Search This Blog

Monday, March 14, 2016


ஸ்கேட்டிங் விளையாட்டில் 6 1/2 வயது சிறுமி சாதனை 14/03/2016
10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்தார்

கோவை,மார்ச்.14-
கோவையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் விளையாட்டில் 6½ வயது சிறுமி, 10½ கிலோ மீட்டர் தூரத்தை 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.

கோவை சிறுமி சாதனை

கோவையை அடுத்த பி.என்.புதூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகள் கே.தர்ஷினி (வயது 6½). இவர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனை செய்யும் நிகழ்ச்சி, கோவை ரேஸ்கோர்சில் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அவர், 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார். அதைத்தொடர்ந்து காஸ்மோ பாலிட்டன் கிளப் வளாகத்தில் சிறுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

விழாவில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன நிர்வாக ஆசிரியரும், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன இந்திய பிரதிநிதியுமான மன்மோகன்ரவாத் கலந்து கொண்டு, சிறுமி கே.தர்ஷினியின் இந்த சாதனை, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்து, அதற்கான சான்றிதழ் வழங்கினார்.

கின்னஸ் சாதனை இலக்கு

இது குறித்து சிறுமி கே.தர்ஷினி கூறியதாவது:-
எல்.கே.ஜி. முதல் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளேன். தற்போது ஸ்கேட்டிங்கில் 10½ கிலோ மீட்டர் தூரத்தை, 41.3 நிமிடங்களில் கடந்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு ஊக்கம் அளித்து வரும் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி தெரிவித்து கொள்கிறேன். கின்னஸ் சாதனை நிகழ்த்துவது எனது லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறுமி கே.தர்ஷினி கணுவாயில் உள்ள யுவபாரதி பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், ஸ்கேட்டிங் மட்டுமின்றி நீச்சல், ஓவியம் வரைவதிலும் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment