காக பாலன் என்ற விவசாயி, ‘கோட்டக் மகேந்திரா’ வங்கியிடம் கடன்பெற்றிருக்கிறார். வாங்கியகடன் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 430. இதற்கு 6 தவணைகளில் வட்டியும் சேர்த்து, ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்து 200 கட்டிவிட்டார். அதன்பிறகும், ‘நீ இன்னும் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 86 கட்டவேண்டும்’ என்று அந்த தனியார் வங்கி நிர்ப்பந்தித்து இருக்கிறது. ‘நெல் அறுவடை முடிந்தவுடன் தந்துவிடுகிறேன்’ என்று அந்த விவசாயி உறுதிமொழி அளித்தும், போலீசாரின் துணையோடு அந்த வங்கி, அவரது டிராக்டரை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல், போலீசாரால் அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளது, எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த காயம் ஆறுவதற்கு முன்பே, மற்றொரு சோகசம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி, டிராக்டர் வாங்க ‘சோழமண்டலம் பைனான்ஸ்’ என்ற ஒரு தனியார் நிதிநிறுவனத்திடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கி, மாத தவணைகளில் ரூ.5 லட்சத்தை கட்டிவிட்ட நிலையில், மீதி தவணைகளைக்கட்ட தாமதம் ஆனதால், அவரை பொதுமக்கள் முன்னால் தாக்கி, டிராக்டரை பறிமுதல் செய்துவிட்டதால், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ஆக, தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களை அரசு ஒழுங்குபடுத்தவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. மேலும், மாநில அரசின் வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும், அரசு வங்கிகளிலும் விவசாயிகள் கடன்பெற கடுமையான நிபந்தனைகள், நடைமுறைகள் இருப்பதால்தான், வட்டி அதிகமாக இருந்தாலும், இதுபோல கேட்டதும் கிடைக்கும் தனியார் நிறுவனங்களை விவசாயிகள் நாடுகிறார்கள். எனவே, அரசு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் கடன்பெறும் முறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

இது ஒருபக்கம் இருக்க, பெரும் செல்வந்தரான விஜய்மல்லையா தொடர்ந்து அவரது நிறுவனங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால், 17 வங்கிகளுக்கு ரூ.9,091 கோடியே 40 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இவர் டெல்லி மேல்-சபை உறுப்பினர். மார்ச் 1-ந் தேதி அவைக்கு வந்திருக்கிறார். இவ்வளவு தொகை கட்டவேண்டிய அவர், எல்லோருக்குமே டிமிக்கி கொடுத்துவிட்டு, மார்ச் 2-ந் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுகமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரிடம் இந்த ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேலும் கட்டவேண்டிய பணத்தை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதுதான் நீதிமன்றம் மட்டுமல்ல, நாடு முழுவதும் கேட்கப்படும் கேள்வியாகும். சாதாரண ஏழை மக்கள் கடன்வாங்கினால் கியாரண்டி, சொத்து அடமானம் கேட்கும் வங்கிகள், இந்த ரூ.9 ஆயிரம் கோடி கடனுக்கும் இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றினவா?, வங்கி அதிகாரிகள் ஏழை-எளிய மக்களுக்கு கடன் வழங்கும்போது பயன்படுத்திய அளவுகோலை பயன்படுத்தினார்களா? என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். வங்கிக்கடன் வழங்குவதில் எளியோருக்கு ஒரு நீதி, வலியோருக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு கூடாது.

No comments:

Post a Comment